ரேபிஸ்டுகளின் கூடாரமா தரமணி பாலிடெக்னிக் வளாகம்? இதுக்கு முன்னாடியும் சம்பவம் நடந்திருக்கு!
சென்னை: சென்னை தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் வைத்து வடமாநில இளைஞர், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தை என குடும்பத்தையே சமூக விரோத கும்பல் ஒன்று படுகொலையை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கல்லூரி வளாகத்தில் இப்படியான சம்பவங்கள் நடப்பது இது முதல் முறை கிடையாது. இதற்கு முன்னரும் கொடூரங்கள் பல நடந்திருக்கிற என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2 தினங்களுக்கு முன்னர், அடையாரில் பைக் ஷோரூம் பக்கத்தில், சாக்கு மூட்டை ஒன்று கிடந்திருக்கிறது. அதிலிருந்து ரத்தமும், துர்நாற்றமும் வீசியதையடுத்து, மூட்டையை கைப்பற்றி போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

மூட்டையில் சடலம்
விசாரணையில், மூட்டையில் இருந்து ஆண் சடலம் என்றும், சடலமாக மீட்கப்பட்டவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. தலை மற்றும் கழுத்தில் வெட்டுக்காயங்கள் இருக்கையில், சடலமாக மீட்கப்பட்டவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர். பிரேதப் பரிசோதனையில் கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவரது பெயர், முகவரியை காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
பாலியல் வன்கொடுமை
இவர் பீகாரை சேர்ந்த கவுரவ் குமார் என்றும், தரமணியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்தடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அவரது மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்றும், அதை தடுக்க முயன்றபோது கவுரவ் குமார் மற்றும் அவரது 2 வயது ஆண் குழந்தை என குடும்பத்தையே மர்ம நபர்கள் கொலை செய்திருக்கிறார்கள் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதற்கு முன்னரும் கொடூரம்
இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பிரதமர் சமீபத்தில் தமிழகத்திற்கு வந்தபோது பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று பேசியிருந்தார். ஆனால், இதனை மறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அப்படியெல்லாம் கிடையாது. தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலம் என்று விளக்கமளித்திருந்தார். இப்படி இருக்கையில்தான் இந்த குடும்ப படுகொலை நடந்திருக்கிறது. அதுவும் இந்த கொலைகள் அனைத்தும் வளாகத்திற்குள்ளேயே நடந்திருக்கிறது என்பதுதான் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
கல்லூரி நிர்வாகம்
பாலிடெக்னிக் வளாகத்திற்குள் இப்படியான சம்பவங்கள் நடப்பது முதல்முறை கிடையாது என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒன்று நடந்தது. தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாகத்தில், மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டிருந்தார். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யவதற்கு பதில், மாணவிக்கு TC கொடுத்து வீட்டுக்கு அனுப்பியது நிர்வாகம்.
சமூக விரோதிகள்
அந்த சம்பவமும் வளாகத்தில்தான் நடந்தது. மார்ச் மாதம் நடந்த சம்பவம் தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரியின் வளாகத்தில் நடந்தது. அதேபோல இரண்டு தினங்களுக்கு முன்பு நடந்த சம்பவம், சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நடந்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு கல்லூரிகள்தான். ஆனால், இரண்டும் CIT கேம்பஸ் எனும் ஒரே வளாகத்தில்தான் இருக்கிறது. இந்த வளாகம் முறையாக பராமரிக்கப்படாமல் இருப்பதால், சமூக விரோதிகளின் கூடாரங்களாக மாறியிருக்கிறது.
நடவடிக்கை எடுக்கப்படுமா?
இங்குள்ள கட்டிடங்களை சீரமைத்து முழுமையான பயன்பாட்டுக்கு கொண்டு வந்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்காது என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இனியும் இதுபோன்ற சம்பவம் நடக்காமல் இருக்க, கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா? என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.












Click it and Unblock the Notifications