டாஸ்மாக் முறைகேடு வழக்கில் ஜாமீன் மனு.. காவல்துறைக்கு ஐகோர்ட் போட்ட உத்தரவு!
சென்னை: டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக்கின் ஜாமீன் மனுவிற்கு பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல் செய்தது, பார் உரிமம் வழங்கியது, மதுபானங்களை கடைகளுக்கு கொண்டு செல்ல போக்குவரத்து டெண்டர் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட 7 பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.

செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் நிா்வாக இயக்குநா் எஸ்.விசாகன், முன்னாள் அதிகாரிகள் டி.ராமதுரை முருகன், ஆா்.பன்னீர்செல்வம், செந்தில் பாலாஜியின் உதவியாளா் பாஸ்கர், ஐபிஎஸ் அதிகாரியின் சகோதரரான ரத்தேஷ் ராஜ், சண்முகவேல், எஸ்.காா்த்திக் என்கிற முலனூா் காா்த்திக் ஆகிய 7 போ் மீது ஊழல் ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்திக், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதி லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்த போது, மனுவிற்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என காவல்துறை தரப்பில் ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஜான் சத்யன் கோரினார்.
மனுதாரர் கார்த்திக் தரப்பில், குதிரை பேர வழக்கில் ஜாமீன் பெற்று விடுதலையான நாளில், இந்த வழக்கில் கைது செய்துள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து மனுவிற்கு காவல்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 25 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தார்.


Click it and Unblock the Notifications
