தமிழ்நாட்டில் டாஸ்மாக் காலியாகுதா? மதுக்கடைகள் குறையுதா? மதுவிலக்கு சாத்தியமா? அரசு சொல்வது என்ன
சென்னை: தமிழகத்தில் மதுவிலக்கு சாத்தியமா? சாத்தியமில்லையா? என்பது குறித்து அரசு பதிலளித்துள்ளது. அது என்ன?
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் உயிரிழப்பு சம்பவமானது, தமிழகத்தையே நிலைகுலைய வைத்துவிட்டது.. அரசு நிர்வாகத்தின் தோல்வியே காரணம் என்றும், டாஸ்மாக் கடைகளை அரசு ஏற்று நடத்தினாலும் இப்படியான சோகங்கள் தொடர்ந்துக்கொண்டுதான் இருக்கிறது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியும், கவலை தெரிவித்தும் வருகின்றன.

டாஸ்மாக்: டாஸ்மாக் கடைகளில் குவாட்டர் பாட்டில்கள் ரூ.100-க்கும் மேலாக விற்கப்படுவதால்தான், கூலி வேலை செய்பவர்களால், அதை வாங்கி குடிக்க முடியாமல், கள்ளச்சாராயம் குடித்து இறப்பதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
இதையடுத்து, கள்ளச்சாராய சாவுகளை தடுக்கும் நோக்கத்துடன் 90 மிலி மதுவை காகிதக் குடுவைகளில் அடைத்து விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும், இதற்கான கருத்துரு தமிழக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளிதழில் சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியாகியிருந்தது. இதற்கும் பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்புகளை தெரிவித்தன.
மதுப்பழக்கம்: காரணம், சிறிய அளவில் பாக்கெட் மதுவை விற்றால், குறைந்த அளவில் குறைந்த விலையில் கிடைப்பதால், புதிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையும் அதிகமாகும் என்பதுடன், சிறுவர்களின் மதுப்பழக்கததிற்கு அடிமையாகும் என்று கவலை தெரிவிக்கின்றன..
"மதுபானத்தை அரசே விற்பதால் மது அருந்துவதை குற்றமாக கருத முடியாது" என்று சென்னை ஹைகோர்ட் கூறியிருந்தாலும், டாஸ்மாக்குக்கு எதிரான கண்டனங்கள் வலுத்தபடியே உள்ளன. முழு மதுவிலக்கு அமலுக்கு வரவேண்டும் என்றுதான் மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்களே தவிர, விலை குறைப்பை அல்ல என்றும் கோரிக்கைகள் வெடித்துள்ளன.
வாசன்: அந்தவகையில், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனும் இதுகுறித்து தன்னுடைய கருத்துக்களை கூறியிருக்கிறார். திருப்பூரில் செய்தியாளர்களிடம் வாசன் சொன்னதாவது:
"தமிழகத்தில் சட்டம், ஒழுங்கை கட்டுப்படுத்த முடியாத அரசாக திமுக அரசு செயல்படுகிறது. காவல்துறையின் கைகள் பல நேரங்களில் கட்டப்பட்டுள்ளது என்பதற்கு அரசு பதிலளிக்க வேண்டும்... தமிழக அரசு பல பெரிய குற்றங்கள் நடந்த பிறகு, நடவடிக்கை எடுக்க நினைப்பது என்பது என்பது, செயல் திறனற்ற அரசு என்பதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்கள் இன்னமும் தொடர்கிறது.
டாஸ்மாக் கடைகள்: டாஸ்மாக் கடைகளை குறைக்க அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கையை இதுவரை மேற்கொள்ளவில்லை. வருமானத்தை பெருக்க, மக்கள் மேலும் குடிப்பதற்கு அரசு உடந்தையாகவே இருந்து வருவது வேதனையானது. கள்ளச்சாராயம், போதைப்பொருட்களுக்கு மாணவர்களும், கிராமப்புறத்தை சேர்ந்தவர்களும் அடிமையாகி உயிர்பலி அதிகரித்துள்ளது...
கள்ளக்குறிச்சியில் நடந்த சம்பவம் இனியும் நடைபெறாமல் தடுக்கஆக்கப்பூர்வமான நடவடிக்கையை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அந்தவகையில், தமிழக அரசின் செயல்பாட்டை மக்கள் கூர்ந்து கவனித்து வருகிறார்கள்.. அதிலும், சமீபத்தில் தேசிய கட்சியின் மாவட்ட மற்றும் மாநில தலைவர்கள் தமிழகத்தில் கொலையானது மக்களை பீதியடைய செய்துள்ளது.
வாசன்: இந்த ஆண்டு, தமாக சார்பில் காமராஜர் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் வருகிற 14-ந் தேதி மாலை திருச்சி உழவர் சந்தை அருகே நடக்கிறது. தமிழக தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்கள்" என்றார் மூத்த தலைவர் ஜிகே வாசன்.
இதனிடையே, டாஸ்மாக் கடைகளை உடனே குறைக்க முடியாது என்றும், படிப்படியாக மதுவிலக்கு நோக்கம் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, டாஸ்மாக் மதுகடைகளை மூடுவது தொடர்பாக சொன்னதாவது:
மதுக்கடைகள்: "500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடியுள்ளது... இன்னும் 1000 கடைகளை மூடுவதாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது. அதில் நடைமுறை சிக்கல் உள்ளது. மக்களை அதற்கு நாம் தயார் செய்ய வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும். மதுப்பழக்கம் உள்ளவர்களை அதிலிருந்து விடுபட வைக்கும் நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.
படிப்படியாக மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்பதுதான் நம்முடைய நோக்கமாக இருந்து வருகிறது.. அதற்கான நடவடிக்கையை அரசு எடுக்கும்... கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போது எதுவும் சொல்ல முடியாது" என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications