நாடே கொண்டாடும் காலை உணவு திட்டம்.. ஆனால் ஆசிரியர்கள் மத்தியில் முணுமுணுப்பு! இப்படி ஒரு பிரச்சனையா?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதலமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள சூழலில், ஆசிரியர்கள் மத்தியில் முணுமுணுப்புகள் எழுந்து வருகின்றன. என்ன காரணம்?
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டம் நேற்று முதல் மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் நேற்று திருக்குவளையில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினார். தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் நேற்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 17 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிட்டு பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளியில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான காலை உணவு திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதை பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் வரவேற்றுள்ளனர். மாணவர்களின் வயிற்றுப் பசி போக்கி, அறிவு புகட்டும் திட்டத்தை மாநிலம் முழுமைக்கும் செயல்படுத்தியுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், ஆசிரியர்கள் மத்தியில் ஆங்காங்கே முணுமுணுப்புகள் எழுந்துள்ளன. ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், இத்திட்டத்தால், தங்களுக்கு பணிச்சுமை அதிகரித்துள்ளதாக தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் குமுறல்களை வெளிப்படுத்தியுள்ளனர். ஆசிரியர்கள் சிலரது பதிவுகள் அதிகமாக பகிரப்பட்டு விமர்சனங்களுக்கும் உள்ளாகி வருகின்றன.
தொடக்கப் பள்ளியில் காலை சிற்றுண்டி திட்டத்தை கண்காணிக்கும் பொறுப்பை ஆசிரியர்களிடம் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் எல்.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் சமூக நீதியை பேணும் வகையிலும் ஏழை, எளிய நடுத்தர மாணவர்களின் பசியை போக்கும் வகையிலும், அந்த மாணவர்களின் கல்வி நலனுக்காக காலை சிற்றுண்டி உணவு திட்டம் என்ற சீரிய திட்டத்தை கொண்டு வந்துள்ளதற்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேநேரத்தில், அந்த திட்டத்தை கண்காணிக்க பள்ளி ஆசிரியர்களை காலை 7 மணிக்கு பள்ளிக்கு வர வேண்டும் என பல இடங்களில் சுற்றறிக்கையாகவும், வாய்மொழியாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, தமிழ்நாடு தொடக்கக் கல்வியில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும், இ.எம்.ஐ.எஸ், பயிற்சிகள், மாணவர்களின் நல திட்டங்கள், விளையாட்டுப் போட்டிகள், மாணவர் மன்றங்கள், புள்ளி விவரங்கள் தருதல் என பல்வேறு விதமான பணிகள் வழங்கப்படுகின்றன. இந்த பணிகளுக்காக ஒவ்வொரு பள்ளியிலும் ஒரு சிறப்பு கணினி ஆசிரியரை நியமிக்க வேண்டும் என நாங்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறோம்.
இந்நிலையில், காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை கண்காணிக்க ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால், கற்பித்தல் பணிகள் பாதிக்கப்படும். காலை சிற்றுண்டி உணவு திட்டத்தை சத்துணவு அமைப்பாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த பணியில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications