காலையிலேயே சென்னை மக்களுக்கு ஷாக்.. மெட்ரோ ரயில் சேவையில் தாமதம்! பச்சை வழித்தடத்தில் வந்த சிக்கல்!
சென்னை: தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் செயின்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நேரடி ரயில் சேவை 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுவதாக சென்னை மெட்ரோ கூறியுள்ளது.
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கம் காரணமாக சென்னை மாநகரம் திணறி வருகிறது. மக்கள் தொகையோடு வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் போக்குவரத்தின நெரிசல் அதிகரித்து வருகிறது.
இதன் காரணமாக சென்னைவாசிகள் பொது போக்குவரத்தை பயன்படுத்துவதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளனர். அந்த வகையில் சென்னை மாநகர போக்குவரத்து கழகம், மின்சார ரயில் சேவை மற்றும் மெட்ரோ ரயில் சேவையானது வழங்கப்படுகிறது.

தற்போது சென்னையில் நீலம் மற்றும் பச்சை வழித்தடங்களில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் சென்னை விம்கோ நகரில் இருந்து சென்னை விமான நிலையம் வரையிலும், பச்சை நிற வழித்தடத்திலும் சென்னை சென்ட்ரல் முதல் செயின்ட் தாமஸ் மவுண்ட் வரையிலும் ரயில்கள் இயக்கப்படுகிறது. தற்போது சென்னை எழும்பூர் விமான நிலையம், கிண்டி, சைதாப்பேட்டை, கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும் மெட்ரோ ரயில்களில் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. மேலும் பல புறநகர் பகுதிகளில் மெட்ரோ ரயில் வசதிகள் இல்லாததால் இரண்டாம் கட்டமாக தற்போது பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது சுமார் 63 ஆயிரத்து 466 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 118 கிலோ மீட்டர் தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் இந்த மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.
இது ஒரு புறம் இருக்க சென்னை மெட்ரோ ரயில் சேவையில் அடிக்கடி பிரச்சினை எழுந்து வருகிறது. கடந்த ஜூன் 20 ஆம் தேதி விம்கோ நகர் - டோல்கேட் மெட்ரோ நிலையம் இடையே தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இந்த நிலையில் இன்று காலை பச்சை வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவை தாமதம் ஏற்பட்டுள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
இது தொடர்பாக வெளியாகி உள்ள அறிவிப்பில்," கோயம்பேடு மற்றும் அசோக் நகர் இடையே தொழில்நுட்ப கோளாறு காரணமாக, செயிண்ட் தாமஸ் மவுண்ட் மற்றும் சென்னை சென்ட்ரல் இடையே நேரடி ரயில் சேவை
நிலையங்கள் 24 நிமிட இடைவெளியில் இயக்கப்படுகின்றன. இருப்பினும், சென்னை சென்ட்ரல் மற்றும் கோயம்பேடு இடையேயும், அசோக் நகர் மற்றும் செயிண்ட் தாமஸ் மவுண்டிலிருந்தும் வழக்கமான சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது. நீல வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவைகள் அட்டவணைப்படி இயங்குகின்றன. எனவே, பயணிகள் தங்கள் பயணத்தை அதற்கேற்ப திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வருந்துகிறோம்" என சென்னை மெட்ரோ நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications