"ஆளுநர்களே வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம்?" முரசொலி விமர்சனத்திற்கு ஆளுநர் தமிழிசை பதில்
சென்னை: ஆளுநர்கள் குறித்து விமர்சித்து திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலி வெளியிட்டுள்ள அறிக்கைக்கு தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பதில் கொடுத்துள்ளார்.
நாடு முழுவதும் இருக்கும் பல்கலைக்கழகங்களில் சம்மந்தப்பட்ட ஆளுநர்களே வேந்தர்களாக உள்ளனர். இருப்பினும், ஆளுநருக்குப் பதிலாக முதல்வரை வேந்தராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை சில மாநிலங்களில் எழுந்து உள்ளது.
இது தொடர்பான சட்டத் திருத்தங்களும் கூட மேற்கு வங்கம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விமர்சனம்
இந்தச் சூழலில் ஆளுநர்கள் வரம்பு மீறுவதால் வரும் வம்புகள் என்ற தலைப்பில் திமுக அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் கட்டுரை ஒன்று வெளியாகி இருந்தது. அதில் மாநில ஆளுநர்கள் பல்கலைக்கழக வேந்தர்களாகச் செயல்படுவது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு இருந்தது. மேலும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் குறித்தும் சில காட்டமான விமர்சனங்கள் இருந்தது.

ஆளுநர் தமிழிசை
இந்நிலையில், இதற்குப் பதில் அளிக்கும் வகையில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர், "ஆளுநர்கள் வேந்தர்களாகப் பல்கலைக்கழகங்களை மேம்படுத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று நான் கூறியது என் அனுபவத்தை வைத்துத்தான். ஆளுநர்கள் ஆக்கப்பூர்வமாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். தெலுங்கானா ஆளுநராக வேந்தர் பொறுப்பிலிருந்து தெலுங்கானா பல்கலைக்கழகங்களை மேம்படுத்த நான் மேற்கொண்ட பணிகளைக் குறிப்பிட விரும்புகிறேன்.

பதிலடி
1. ஆளுநராகப் பதவியேற்றவுடன் தெலங்கானா மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடத்தும் போதுதான் தெரிந்தது அங்கே 12 பல்கலைக்கழகங்களில் பல ஆண்டுகளாகத் துணைவேந்தர் பதவிகள் காலியாக இருப்பது தெரிய வந்தது. இருந்தாலும் பொறுப்பு IAS அதிகாரிகளை அழைத்து அவர்களுடைய பணி நிர்வாகம் குறித்து ஆய்வுக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதேபோல் இரண்டு முறை பல்கலைக்கழக ஆய்வு மாநாடு நடத்தப்பட்டது.
அவ்வப்போது தெலங்கானா முதலமைச்சருக்கு பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள் குறித்தும் காலியாக உள்ள துணை வேந்தர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று தகவல் அனுப்பப்பட்டும், கடிதம் வாயிலாகத் தகவல் தெரிவிக்கப்பட்டும். நேரிலும், பொது வெளியிலும் வற்புறுத்திய பின்னர் எனது தொடர் முயற்சியால் சுமார் 2 வருடங்களுக்குப் பின்பு 12 பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய கல்வி கொள்கை
2. புதிய கல்விக் கொள்கை அறிமுகம் பற்றிய விவாதங்களையும்,விழிப்புணர்வையும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஏற்படுத்தியது.
3. தெலங்கானாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களிலும் விரிவான சுய ஆய்வறிக்கை வேண்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பல்கலைக்கழகங்களுக்கும் மூன்று மணி நேரம் ஒதுக்கி அனைத்து பல்கலைக்கழகங்களையும் 1 மாத காலம் ஆய்வு செய்து பல்கலைக்கழகங்களின் தேவைகள், குறைகள் மற்றும் சாதனைகளைப் பட்டியலிட்டு அதன் அறிக்கைகளை உயர் கல்வித் துறைக்கும், முதலமைச்சருக்குப்ம் அனுப்பி வைத்தது.
பல்கலைக்கழகங்களைத் தரவரிசைப்படுத்தும் பெங்களூர் NAAC சென்டருக்கு நேரடியாகச் சென்று தெலங்கானா பல்கலைக்கழகங்களின் தர ஆய்வறிக்கையை நேரடியாகப் பெற்று தெலங்கானா முதலமைச்சருக்கு அனுப்பி வைத்து பல்கலைக்கழகங்களை மேம்படுத்த முன்னின்றது.

ஆன்லைன் கல்வி
5. கொரோனா முதல் அலையின் போது மாணவர்களின் கற்றல் தடைப்படாத வண்ணம் நாட்டிலேயே முன்னோடியாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஆன்லைன் வகுப்புகளை ஆரம்பித்து வைத்தது.
6. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் முன்னாள் மாணவர்களின் பட்டியலை எடுத்து பல்கலைக்கழகங்கள் முன்னாள் மாணவர்களுடன் ஒரு தொடர்பு ஏற்படுத்தி பல்கலைக்கழகங்களின் வளர்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி முன்னெடுத்துச் செல்வது.
7.பல்கலைக்கழகங்களில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசுக்குக் கோரிக்கை வைத்து பணியிடங்களை நிரப்பச்செய்தேன்" என்று பல்வேறு நடவடிக்கைகளை ஆளுநர் பட்டியலிட்டுள்ளார்.

அங்கொன்றும் இங்கொன்றுமாக
அறிக்கையில் மேலும் அவர் கூறுகையில், "கடந்த 40 ஆண்டுகளில் நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில பல்கலைக்கழகங்களில் நடைபெற்ற தனி நபர் தவறுகளையும் பட்டியலிட்டு எல்லா ஆளுநர்களும் தவறு செய்வதைப் போன்ற ஒரு தோற்றத்தைக் கற்பிக்க முயல்வது தவறான முன்னுதாரணம். ஆளுநர்களைப் பற்றி நீங்கள் கூறிய தவறுகளும் குற்றச்சாட்டுகளும் அமைச்சர்கள் தொடங்கி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல பிரபலங்கள் மீது பல குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு இருக்கின்றன.

ஆளுநர்கள் வேண்டாம் என சொல்லலாமா
அதனால் மாநிலத்தில் அரசியல் சாசனத்தைக் கண்காணிக்கும் ஆளுநர்களே வேண்டாம் என்பது எந்த விதத்தில் நியாயம்? ஆளுநர்கள் பல்கலைக்கழக பணிகளை வேந்தர்களாக எந்த வித விருப்பு, வெறுப்பின்றி முதலமைச்சருக்கு தோளோடு தோள் நின்று கல்விப் பணியாற்றுவதே சாலச்சிறந்தது. பல்கலைக்கழக நிர்வாகத்தையும் மாநில முதலமைச்சரே ஏற்றுக்கொண்டால் ஏற்கனவே இருக்கும்,

அரசியல் சார்ந்ததாகவிடும்
ஆட்சி பணியோடு வேந்தர் பணியையும் ஏற்றுக்கொண்டால் அதுவும் கட்சி பணி ஆகி விடும் என்ற வகையில் மாணவர்களுக்கு வழிகாட்டியாக ஆளுநர்கள் வேந்தர்களாக செயலாற்றுகிறார்கள். இது அரசியலமைப்பு சட்டப்படி காலங்காலமாக ஆளுநர்களுக்கு அளிக்கப்பட்ட உரிமையாகும். இது மாற்றப்பட்டால் பல்கலைக்கழக நியமனங்களும் அரசியல் சார்ந்ததாக ஆகி விடும். எனவேதான் அரசியலமைப்பு சட்டம் பல பிரிவுகளையும், கண்காணிக்கும் கடமையையும் ஆளுநர்களுக்கு வழங்கி இருக்கிறது.

தமிழகத்தின் மகள்
ஆளுநர்கள் ஆக்கப்பூர்வமான வேந்தர்களாக செயலாற்றுவதை வேண்டுமென்றே சிலர் அரசியலாக்கி வருகிறார்கள் என்பதே எனது கருத்து. வேறு மாநிலத்தின் ஆளுநராக இருந்தாலும் தமிழகத்தை பொருத்தமட்டில் தமிழகத்தின் மகளாக சில நியாயமான கருத்துக்களைத் தெரிவிக்க உரிமை உள்ளது என்று எண்ணுகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications