ஆளுநர் ரவியுடன் தமிழிசை திடீர் சந்திப்பு.. "தமிழை போற்றினால் காவியையும் போற்ற வேண்டும்" என பேட்டி!
சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கிண்டி ராஜ்பவனில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்துப் பேசினார்.
நாட்டில் பல மாநிலங்களில் ஆளும் கட்சிக்கும் மாநில ஆளுநர்களுக்கும் தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது.
குறிப்பாக பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில், உள்ள ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் செயல்பட விடாமல் முடக்குவதாக அரசியல் கட்சியினர் புகார் அளித்துள்ளனர்,

நீட் தீர்மானம்
அப்படி தான் தமிழக ஆளுநராக உள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே தொடக்கம் முதலே மோதல் நிலவி வருகிறது. நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தை முதலில் அவர் சபாநாயகருக்குத் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நீண்ட தாமதத்திற்குப் பின்னரே இப்போது குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு நீட் தேர்வு விலக்கு தீர்மானம் அனுப்பப்பட்டுள்ளது.

ஆர்.என்.ரவி - தமிழிசை சந்திப்பு
இந்தச் சூழலில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று சந்தித்துப் பேசினார். அடுத்து நடைபெறும் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்தும் பல்வேறு யூகங்கள் கிளம்பி உள்ள நிலையில், ஆளுநர்கள் ஆர்.என்.ரவி தமிழிசை சவுந்தரராஜன் சந்திப்பு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.

தமிழைப் போற்றினால்
இந்தச் சந்திப்பிற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், காவித் தமிழாகவே தமிழ் வளர்ந்தது என்றும் கருப்புத் தமிழாக வளரவில்லை என்றும் தெரிவித்தார். மேலும், தமிழைப் போற்றினால் காவியையும் போற்ற வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேபோல ஆதீனங்கள் இல்லாமல் தமிழ் வளர்ச்சி இல்லை என்ற ஆளுநர் தமிழிசை, தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரத்தில் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் தெரிவித்தார்.

தருமபுரம் ஆதீனம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் தருமபுரம் ஆதீன மடத்தில் ஆண்டுதோறும் தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெறும், இதனிடையே இந்த ஆண்டு நடைபெறும் தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்வதற்குத் தடை விதித்து மயிலாடுதுறை கோட்டாட்சியர் பாலாஜி உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications