தமிழ்நாட்டில் எடுபடாத டெல்லி பார்முலா! RTIஐ முடக்க பார்த்து பல்டி அடித்த விஜய்! பின்னணி திட்டம் என்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கடைப்பிடித்து வரும் ஒரு முக்கிய உத்தி,, அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்களும் ஊடகங்களும் கேள்வி கேட்க முடியாதபடி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை (RTI) கொஞ்சம் கொஞ்சமாக முடக்குவது.

தலைமைத் தகவல் ஆணையர் பணியிடங்களை நிரப்பாமல் விடுவது, சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து அதிகாரத்தைக் குறைப்பது, பாதுகாப்பு என்ற போர்வையில் பல துறைகளை RTI வரம்பிலிருந்து வெளியேற்றுவது என டெல்லியில் வெற்றிகரமாக அரங்கேற்றப்பட்ட அதே வெளிப்படைத்தன்மையற்ற அரசியலை, தமிழ்நாட்டிலும் பரிசோதனை செய்து பார்க்க தமிழக வெற்றிக் கழக அரசு முயன்றதா என்ற காரசாரமான கேள்வி இப்போது எழுந்துள்ளது.

vijay rti tvk

ஆனால், தமிழகத்தின் அரசியல் களம் வேறு, சமூக விழிப்புணர்வு வேறு என்பதை உணர்த்தும் வகையில், ஒரே நாளில் எழுந்த மக்கள் எதிர்ப்பைக் கண்டு அந்த அரசாணையைத் திரும்பப் பெற்று பின்வாங்கியுள்ளது விஜய் அரசு.

கள நிலவரத்தை சோதித்துப் பார்த்ததா தவெக அரசு?

அரசியலில் 'Testing the Waters' என்பார்கள். அதாவது ஒரு சர்ச்சைக்குரிய கொள்கையை சட்டமாகப் பிறப்பித்து, மக்கள் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள், எதிர்க்கட்சிகள் எவ்வளவு தூரம் எதிர்க்கிறார்கள் என்று உளவு பார்த்துவிட்டு, எதிர்ப்பு வலுத்தால் நைசாகப் பின்வாங்குவது வழக்கம்.

செப்டம்பர் 21-ஆம் தேதி சத்தமில்லாமல் மனிதவள மேலாண்மைத் துறை மூலமாக அரசாணை எண் 57-ஐ அரசு வெளியிட்டது. அதில், பொதுத்துறையின் கீழ் இயங்கும் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவை "உளவு மற்றும் பாதுகாப்பு அமைப்பு" என்று முத்திரை குத்தி, RTI சட்டப்பிரிவு 24(4)-இன் கீழ் அதற்கு முழு விலக்கு அளிக்கப்பட்டது.

இதன் நோக்கம் மிகத் தெளிவானது:

காவல் துறையின் அத்துமீறல்கள், போலி என்கவுண்டர்கள்
லாக்கப் மரணங்கள் மற்றும் சித்திரவதைகள் மீதான விசாரணை அறிக்கைகள் (PSO 151)
சாதி மோதல்கள், விவசாயிகள் மற்றும் மாணவர்கள் போராட்டங்கள் தொடர்பான அரசு நடவடிக்கைகள்
ஆகியவற்றை மக்களின் பார்வையில் படாமல் ரகசிய அறைக்குள் பூட்டி வைப்பதுதான்.

பாஜக அரசு டெல்லியில் அமலாக்கத்துறை, உளவுத்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளை RTI வரம்பிலிருந்து பாதுகாப்பது போல், இங்கும் சட்டம் ஒழுங்கு என்ற பெயரில் கோட்டை ரகசியங்களைப் பூட்டிவிடலாம் என்று விஜய் அரசு கணக்குப் போட்டது.

தமிழ்நாட்டில் அந்தப் பருப்பு வேகாது என்பதை உணர்த்திய எதிர்வினை!

ஆனால், வடமாநிலங்களில் நடப்பது போல் தமிழ்நாட்டில் மக்களின் உரிமைகளை எளிதில் முடக்கிவிட முடியாது என்பதை தவெக அரசு மிகக் குறுகிய நேரத்தில் புரிந்துகொண்டது. அரசாணையின் விவரங்கள் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் கசிந்த சில மணி நேரங்களிலேயே, அரசு எதிர்பாராத அளவுக்கு பயங்கர எதிர்ப்பு அலை எழுந்தது:

1. கூட்டணிக் கட்சிகளே கொதித்தெழுந்தன: அரசுக்கு ஆதரவளிக்கும் இடதுசாரி கட்சிகள் உள்பட முக்கிய அரசியல் கட்சிகள், "இது பாசிசப் போக்கு; வெளிப்படைத்தன்மையின் குரல்வளையை நெரிக்கும் செயல்" என உடனடியாக வீதியில் இறங்கின.

2. சமூக ஆர்வலர்களின் சாட்டை: அறப்போர் இயக்கம் உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள், "மக்களுக்குப் பதில் சொல்ல பயப்படும் அரசா இது?" என்று அடுக்கடுக்கான சட்டக் கேள்விகளை முன்வைத்து நீதிமன்றப் படியேறத் தயாராகின.

3. அரசியல் முரண் அம்பலமானது: சில மாதங்களுக்கு முன்பு வரை லாக்கப் மரணங்களுக்கு எதிராகப் போராட்டம் நடத்திய விஜய், இப்போது அதே லாக்கப் மரண அறிக்கைகளை RTI-ல் இருந்து மறைக்கப் பார்க்கிறார் என்ற விமர்சனம் சமூக ஊடகங்களை உலுக்கியது.

நிலைமை கைமீறிப் போவதையும், தங்களின் 'வெளிப்படையான அரசியல்' என்ற முகமூடி கிழிந்து தொங்குவதையும் உணர்ந்த தலைமைச் செயலகம், மாலையிலேயே அவசர அவசரமாக அந்த அரசாணையை ரத்து செய்து பின்வாங்கியது.

விஜய் அரசு கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்

மத்திய பாஜக அரசின் பாணியில் நிர்வாகத்தை மூடுமந்திரமாக மாற்றி, கேள்விகளற்ற அதிகாரத்தைக் கட்டமைக்கலாம் என விஜய் அரசு நினைத்திருந்தால், அதற்குத் தமிழ்நாடு தகுந்த பாடம் புகட்டியுள்ளது. தமிழ்நாடு என்பது தந்தை பெரியார், அண்ணா காலத்திலிருந்தே அதிகாரத்தைக் கேள்வி கேட்கும் பகுத்தறிவுப் பாரம்பரியம் கொண்ட மண்.

இங்கு ஒரு அரசாங்கம் தவறு செய்தால், அது புதிய கட்சியாக இருந்தாலும் சரி, சினிமா செல்வாக்கு கொண்ட தலைவராக இருந்தாலும் சரி, சலுகை காட்டாமல் உரிமைகளுக்காக மக்கள் குரல் கொடுப்பார்கள். RTI விலக்கு விவகாரத்தில் அரசு பின்வாங்கியது மக்கள் ஜனநாயகத்திற்குக் கிடைத்த வெற்றி என்றாலும், எதிர்காலத்தில் அதிகார துஷ்பிரயோகம் செய்வதற்கான முயற்சிகள் மீண்டும் வேறு வடிவில் வராமல் தடுக்க மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்பதையே இந்த ஒத்திகை உணர்த்துகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+