இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு சில நாட்கள் முன்பு.. செப்.28ல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்கம்
சென்னை: 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்ட தொடக்க விழாவுக்கான புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் செப்.28ல் தொடங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய்யின் லண்டன் பயணம் காரணமாக, செப்.15ல் நடைபெற இருந்த தொடக்க விழா ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.
அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ஆண்டுக்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்திற்காக டெண்டர் விடப்பட்டு, தற்போது, திட்டம் தொடங்கி வைக்கப்பட உள்ளது. வரும் 28 ஆம் தேதி, தமிழக முதல்வர் விஜய், 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்
இதுகுறித்து தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "முதல்வர் ச.ஜோசப் விஜய் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்கம் மற்றும் செயல்படுத்துதல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசு தாய்-சேய் நலனை மேம்படுத்துவதற்கு மிகுந்த முன்னுரிமை அளித்து வருகிறது. கர்ப்பிணிப் பெண்களுக்கு நிதியுதவி, இலவச பிரசவம் மற்றும் புதிதாகப் பிறந்த குழந்தை பராமரிப்பு சேவைகள், அவசர மகப்பேறு சிகிச்சை, ஊட்டச்சத்து அளித்தல், பிரசவத்திற்காக மருத்துவமனையைத் திட்டமிடும் முறை, கர்ப்பிணி மற்றும் குழந்தைகள் கூட்டுக் கண்காணிப்பு மற்றும் மதிப்பீடு மென்பொருள் (PICME) உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டு மாநிலத்தில் தாய்-சேய் நலக் குறியீடுகள் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்ந்த சேவைகளில் மக்களின் நம்பிக்கையை மேலும் வலுப்படுத்தும் நோக்கிலும், தமிழர் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தில், தாய்மாமன் சீர்மரபைப் பிரதிபலிக்கும் வகையிலும் வெற்றித் தமிழகம் தொலைநோக்குத் திட்டத்தின்படி, அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளைச் சிறப்பிக்கும் வகையில் "தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்" என்ற சிறப்பு நலத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், 22.06.2026 அன்று முதல் அரசு மருத்துவமனைகளில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்கமோதிரம் வழங்கப்படும். இதற்கான அரசாணை 23.06.2026 அன்று வெளியிடப்பட்டது.
7.80 லட்சம் குழந்தைகளுக்கு
தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 7.80 லட்சம் குழந்தைகள் பிறக்கின்றன. இவற்றில் 99.9 சதவீத பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன என்று தேசிய குடும்ப நலக் கணக்கெடுப்பு-6ல் (National Family Health Survey-6) பதிவாகியுள்ளது. இவற்றில் 4.20 இலட்சம் பிரசவங்கள் (53%) அரசு மருத்துவமனைகளில் நிகழ்கின்றன. அதில் 90 சதவீதம் சீமாங் மையங்களில் (CEMONC Centres) நடைபெறுகின்றன. இதன்மூலம், பாதுகாப்பான பிரசவம் மற்றும் ஆரோக்கியமான குழந்தைகளின் பிறப்பை உறுதி செய்வதில் பொது சுகாதார அமைப்பு முக்கியப் பங்கு வகிக்கிறது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் ஒரு கிராம் எடை கொண்ட தங்க மோதிரம் வழங்கப்படும். அதற்கென தனித்துவமான வரிசை எண்ணும் (Unique Serial Number), சேதப்படுத்த முடியாத பாதுகாப்புப் பெட்டகமும் (Tamper-proof Packaging) வழங்கப்படும். இத்திட்டத்திற்காக முதல் தவணையாக 1,28,000 தங்கமோதிரங்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் நிரந்தரமாக வசிக்கும் தாய்மார்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவார்கள். PICME-யில் பதிவு செய்யப்பட்டு RCH அடையாள எண் (RCHID) பெற்றிருக்க வேண்டும்.
தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்
இத்திட்டம் முதல்வரால் செப். 28 ஆம் தேதி தொடங்கி வைக்கப்படவுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் 22.06.2026 முதல், திட்டம் தொடங்கப்படும் நாள் வரை பிறக்கும் குழந்தைகளுக்கு 107 மையங்களில் (Hubs) தினமும் 100 குழந்தைகள் வீதம் 28.09.2026 முதல் வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இத்திட்டம் முதல்வரால் தொடங்கப்படும் நாளிலிருந்து அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கு மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பும்போது தங்க மோதிரம் வழங்கப்படும்.
இத்திட்டம், அரசு மருத்துவ சேவைகளில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதோடு, மருத்துவமனைகளில் பாதுகாப்பான பிரசவமுறையை ஊக்குவிப்பதாகவும், தாய்-சேய் நலப் பாதுகாப்பை வலுப்படுத்துவதாகவும், குழந்தை நலனில் அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடைத்தேர்தலுக்கு முன்பாக
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், தவெகவின் முக்கியமான வாக்குறுதிகளில் ஒன்று. விரைவில் 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள சூழலில் இந்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றுகிறார் முதல்வர் விஜய். வரும் அக்டோபர் 6 ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், அதற்கு முன்னதாக தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்கிறார் விஜய். இது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications
