Vijay: ஆள் வைத்து தவெக மீது பொய் பரப்புகிறார்கள்- விஜய் கடும் விமர்சனம்
சென்னை: தவெகவுக்கான மக்கள் ஆதரவை கண்டு அஞ்சி, எங்கள் மீது ஆள் வைத்து பொய்யை பரப்புகிறார்கள் என அக்கட்சியின் தலைவர் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தவெக விஜய் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு, வணக்கம்.

"வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" என்ற நம் மக்கள் சந்திப்பை, பல்வேறு அரசியல் திருப்புமுனைகளை அமைத்துத் தந்த திருச்சியில் திக்கெட்டும் கேட்கும் வகையில் கடந்த வாரம் (13.09.2025) தொடங்கினோம்.
மீனவ சொந்தங்கள்
இரண்டாவது வாரமாக, மீனவச் சொந்தங்கள் மற்றும் மும்மதங்களையும் போற்றி, மத நல்லிணக்கத்தைப் பேணிக் காக்கும் நம் நாகப்பட்டினம் மாவட்ட மக்களையும், உலகுக்கே உணவூட்டும் உழவர் பெருமக்களாகிய திருவாரூர் மாவட்ட மக்களையும் நேற்று சந்தித்தோம்.
ஆள் வைத்து பொய்
நம்மைப் பற்றி, ஆள் வைத்துப் பொய்யான கதையாடல்களைச் செய்தோர், செய்வோர், ஒவ்வொரு நாளும் மக்களிடையே நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர். இந்த நடுக்கத்தினாலேயே நாம் நமது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்கும் பொழுதெல்லாம் யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர்.
கொள்கை தலைவர்கள்
ஆனால், நாம் நம் கொள்கைத் தலைவர்களின் வழியில் முதன்மைச் சக்தியாக, உண்மையான மக்களாட்சியை அமைத்திட நம் பணிகளை இன்னும் தீவிரப்படுத்துவோம்.
எழுச்சிமிகு தருணம்
இந்த எழுச்சிமிகு தருணத்தைச் சாத்தியமாக்கிய அனைவருக்கும் நன்றி. நேற்றைய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின் போது, முழு ஒத்துழைப்பு நல்கிய நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் குழு, தன்னார்வலர்கள் குழு, தனியார் பாதுகாவலர்கள் குழு, மருத்துவக் குழு ஆகியவற்றுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்குகின்றேன்.
பாசம் காட்டிய மக்கள்
மேலும் நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்ட மக்கள் நமக்களித்த வரவேற்பும் நம் மீது காட்டிய அன்பும் பாசமும் நிகரில்லாதவை. இவை எக்காலத்திற்கும் என் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்திருக்கும். இவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் கடமைப்பட்டுள்ளேன். இதற்காக எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.
சமரசம் செய்ய மாட்டோம்
தமிழ்நாட்டு மக்களுக்கான முதன்மைச் சக்தியான நாம், அவர்களுக்காக எதிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம். 1967 மற்றும் 1977 தேர்தல்களின் வெற்றி விளைவை 2026 தேர்தலிலும் நிகழ்த்திக் காட்டுவோம்!
நல்லதே நடக்கும்
புதியதோர் உலகு செய்வோம் - கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்
நல்லதே நடக்கும்.
வெற்றி நிச்சயம். இவ்வாறு அவர் தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் நேற்றைய தினம் இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை நாகை, திருவாரூர் மாவட்டங்களில் தொடங்கியிருந்தார்.
நாகூர் மருத்துவமனை
அப்போது அவர் பேசுகையில், நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்க மருத்துவர்களே இல்லை என தெரிவித்தார். இந்த நிலையில் விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார்.
500 படுக்கைகள்
அவர் மேலும் பேசுகையில், நாகை மருத்துவமனையில் மகப்பேறு பிரிவு இல்லை, நாகூர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை அமைத்த பிறகு 500 படுக்கை வசதியில் பிரசவத்திற்கு பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.
விஜய்யை பார்க்க சொல்லுங்கள்
அங்கு சென்று விஜயை பார்க்க சொல்லுங்கள், அல்லது விஜய் கட்சியினரை பார்க்க சொல்லுங்கள். நாகை மருத்துவமனையில் பிரசவத்திற்கு மருத்துவர்கள் இல்லை என்று சொல்வது யாரோ எழுதிக் கொடுத்து படிப்பது போல் உள்ளது என அமைச்சர் மா.சுப்ரமணியன் விமர்சித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications