தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்து வர மலேசியாவில் நடந்த முயற்சி! தமிமுன் அன்சாரி கூறிய ஃபிளாஷ்பேக்!
சென்னை: கடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலின் போது தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அழைத்து வருவதற்காக மலேசியாவில் தங்கியிருந்த விஜயகாந்துடன் தாம் நடத்திய பேச்சுவார்த்தையை இப்போது நினைவு கூர்ந்துள்ளார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி.
விஜயகாந்தை திமுக கூட்டணிக்கு அழைத்து வருவதற்கான முயற்சியில் தமிமுன் அன்சாரி ஈடுபட்டிருந்த போது அவர் தனியாக கட்சி ஆரம்பிக்கவில்லை என்பதும் மனிதநேய மக்கள் கட்சியில் இருந்தார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இதனிடையே விஜயகாந்துடனான தனது பழைய நினைவலைகளை தமிமுன் அன்சாரி பகிர்ந்து கொண்ட விவரம் வருமாறு;

''தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு மரியாதை செலுத்திய பிறகு பிரேமலதா அம்மையார் அவர்களிடம் என்னம்மா நடந்தது என விசாரித்தேன். கொரோனா தொற்று காரணமாக எல்லாம் ஒரு மணி நேரத்தில் முடிந்து விட்டது தம்பி என்று கூறி மனம் கலங்கி பேசினார். நீங்கள் கேப்டன் விஜயகாந்துக்கு மனைவியாக மட்டுமல்லாமல் ஒரு தாய் போலவும் அவரை கவனித்துக் கொண்டீர்கள் என்றதும், அவர் கண்கலங்கி தன் பிள்ளைகளை திரும்பி பார்த்து, இது அவர்களுக்கு தெரியும் என்றார். ''
''நீங்கள் மன தைரியம் இழக்க கூடாது என்று பிரேமலதாவிடம் ஆறுதல் கூறிவிட்டு, அம்மாவை பார்த்துக்கொள்ள வேண்டும் என விஜய பிரபாகரனிடம் கூறிவிட்டு புறப்பட்டேன். முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா ஆகியோர் வலிமையுடன் செயல்பட்ட காலகட்டத்தில், தமிழ்நாட்டு அரசியலில் துணிச்சலோடு களமிறங்கி தனது செல்வாக்கை நிலை நிறுத்தியவர் விஜயகாந்த்.''
''இத்தருணத்தில் அவரோடு பழகிய நினைவுகள் சுற்றி வருகிறது, 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக தமிழ்நாடு தயாராகிக் கொண்டிருந்த போது, அவர் மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் உள்ள புக்கிட் பிந்தாங் எனுமிடத்தில், அவரது உற்ற நண்பர் ஜலால் அவர்களுடன் ஒய்வில் சில நாட்கள் தங்கியிருந்தார். அப்போது நானும், மெளலா. நாசர் உள்ளிட்டோரும் அவரை சந்தித்து பேசினோம்.''
''அன்று திமுக கூட்டணியில் அவரை இணைத்திட, நான் அவரிடம் விரிவாக பேசினேன். அந்த முயற்சிகளை தமிழ்நாட்டு நாளிதழ்களும், வார இதழ்களும், காட்சி ஊடகங்களும் பரபரப்பாக செய்தியாக வெளியிட்டன. கலைஞர் ஆவலுடன் எங்களது சந்திப்பின் முயற்சிகளை கேட்டறிந்தவாறு இருந்தார்.''
''ஆனால் அந்த முயற்சிகள் நிறைவேறாமல் போனது. அந்த உரையாடல் சமயத்தில் அவர் கூறும்போது 'MGR-ஐ பார்த்தால் விழுந்துவிடுவேன்- கலைஞரிடம் பேசினால் விழுந்துவிடுவேன்' என்று அவர்கள் மீதான அன்பை வெளிப்படுத்தினார். அவரது கோபம் என்பது ஒரு குழந்தையின் கோபத்திற்கு சமமானது என்பதும், அவர் வஞ்சகம் இல்லாதவர் என்பதும் அவரது வாழ்வியல் உண்மையாகும். போராட்ட குணம் கொண்ட அவர்; மரணத்தையும் போராட்டத்துடன் எதிர்கொண்டிருக்கிறார். கட்சி அரசியலை கடந்து அவரது மரணம் சோக அலையை உருவாக்கியிருக்கிறது.''












Click it and Unblock the Notifications