பிப்.28 நாள் குறித்து நிர்வாகிகளை தஞ்சைக்கு அணி திரட்டும் தமிமுன் அன்சாரி! என்ன பின்னணி!
தஞ்சையில் பலத்தை காட்டும் முயற்சியில் தமிமுன் அன்சாரி.
சென்னை: மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகளை தஞ்சைக்கு அணி திரட்டி அழைத்து வரும் பணியில் ஈடுபட்டுள்ளார் தமிமுன் அன்சாரி.
தஞ்சைக்கு ஏன் வர வேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்தி மஜக நிர்வாகிகளுக்கு கடிதம் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதம் வருமாறு;

புதிய பாதை
மனிதநேய ஜனநாயக கட்சியின் 'புதிய பாதை - புதிய பயணம்' என்பது எழாம் ஆண்டை நிறைவு செய்து, எட்டாம் ஆண்டை எட்டியிருக்கும் நிலையில், இம்மடல் வழியாக உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறோம். எதிர்வரும் பிப்ரவரி 28-2023 ல் நமது நமது எட்டாம் ஆண்டு தொடக்க விழாவை , 'மஜக பிரதிநிதிகள் சங்கமம் ' என்ற பெயரில் தஞ்சாவூரில் நடத்திட திட்டமிட்டுள்ளோம்.

போர்க்கால அடிப்படையில்
திருச்சியில் கடந்த பிப்ரவரி 19 அன்று சிறப்பு நிர்வாககுழுவில் முடிவெடுத்த இத்திட்டமிடல் என்பது, கடந்த பிப்ரவரி 21முதல் களப்பணிகளாக தொடங்கியுள்ளது. ஒரு வார கால அவகாசத்தில்,போர்க்கால அடிப்படையில் மனிதநேய சொந்தங்கள் துள்ளிக்குதித்து பணிகளை முடுக்கி விட்டுள்ளனர்.

குடும்ப நிகழ்ச்சியாக
முன்பெல்லாம் பொது நலன்களுக்கான மாநாடுகள், போராட்டங்களை அறிவிப்போம். அப்போதெல்லாம் பொறுப்புணர்வுடன் மக்களை திரட்டி பலம் காண்பித்த வரலாறு நமக்குண்டு.ஆனால் இது முற்றிலும் வேறானது. நமது கட்சியின் அனைத்து மட்ட நிர்வாகிகளும், தீவிர செயல்பாட்டாளர்களும் ஒன்று கூடிடும் மஜக சொந்தங்களின் குடும்ப நிகழ்ச்சியாக இதனை திட்டமிட்டுள்ளோம்.

நாங்கள் எல்லாம் வரக்கூடாதா?
இந்த அறிவிப்பை கண்ட பலரும், ஏன் நாங்கள் எல்லாம் வரக்கூடாதா? நாங்கள் நிர்வாக பொறுப்பில் இல்லாவிட்டாலும் தீவிர அபிமானிகள்தானே? என்றெல்லாம் உரிமையுடன் கேட்கிறார்கள். குறுகிய கால ஏற்பாட்டில் நடத்திடும் இந்நிகழ்வில், எல்லோரையும் பங்கேற்க செய்திடும் சூழல் இல்லை என்பதே நமது பணிவண்பான பதிலாகும் .

துன்பங்கள் ஏராளம் -வலிகள் ஏராளம்
சொந்தங்களே, கடந்த ஏழு ஆண்டுகளில் நாம் சந்தித்த வெற்றிகளும் ஏராளம்! துன்பங்களும் ஏராளம்! உள் வலிகளும் ஏராளம்! அதனால் ஏற்பட்ட காயங்களும் ஏராளம்! இறைவனின் அருளால் அவற்றையெல்லாம் கடந்துதான் எட்டாம் ஆண்டை எட்டியிருக்கிறோம். இதில் மன திருப்திமிக்க பணிகள் நமக்கு நம்பிக்கையூட்டுகிறது. உயிரின் உயிராய் நாம் நேசிக்கும் நிர்வாகிகளையும், உறுப்பினர்களையும், இக் காலக்கட்டங்களில் ஜனநாயகப் படுத்தியிருக்கிறோம்! அரசியல் படுத்தியிருக்கிறோம் ! பக்குவப்படுத்தியிருக்கிறோம்!

என்ன லட்சியம்
குறிப்பாக சிறுபான்மை மக்களையும், பெரும்பான்மை மக்களையும் பொது நீரோட்டத்தில் கைகுலுக்க செய்திருக்கிறோம்! இணக்கமான சூழலை உருவாக்கியிருக்கிறோம்! தேர்தல் அரசியலை கடந்து நாம் செய்திருக்கும் அரிய தொண்டாக இதனை பார்க்கிறோம். தேர்தல் அரசியலில் அதிகாரம் கிடைக்கும்! பதவிகள் கிடைக்கும்! அது மட்டுமே நமது லட்சியங்கள் அல்லவே . எனவேதான் மக்களை நேசித்து பணியாற்றும் மஜக-வை மக்கள் நேசிக்கிறார்கள்.

தஞ்சையில் திரள்வோம்
நமக்கு முதல் களம் அமைத்து தந்த அதே தஞ்சாவூரில் சங்கமிக்க போகிறோம். பன்முக நிகழ்ச்சிகளோடு காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை ஒன்றாக கூடி மகிழப்போகிறோம். வலிமைமிகு சிறகுகளால் வானத்தில் வடுக்களை ஏற்படுத்தி, வரலாற்றில் தாக்கத்தை ஏற்படுத்திடும் அமைதிப் புறாக்களாக வாருங்கள்! தஞ்சையில் திரள்வோம் ! தன்னுரிமை காப்போம் ! என முழக்கம் எழுப்பி வாருங்கள் !












Click it and Unblock the Notifications