பேங்க் மினிமம் பேலனஸ்! கலைஞர் உரிமைத் தொகையில் பிடித்தம் செய்ய கூடாது.. வங்கிகளுக்கு தங்கம் வார்னிங்
சென்னை: மகளிர் உரிமை தொகை திட்ட பயனாளிகளிடம் இருந்து வங்கிகள் எந்த தொகையையும் பிடித்தம் செய்யக் கூடாது என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் பயனாளிகளிடம் இருந்து பணத்தை பிடித்தம் செய்தது வருந்தத்தக்கது. வங்கிகள் நிர்வாக காரணங்களுக்காக ரூ 1000 திட்டத்தில் பிடித்தம் செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மகளிருக்காக ரூ 1000 உரிமைத் தொகையை தமிழக அரசு வழங்கி வருகிறது. வங்கிகள் தங்கள் நிர்வாக காரணங்களுக்காக ரூ 1000 திட்டத்தில் பிடித்தம் செய்யக் கூடாது என மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளேன். அப்படியிருந்தும் சில வங்கிகள் பிடித்தம் செய்கிறார்கள்.
ரூ 1000 உரிமைத் தொகையை வங்கிகள் நிர்வாக காரணங்களுக்காக பிடித்தம் செய்து நேர் செய்யக் கூடாது என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தத்தை மீறினால் வங்கிகளின் பரிவர்த்தனைகள் வேறு வங்கிக்கு மாற்றப்பட்டு சம்பந்தப்பட்ட வங்கிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உரிமைத் தொகை பிடித்தம் செய்திருந்தால் 1100 என்ற எண்ணுக்கு புகார் அளிக்க வேண்டும். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
தமிழகம் முழுவதும் 1.06 கோடி பெண்களுக்கு மாதம் ரூ 1000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்றுமுன் தினம் காஞ்சிபுரத்தில் தொடங்கி வைத்தார். இதற்காக அவர்களுக்கு ஏடிஎம் கார்டும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 14 ஆம் தேதி முதலே மகளிர் உரிமைத் திட்ட பயனாளிகளுக்கு ரூ 1000 வரவு வைக்கப்பட்டது. இது தொடர்பாக பயனாளிகளுக்கு மெசேஜும் வந்தது.
ஆனால் வங்கிக் கணக்கில் அந்த பணம் மாயமானது. இது குறித்து சில இடங்களில் புகார்கள் எழுந்தன. அதாவது சில வங்கிகளில் மைனஸில் மினிமம் பேலன்ஸை பயனாளிகள் வைத்துள்ள நிலையில் பணம் போட்டவுடன் அந்த பணத்தை நிர்வாக காரணங்களுக்காக வங்கிகள் எடுத்துக் கொண்டதாகவும் புகார்கள் எழுந்தன.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் தனது கண்டனத்தை பதிவு செய்திருந்தார். அவர் கூறுகையில் "குறைந்த பட்ச இருப்பு, குறுஞ்செய்தி கட்டணம் என மகளிர் உரிமைத்தொகையில் வங்கிகள் பிடித்தம் செய்கின்றன.
செடியாக இருந்தாலும், மணம் வீசும் மலராக இருந்தாலும் ஆடுகளைப்
பொறுத்தவரை எல்லாம் இரை தான் என்பதுபோல் இருக்கிறது வங்கிகளின் செயல்.
வங்கிகளே,
பாலின சமத்துவ நகர்வில்
பிழை செய்யாதீர்!"
இவ்வாறு கண்டனங்கள் எழுந்த நிலையில் அமைச்சர் தங்கம் தென்னரசு வங்கிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.












Click it and Unblock the Notifications