தங்கம் தென்னரசு சொன்ன “படுத்துக்கிட்டும் போர்த்தலாம்”.. சிரிப்பை அடக்க முடியாமல் தவித்த சட்டசபை
சென்னை: தமிழக சட்டமன்ற பேரவையில் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அவையில் பல்வேறு துறை சார்ந்த விவாதங்களும், கேள்விகளுக்கு அமைச்சர்களின் சுவாரஸ்மான பதில்களும் பேரவையின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.. அப்படித்தான் இன்றைய தினமும், பேரவையில் கலகலப்பான நிகழ்வுகள் நடந்தன.. குறிப்பாக, முன்னாள் அமைச்சர் தென்னரசு திடீரென மைக்கை பிடித்து தந்த காமெடி ஒன்று, சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
தமிழக சட்டப் பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது ஆளும் தவெக அரசு மற்றும் எதிர்க்கட்சியான திமுக இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன.

சபாநாயகர் ஜேசிடி பிரபாகர்
முதலமைச்சர் விஜய், சபாநாயகர் ஜேசிடி பிரபாகர், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்ற நிலையில், சட்டப்பேரவை நேரலை, உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அரசு கார்கள், அரசு பங்களா உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பல விதமான கேள்விகளும் அதற்குரிய பதில்களும் முன் வைக்கப்பட்டன.
குறிப்பாக உதயநிதி ஸ்டாலினின் சில கோரிக்கைகள் தொடர்பாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி கொடுத்ததும், அவை நடவடிக்கைகளை சபாநாயகர் ஜெ.சி.டி. பிரபாகர் கையாண்ட விதமும் கவனம் பெற்றன...
9 மணி 43 நிமிடங்கள்
இந்த நிலையில், சட்டமன்ற கூட்டத்தின் ஒரு பகுதியாக மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் மற்றும் அவை விதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புதிய நடைமுறைகள் குறித்து விவாதம் எழுந்தது. அப்போது, அமைச்சர்கள் தங்கள் துறையின் அறிவிப்புகளை முதலில் வெளியிட்டுவிட்டு, பிறகு விவாதங்களுக்குப் பதிலளிக்கும் புதிய நடைமுறை கடைபிடிக்கப்படும் என்று சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் அறிவித்தார்.
சபாநாயகர் இதுகுறித்து பேசும்போது, "ஆகஸ்ட் 25ம் தேதி நடைபெற்ற கோரிக்கை மீதான விவாதம் சிறப்பாக நடைபெற்றது.. முதன்முறையாக 9 மணி 43 நிமிடங்கள் தொடர்ந்து அவை நடைபெற்றது.. எனினும், அவை நேரத்தை கருத்தில்கொண்டு, அறிவிப்புகளை வெளியிடும் அமைச்சர்கள் இனி முதலில் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு அதனைத் தொடர்ந்து பதிலுரை வழங்கும் நடைமுறை கடைப்பிடிக்கப்படும்" என்றார்.
தங்கம் தென்னரசு அடித்த கமெண்ட்
உடனே இதற்கு பதிலளித்த திருச்சுழி சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு, "அமைச்சர்கள் அறிவிப்புகளை வெளியிட்ட பிறகு பதிலுரை வழங்குவது என்பது, சினிமாவில் க்ளைமாக்ஸ் காட்சியை முதலில் போடுவது போல இருக்கும். தவெகவின் க்ளைமாக்ஸை நாம் எல்லாருமே நிச்சயமாக பார்ப்போம். உங்களுடைய க்ளைமாக்ஸையும் கட்டாயம் காத்திருந்து பார்ப்போம்.
இன்று காலையிலிருந்தே எதை முதலில் சொல்வது, எதை பின்னால் சொல்வது என்பதில் தொடர்ந்து மாற்றம் செய்து கொண்டிருக்கிறீர்கள்... காலையில் வந்தவுடனே, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பதில் சொல்லட்டும், அதற்குப் பிறகு நீங்கள் பேசுங்கள் என்று சொன்னீர்கள். இப்போது அறிவிப்புகளை எல்லாம் முன்னதாக வெளியிட்டு விட்டு, பிறகு அதுகுறித்து பேசுங்கள் என்று சொல்கிறீர்கள்.
மொத்தத்தில் பேரவைத் தலைவர் படுத்துக்கிட்டும், போர்த்திக்கலாம், போர்த்திக்கிட்டும் படுத்துக்கலாம் என்ற ஒரு முடிவுக்கு வந்துவிட்டாரா? என்பதை நான் அறிய விரும்புகிறேன்" என்று கிண்டலாக கேள்வி எழுப்பினார்..
தங்கம் தென்னரசு இப்படி சொன்னதுமே, சபாநாயகர் உட்பட அவையில் இருந்த அனைத்து உறுப்பினர்களுமே சிரித்து விட்டார்கள். தங்கம் தென்னரசு பேரவையில் அடித்த கமெண்ட், சோஷியல் மீடியாவிலும் இப்போது வீடியோவாக பரவி கொண்டிருக்கிறது..!!


Click it and Unblock the Notifications
