பறந்த "ஆர்டர்".. 5 மணிக்கே அன்பிலுக்கு போன் செய்த முதல்வர்.. தஞ்சை தேர் விபத்து.. பரபர நிமிடங்கள்!
சென்னை: தஞ்சாவூர் தேர் விபத்து தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் காலை 5 மணிக்கு சில முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.
Recommended Video
தஞ்சாவூரில் நடைபெற்ற தேர் விபத்து சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. தஞ்சாவூர் அப்பர் கோவிலில் தேர் திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி 11 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அந்த தேர் தஞ்சாவூர் பூதலூர் சாலையில் களிமேடு பகுதி அருகே வரும் போது நெடுஞ்சாலையில் இருந்த உயர் மின் அழுத்த கம்பியில் உரசி உள்ளது. இந்த தேர் மின் கம்பியில் உரசிய நொடியில் அதில் மின்சாரம் பாய்ந்துள்ளது.

அதிகாலை 5 மணி
தமிழ்நாட்டையே இந்த சம்பவம் உலுக்கியுள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தஞ்சாவூர் செல்கிறார். இப்போது சட்டசபை கூட்டத்தொடர் நடைபெறுவதால் டெல்டாவை சேர்ந்த திமுக எம்எல்ஏக்கள், அமைச்சர் அன்பில் மகேஷ் போன்ற எல்லோரும் சென்னையில்தான் இருக்கிறார்கள். சென்னையில்தான் இவர்கள் தங்கி உள்ளனர். காலை 3 மணிக்கு தஞ்சாவூரில் விபத்து ஏற்பட்டு இருக்கிறது. அடுத்த 30 நிமிடங்களில் இந்த தகவல் மாவட்ட ஆட்சியருக்கு சென்றுள்ளது. அதன்பின் முதல்வர் தரப்பிற்கு 5 மணி அளவில் இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்பில் மகேஷ்
பரபரப்பாக நிமிடங்கள் நகர்ந்துள்ளன. இன்னொரு பக்கம் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவிற்கும் அதே நேரத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் காலை 5 மணிக்கே முதல்வர் ஸ்டாலின் டெல்டா தலைவர்கள் உடனே அந்த இடத்திற்கு செல்ல வேண்டும் என்று உத்தரவிட்டு இருக்கிறார். அதோடு அமைச்சர் அன்பில் மகேஷுக்கு போன் செய்துள்ளார். காலை 5 மணிக்கு அவரிடம் முக்கிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.

முதல்வர் போன் கால்
உடனே தஞ்சாவூர் கிளம்புங்கள்.. அங்கே சென்று நிலவரம் என்ன என்று பாருங்கள். மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை பாருங்கள். உறவினர்களை இழந்தவர்களுக்கு ஆறுதலாக இருங்கள் என்று கூறி உள்ளார். இதையடுத்து அதிகாலையிலேயே விமானம் மூலம் அமைச்சர் அன்பில் மகேஷ் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சாவூர் செல்ல ஆயத்தம் ஆனார். இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அன்பில் மகேஷ் முதல்வரின் போன் கால் குறித்த தகவலை உறுதிப்படுத்தினார்.

பறந்த உத்தரவு
முதல்வர் ஸ்டாலின் எனக்கு 5 மணிக்கு போன் செய்து தஞ்சை போக சொன்னார். மாவட்ட ஆட்சியர் தலைமையில் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை அறிக்கை பெறப்படும். அதன்பின் முதல்வரிடம் ஆலோசித்து நடவடிக்கை எடுப்போம் என்று குறிப்பிட்டார். இந்த தகவலை முதல்வர் ஸ்டாலினும் இன்று சட்டசபையில் தெரிவித்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். நானும் செல்ல இருக்கிறேன், என்று குறிப்பிட்டார்.












Click it and Unblock the Notifications