முதல்வர் தாயுமானவர் திட்டம்.. இந்தியாவுக்கே முன்மாதிரியான முயற்சி.. ஸ்டாலின் வைத்த வேண்டுகோள்!
சென்னை: ரேஷன் பொருட்களை வீடுகளுக்கு சென்று வழங்கும் முதல்வர் தாயுமானவர் திட்டம் இந்தியாவுக்கே முன் மாதிரியான முயற்சி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைவதாக கூறிய அவர், இரு தரப்பினரின் சிரமங்களை உணர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கி இருப்பதாக தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இன்று முதல்வர் தாயுமானவர் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இந்த திட்டத்தின் கீழ் 70 வயதிற்கு மேலானவர்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாதமும் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனை வடசென்னை தண்டையார்பேட்டை கோபால் நகரில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். மொத்தமாக 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த திட்டத்தை தொடங்கி வைப்பதற்கு முன்பாக முதல்வர் ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி, திமுக ஆட்சியில் ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்து பார்த்து செயல்படுத்தி வருகிறோம்.
அந்த வகையில் எனது மனசுக்கு பிடித்த திட்டமாக உருவாகி இருப்பதே தாயுமானவர் திட்டம். கூட்டுறவுத்துறை சார்பாக வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்களை வழங்குகிற தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இப்படி அரசு சேவையை மக்களின் வீடுகளுக்கு சென்று கொடுப்பது, இந்தியாவுக்கே முன் மாதிரி முயற்சி.
ஒரு திட்டத்தை அறிவிக்கிறதோட கடமை முடிந்துவிட்டதாக நாங்கள் நினைப்பதில்லை. அந்தத் திட்டத்தோடு பலன், பயன் கடைக்கோடி மனிதர்களையும் சென்று சேருதானு கண்காணிப்பதையும் கடமையாகவே நினைக்கிறேன். அப்படி வயது முதிர்ந்தோரும், மாற்றுத்திறனாளிகளும் ரேஷன் கடைகளுக்கு சென்று பொருள்களை வாங்குவதில் உள்ள சிரமத்தை உணர்ந்து இந்த திட்டத்தை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த திட்டத்தில் 34,809 நியாய விலைக் கடைகளில் செயல்படுத்த போகிறோம். 20 லட்சத்து 42 ஆயிரத்து 657 முதியவர்கள், ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 797 மாற்றுத்திறனாளிகள் என்று மொத்தமாக 21 லட்சத்து 70 ஆயிரத்து 454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு மாதம் 2வது சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் குடிமை பொருள்கள் அவர்களின் வீடு தேடி சென்றுவிடும்.
இது கூட்டுறவுத்துறையின் மிகப்பெரிய சேவையாகும். அவர்களின் செய்யப் போகும் மிகப்பெரிய கடமை. கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 2,394 புதிய நியாய விலைக் கடைகளை திறந்திருக்கிறோம். இதனை சிறப்பாக நடத்துவதால் தான் தமிழ்நாடு பட்டினிச் சாவு இல்லாத மாநிலமாக மாறியுள்ளது. இந்த ரேஷன் கடைகளின் பயன்பாட்டை இன்னும் எளிமையாக்க முயற்சிகளை எடுத்து வருகிறோம். ரேஷன் கடை ஊழியர்கள் முதியவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications