Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஏலி! ஏலி! லாமா சபக்தானி.. இயேசு சிலுவையில் பேசிய 7 வார்த்தைகளின் அர்த்தம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: பிதாவாகிய தேவனின் தீர்மானத்தின்படியே, உலகத்தின் பாவத்தை சுமந்து தீர்த்த தேவ ஆட்டுக்குட்டியாக, சகல ஜனங்களின் பாவ நிவாரண பலியாக கல்வாரி மேட்டினிலே, சிலுவையில் தொங்கினார் இயேசு கிறிஸ்து. இரண்டு கள்ளர்கள் மத்தியில், குற்றம் செய்யாதவராய் அவர்களில் ஒருவராக சிலுவையில் தொங்கினார். அவர் செய்த அற்புதங்களையும், அவர் மூலம் நன்மைகள் பெற்றுக் கொண்டவர்களும், அங்கே நின்று வேடிக்கை பார்த்துகொண்டு இருந்தவர்களும், அவரை பார்த்து ஏளனமாய் பரியாசம் பண்ணினார்கள். மற்றவர்களை இரட்சித்த இவன், தன்னை தானே இரட்சித்து கொள்ளவில்லை என்றும் பரிகசித்தனர். அவர் சிலுவையில் படுகிற பாடுகளை பார்த்து, அநேகர் இப்படி கேலிசெய்து கொண்டு இருந்தனர். கொடூரமாக சிலுவையில் உத்திரம் சிந்திக் கொண்டு இருந்த சூழ்நிலையிலும், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தாம் சிலுவையில் மரிக்கும் தருவாயில், கடைசியாக 7 வார்த்தைகளை பேசினார். அதில் ஒவ்வொரு வார்த்தைகளுக்கு பின், ஆழமான சத்தியங்களும், ஆவிக்குரிய பாடங்களும், ஆழமான அர்த்தங்களும் கொண்டதாகும்.

The 7 Words that Jesus Spoke on the cross!

மன்னிப்பு

(லூக்கா 23:34) அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களை மன்னியும், தங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். சிலுவையில் தம்மை அறைய காரணமாயிருந்தவர்களுக்காகவும், அறைந்தவர்களுக்காகவும், பிதாவினிடத்தில் பரிந்து வேண்டுதல் செய்கிறவராயும் காணப்பட்டார். கொடிய வேதனை அனுபவித்துக்கொண்டிருந்த அந்த வேளையிலும் கூட, இயேசு தம்மை பகைத்தவர்களுக்கு, தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் வகையில் இப்படிப்பட்ட ஒரு ஜெபம் செய்தார். இது அவருடைய இருதயத்தில் நிறைந்திருந்த தெய்வீக அன்பு, வார்த்தையின் (ஜெபம்) வடிவில் வெளிப்பட்டது. இதின் ஆழமான அர்த்தம் என்னவென்றால், இயேசு எப்படி பாடுகள் மத்தியில் மற்றவர்களை மன்னிக்கும் இந்த தெய்வீக சுபாவத்தை உடையவராய் இருந்ததுபோல, நாமும் பின்பற்றவேண்டும் என்பதே. எப்படியெனில் நம்முடைய குடும்பத்தில், உறவினர்கள், மற்றும் நண்பர்களிடையே நாம் காட்டும் அன்பை புரிந்துகொள்ளாமல், பகைத்து, வார்த்தைகளால் வேதனைப்படுத்தி, விரோதித்து, நமக்கு விரோதமாக செய்யப்படுகிற குற்றங்களை பொறுத்துக்கொண்டு, அவர்கள் நமக்கு செய்வது இன்னதென்று அறியாமல் செய்கிறபடியால், நாம் அவர்களுக்காக தேவனிடத்தில் ஜெபம் செய்யவேண்டும் என்பதை (மத்தேயு 5:44) சத்துருக்களைச் சிநேகியுங்கள், உங்களைச் சபிக்கிறவர்களைச் ஆசீர்வதியுங்கள், உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள், உங்களை நிந்திக்கிறவர்களுக்காகவும் உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களுக்காகவும் ஜெபம்பண்ணுங்கள், என்று எழுதியிருக்கிறபடி, நாமும் செய்யவேண்டும் என்பதே. நம்மிடத்தில் இயேசுவுடைய அன்பு இருந்தால், அவர் மன்னித்ததுபோல நாமும் பிறரை மன்னிக்க முடியும், மேலும் அது ஒரு தெய்வீக சுபாவமாகும். மனிதனுடைய பாவங்கள் மன்னிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தானே இயேசு சிலுவையில் மரித்தார். நம் பாவம் செய்யவில்லை என்று சொன்னால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாய் இருப்போம், சிலுவை பாடுகள் மத்தியில் இயேசு குத்தினர்வர்களை மன்னித்ததுபோல, நம்முடைய வாழ்க்கையின் பாடுகள் மத்தியிலும் கூட நம்மை குத்தினவர்களை மன்னிப்போமாக.

The 7 Words that Jesus Spoke on the cross!

இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய்

லூக்கா 23:43, இயேசு அவனை நோக்கி: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார். இயேசு இந்த வார்த்தையை இரண்டு கள்ளரில் ஒருவனை பார்த்து சொன்ன வார்த்தையாகும். இரண்டு கள்ளரில் ஒருவன் இயேசுவை பார்த்து நகைத்து, தூஷித்து, பரியாசம் பண்ணினான், மற்றொருவன் நாம் நியாயப்படி செய்த தவறுக்கு தக்க தண்டை அடைந்தோம், ஆனால் இவரோ (இயேசு) ஒரு குற்றமும் செய்யாமல் ஆக்கினை தீர்ப்பு (சிலுவை தண்டனை) அடைந்திருக்கிறார் என்று அவனை கடித்துக்கொண்டு, இயேசுவை நோக்கி, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்பொழுது, அடியேனை நினைத்தருளும் என்று வேண்டிக்கொண்டான். உடனே இயேசு அவனை மன்னித்து, இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று கூறினார். இன்று அநேகர் தாங்கள் செய்வது நியாயம் என்று சொல்லி, தங்களை தாழ்த்தாமல், மனமேட்டிமையாய் பேசுவதை பார்த்திருபோம். தன் பிழையை உணருகிறவன் யார்? நம்முடைய கண்ணிலிருக்கிற உத்திரத்தை உணராமல், மற்றவர்களின் கண்ணிலிருக்கிற துரும்பைப் பார்க்கிறவராய் இல்லாமல், நம்மை நாமே நிதானித்து அறிந்து, நாமும் கூட நம்முடைய குற்றங்களை ஒப்புக்கொண்டு, நம்மை தாழ்த்தி, மன்னிக்கவேண்டி வேண்டுதல் செய்தால், இயேசு அந்த கள்ளனை மன்னித்து ஏற்றுக்கொண்டதுபோல, நம்மை ஏற்றுக்கொள்வார் .

தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார்

யோவான் 19:26,27, இயேசு தம்முடைய தாயை நோக்கி: ஸ்திரீயே, அதோ, உன் மகன் என்றார், இயேசுவுக்கு அருகே நின்ற அன்பான சீஷனை கண்டு, அதோ உன் தாய் என்று கூறினார். இயேசுவின் தாயை அந்த சீஷன் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், அந்த தாய், சீஷனை தன் சொந்த மகனாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதான உபதேசம். ஆதாவது நாம் எல்லோரும் நம்முடைய சொந்த தாயையும், மகனையும் எந்த சூழ்நிலையிலும் அவர்களை கைவிடாது அரவனைப்பதுபோல, இன்று உலகத்தில் பல கோடி மக்கள், தங்கள் தாய், மற்றும் மகனை இழந்து தவிக்கும் திக்கற்றவர்களை பார்க்கமுடியும். இப்படிப்பட்டவர்களை விசாரித்து அவர்களை பராமரித்து நம்முடைய அன்பினால் அரவணைக்கவேண்டும் என்பதை இயேசுவினுடைய இந்த வாரத்தை வலியுறுத்துகிறது.

The 7 Words that Jesus Spoke on the cross!

ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர்

(மத்தேயு 27:46) இயேசு: ஏலி! ஏலி! லாமா சபக்தானி, என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டார், அதற்கு என் தேவனே! என் தேவனே! ஏன் என்னைக் கைவிட்டீர் என்று அர்த்தமாம். பாவம் இருக்கும் இடத்தில் பரிசுத்த பிதா வாசம் செய்யமுடியாது என்பது சத்தியமாகும். எனவே, சர்வலோக (மனிதனுடைய) பாவம் அவர் (இயேசுவுடைய) தலைமேல் சுமத்தப்பட்டபோது, பிதா கிறிஸ்துவை விட்டு விலகினார். இதனால் இயேசு சிலுவையில் நம்முடைய பாவங்களை சுமந்தபோது, பிதா எப்படி விலகிச்சென்றாரோ, பாவம் நமக்குள் பிரவேசிக்கும் போது, பரிசுத்த தெய்வம் நம்மிடத்தில் வாசம் செய்யமுடியாமல், அவர் நம்மை விட்டு விலக வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

தாகமாயிருக்கிறேன் என்றார்

(யோவான் 19:28,29) அதன்பின்பு, எல்லாம் முடிந்தது என்று இயேசு அறிந்து வேதவாக்கியம் நிறைவேறத்தக்கதாக: தாகமாயிருக்கிறேன் என்றார். காடி நிறைந்த பாத்திரம் அங்கே வைக்கப்பட்டிருந்தது, அவர்கள் கடற்காளானைக் காடியிலே தோய்த்து, ஈசோப்புத்தண்டில் மாட்டி, அவர் வாயினிடத்தில் நீட்டிக்கொடுத்தார்கள். இயேசு சிலுவையில் பல மணிநேரம் தொங்கினபடியால், அவருக்கு தாகம் உண்டாயிற்று, ஆனால் அவருக்கு குடிக்க காடியை கொடுத்தார்கள். அது மிகுந்த கசப்பாக இருந்ததாக கூறப்படுகிறது. சிலருக்கு பாவத்தின் மேல் தீராத தாகம் உண்டாகும், அவர்கள் எத்தனை முறை பாவம் செய்தாலும், அந்த பாவத்தின் தாகம் தணிவதில்லை. ஒரு சிலர், இந்த பாவ வாழக்கையை விட்டு வெளிய வர முயற்சி செய்தாலும், அந்த தாகம் அவர்களை தூண்டி, பாவம் செய்ய வைத்துவிடும். பாவத்தின் பலனாய் முடிவிலே கசப்பான காடி ( தீராத நோய், சாபங்கள்) என அவர்களுடைய வாழ்க்கையில் தொடர்ந்து சமாதானம் இல்லாமல், தவறான முடிவெடுத்து தங்கள் வாழ்க்கையை முடித்துகொள்கிறார்கள். இப்படிப்பட்ட தீராத பாவ தாகம் உள்ளவர்களை மீட்கவே, இயேசு சிலுவையில் தகமானார்.

The 7 Words that Jesus Spoke on the cross!

முடிந்தது

(யோவான் 19:30) இயேசு காடியை வாங்கினபின்பு, முடிந்தது என்று சொல்லி, சிலுவையில் முடிந்தது என்ற சத்தம், வெற்றியின் தொனி என்று கூட சொல்லலாம். இயேசு தனக்கு பூமியிலே பிதாவினால் கொடுக்கப்பட்ட வேலையையும், பிதாவின் தீர்மானத்தின்படி எல்லாவற்றையும் நிறைவேற்றி முடித்தார். இயேசு கிறிஸ்து மனித அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்து மனிதகுலத்தை பாவத்திலிருந்து, சாபத்திலிருந்து, மீட்கவே பாவ நிவாரண பலியாய் தன்னுடைய சரீரத்தில் (சிலுவையில் பலியாகி) ஆக்கினை தீர்ப்பு அடைந்து, எல்லாவற்றையும் செய்து முடித்தார். இயேசு எனக்காக யாவற்றையும் செய்து முடித்தார் என்ற வேதவசனத்தின்படி, அவர் மூலமாய், நமக்கும் கூட பாவம் சாபம், ஆகியவற்றிலிருந்து முடிவு உண்டாயிற்று என்று விசுவாசிப்போமாக.

பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்

(லூக்கா 23:46) இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மகா சத்தமாய்க் கூப்பிட்டுச் சொன்னார், இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார். இயேசு சிலுவையில் மகா உபத்திரவப்பட்டு, கடைசி சொட்டு இரத்தம் வரை சிந்தி, அவருடைய ஆவியை பிதாவிடத்தில் ஒப்புவிக்கிறார். சாதாரணமாக ஒரு மனுஷனுடைய மரண தருவாயில், தான் பேச நினைப்பதை சொல்ல முயற்சிப்பதை நாம் பார்க்கலாம், ஆவி ஆத்துமா சரீரத்தில் பெலன் குன்றி, பேச முடியாமல், முடிவடைகிறது. ஒரு மனுஷனால் செய்ய முடியாததை, இங்கு இயேசு சிலுவையில் சில வார்த்தைகளை கூறி, மகா சத்தமாய் கூப்பிட்டார் என்பதை பார்க்கும்போது, 2000 ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் அவருடைய மகா சத்திய வார்த்தைகள், மற்றும் சத்தியங்கள் இன்றும் நம் காதுகளில் மகா சத்தமாய் தொனித்து கொண்டு இருக்கிறதே, இனி வரும் சந்ததிக்கும் இந்த ஜெய தொனி கேட்குமே! அவரே மெய்யான ஜீவனுள்ள தேவன் என்று நிரூபிக்கப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+