சென்னை பள்ளிக்கரணையில் முரட்டு ரைடர்.. வேட்டியை பறக்கவிட்டு.. 8 அல்ல 11 போட்டது தான் ஆச்சர்யம்
சென்னை: அடேங்கப்பா.. தம்பி பைக் ஓட்டுற ஸ்டைலை பார்த்தால், ரொம்ப ஜாலியான நபராக இருப்பார் போலயே.. வேட்டியை பறக்கவிட்டு சாகசம் காட்டியபடி இருசக்கர வாகனத்தில் ஒரு நபர் சென்னை பள்ளிக்கரணையில் சென்றுள்ளார். மது போதையில் அலப்பறை செய்தபடி வாகனம் ஓட்டியதாக கூறி வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளனர் சக வாகன ஓட்டிகள்.
சென்னையில் வாகனம் ஓட்டுவது என்பது மிகவும் சவாலானது.. காரணம் எங்கு, எப்படி, யார் வருவார்கள் என்று ஒரு நொடி கூட கவனிக்க முடியாது.. வடிவேலு ஒரு படத்தில் தன்னைத்தான் விரட்டுகிறார்கள் என்று நினைத்து பயந்து ஓடுவார்.. வெட்டுங்கய்யா.. வெட்டுங்க என்று இதுக்குமேல ஓட முடியாது என்பது போல் கும்பலாக உங்களை விரட்டியபடி வந்து வாகன ஓட்டிகள் கடந்து போவார்கள்.

சென்னையில் வாகனத்தில் பயணிக்கும் போது, இரண்டு பக்கமும் இண்டிகேட்டர் வேலை செய்ய வேண்டும்.. இல்லாவிட்டால் விபத்தில் தான் சிக்க வேண்டிய நிலை வரும். அதேபோல், இருசக்கர வாகனம் ஓட்டுவோர் சைடு பார்க்காமல் வாகனத்தை இயக்கவே முடியாது. எதிரில் வரும் வண்டியைவிட பின்னால் வரும் வண்டிகள் தான் ஆபத்தானது. சைடு பார்க்க இரண்டு கண்ணாடிகள் இருசக்கர வாகனங்களில் இருக்க வேண்டும்..
அதேபோல் சாலை எல்லா பக்கமும் நன்றாகவே இருப்பது போல் தெரியும். ஆனால் எங்கு பள்ளம் இருக்கும் என்பதை கணிக்கவே முடியாது. திடீரென பெரிய பள்ளம் வந்து உங்களை நிலைகுலைய வைத்துவிடும்.. குறிப்பாக கார் அல்லது ஆட்டோ பின்னால் சென்றால் விபத்தில் சிக்குவது உறுதி..
இது ஒருபுறம் எனில் மது போதையில் இருசக்கர வாகன ஓட்டிகள் சிலர் செய்யும் அலப்பறை தாங்க முடியாத ரகம். ஒவ்வொரு டாஸ்மாக்கிலும் ஒரு போலீஸை பாதுகாப்பிற்கு போட்டு, மது போதையில் வாகனம் ஓட்டுவோரை பிடித்தால் அரசுக்கு பெரிய வருவாய் கிடைக்கும்.. அல்லது மது போதையில் வாகனம் ஓட்டுவது அடியோடு நின்றுவிடும். இது நடைமுறையில் சாத்தியம் தான் என்றாலும், இதுவரை பெரிய அளவில் நடவடிக்கைகள் இல்லை என்று புகார் உள்ளது..
அதேபோல் ராத்திரி 10மணிக்குமேல் அதிக விலைக்கு மதுவிற்பனை பார்களில் நடைபெறுவதையும் எளிதாக தடுக்க முடியும். ஆனால் ஏனோ, பல ஊர்களில் தொடரத்தான் செய்வதாக குற்றச்சாட்டுகள் உள்ளது. அதேபோல் காலையிலேயே மதுக்கடைகள் இயங்குவதும் சென்னை உள்பட சில பகுதிகளில் நடக்கிறது என்று கூறப்படுகிறது. இது காரணமாக மதுபோதையில் வாகன ஓட்டிகள் சுற்றுவது அடிக்கடி நடக்கிறது.
இந்நிலையில் சென்னை பள்ளிக்கரணையில் வாகன ஓட்டி ஒருவர், வேட்டியை பறக்கவிட்டபடி பைக்கில் போய் இருக்கிறார். சாகசம் செய்தபடி அந்த இளைஞர் மது போதையில் போய் இருப்பதாக குற்றம்சாட்டி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது.. வண்டியில் முரட்டுத்தனமாக போய் அலப்பறையில் ஈடுபட்டதாக சக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டியுள்ளார்கள்.இப்படி செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications