Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கொலை நடந்த அன்று வந்த போன் கால்! ஏன் இருவரை கைது செய்யவில்லை? பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் கண்ணீர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஆம்ஸ்ட்ராங் மறைந்து கிட்டத்தட்ட 90 நாட்கள் மறைந்துவிட்டதை அடுத்து புத்தமதத்தின் அடிப்படையில் அவருக்குச் சடங்குகள் நடைபெற்றன. அதன் ஒருபகுதியாக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதிப் பேரணிக்கு திடீரென்று அனுமதி மறுத்த காவல்துறையினர், அதில் கலந்து கொண்டவர்களைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 5ஆம் தேதியன்று சென்னை பெரம்பூர் வேணுகோபால் சுவாமி கோயில் தெருவில் உள்ள வீட்டில் ஆம்ஸ்ட்ராங் இருந்த போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இச்சம்பவம் தொடர்பாகப் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷின் தம்பி பொன்னை பாலு உட்பட 8 பேர் அன்று இரவே கைது செய்யப்பட்டனர்.

armstrong porkodi armstrong

மேலும் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் இப்போது வரை இந்தக் கொலை தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைதான இந்த 11 பேரையும் 5 நாட்கள் போலீஸ் கஸ்டடி எடுத்து விசாரிக்க எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே காவல்துறை ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த நிலையில் அதனை எழும்பூர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது.

இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் மறைந்து 90 நாட்கள் நிறைவடைந்ததை ஒட்டி புத்தமத ரீதியாக அனுசரிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட அமைதி பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி இருப்பதாக ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி குற்றஞ்சாட்டி உள்ளார். மேலும் அவர் கணவரை இந்த பிறகு முதன்முறையாக ஒரு யூடியூப் சேனலுக்கு மனம் திறந்து பேட்டி அளித்திருக்கிறார்.

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அளித்துள்ள பேட்டியில், "இந்து மதத்தில் ஒருவர் மறைந்துவிட்டார் 16 கழித்து துக்கம் காரியம் செய்வார்கள். கிறிஸ்துவர்கள் 45 கழித்துச் செய்வார்கள். பௌத்த மதத்தில் 3 மாதங்கள் துக்கம் அனுசரிப்பார்கள். ஒவ்வொரு மாதமும் புண்ணியதானம் செய்வோம். கடைசியில் 90 ஆவது நாள் மிகப்பெரிய காரியம் செய்வோம். அதைத்தான் இப்போது ஆம்ஸ்ட்ராங் மறைவுக்கான சடங்கைப் புத்த விகாரில் செய்தோம்.

அதன் ஒரு பகுதியாகப் பழைய புத்த விகாரில் இருந்து புதிய விகாருக்கு அமைதி பேரணி செல்வதற்காகக் கடந்த மாதம் 17 ஆம் தேதியே அனுமதி கேட்டிருந்தோம். காவல்துறையும் அனுமதி அளித்திருந்தது. திடீரென்று இப்போது அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்று சொல்லிவிட்டார்கள். முன்பே மறுத்திருந்தால், நீதிமன்றம் மூலமாக அனுமதி பெற்றிருப்போம். திடீரென்று கட்டுப்பாடு விதித்தது மன வருத்தமாக உள்ளது.

என் திருமணம் கூட 45 புத்த பிட்சுகளை அழைத்து பௌத்த முறைப்படிதான் நடத்தினார். மகள் பிறந்த பின் புத்த பூர்ணிமா அன்றுதான் மகளுக்கு சாவித்திரி பாய் என பெயர் வைத்தார். மாயாவதிதான் பெயரை வைத்தார். ஒவ்வொரு புத்த பூர்ணிமா போதும் நாங்கள் பேரணி நடத்துவோம். என் கணவர் ஆம்ஸ்ட்ராங்கின் 90 ஆவது நாள் சடங்கை நடத்தவிடாமல் கட்டுப்பாடுகளை அதிகம் போடப்பட்டு, எங்கள் பேரணியை நடக்க விடாமல் தடுத்துவிட்டனர்.

என் கணவரின் கொலையில் ஏ2 குற்றவாளி சம்போ செந்தில்தான். ஆனால், அவரை இதுவரை காவல்துறை பிடிக்கவே இல்லை. அதேபோல மொட்டை கிருஷ்ணன். இந்த இருவரை ஏன் பிடிக்கவே இல்லை என்பது விளங்கவில்லை. நாங்கள் அமைதி பேரணி போனால் காவல்துறை கைது செய்கிறது. அது ஏன் என்று தெரியவில்லை? என் கணவர் கொலை செய்யப்பட்ட அன்று ஒரு எச்சரிக்கைகூட கொடுக்காத உளவுத்துறை, இன்று இவ்வளவு காவலர்களை அனுப்பி பேரணியைத் தடுக்கிறார்கள்.

armstrong porkodi armstrong

இதில் அரசாங்கம் எதையோ மறைமுகமாகச் செய்கிறது. என் கணவரின் புகழ் அதிகரிப்பதை அரசு விரும்பவில்லை. அதனால் அதிக கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள். இப்போது ஆம்ஸ்ட்ராங் கொலையில் குற்றப்பத்திரிகை தாக்கல் உள்ளானர். அதைப் படித்துப் பார்ப்போம். அது சந்தேகம் இருந்தால், நாங்கள் சிபிஐ விசாரணை கேட்போம்" என்கிறார்.

"இன்னும் அந்தத் துக்கம் எங்களைவிட்டுப் போகவில்லை. என் மகள்தான் இன்னும் அப்பாவை மறக்கமுடியாமல் கேட்டுக் கொண்டே இருக்கிறார். அவளால் இன்னும் அப்பாவை மறக்க முடியவில்லை. ஒவ்வொரு நாளும் அவர் வருவார் என நம்பிக் கொண்டிருக்கிறாள். அவள் இன்னும் அப்பா பிரிவிலிருந்து மீளவில்லை என்றுதான் சொல்வேன்.

நானும் கூட அவர் உயிருடன் இருக்கிறார் என்ற நினைவில்தான் நாட்களைக் கடந்து போகிறேன். அவர் இருக்கும்போது பலருக்கு எனக்குத் தெரிந்து பல உதவிகளைச் செய்திருக்கிறார். ஆனால், அவர் மறைந்த பிறகு முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் எல்லாம் வந்து என் கணவர் இந்த உதவியைச் செய்தார், அதைச் செய்தார் என என்னிடம் சொல்கிறார்கள். அதை நினைக்கும்போது ரொம்ப பெருமையாக இருக்கிறது.

ஆம்ஸ்ட்ராங் உயிருடன் இருக்கும்போதே அவரது போன் எப்போது பார்த்தாலும் ஒலித்துக் கொண்டே இருக்கும். அத்தனை அழைப்புகளும் உதவிக் கேட்டுத்தான் வரும். அவர் போன் ஒலிக்காத நேரமே இல்லை. டொய்..டொய்.. என்று கத்திக் கொண்டேதான் இருக்கும். அவரை கிண்டலாக அதை வைத்து டொய்ய்ய்..டொய்ய்ய்.. என்றுதான் அழைப்பேன். போனை எடுத்தால், 'என்னம்மா செய்யணும்?' 'எவ்வளவோமா தேவை?' இப்படித்தான் பேசுவார். அந்தளவுக்கு என் கண்முன்னாலேயே உதவிகளைச் செய்தவர். அதை மீறி எனக்குத் தெரியாமலும் உதவி இருக்கிறார்.

அவர் செய்த உதவிகளை நானும் செய்ய வேண்டும். அந்தக் கடமை எனக்கும் இருக்கிறது. ஏழை குழந்தைகளை அவரைப் போலவே நானும் படிக்க வைப்பேன். அந்தப் பொறுப்பை அவர் மறைந்த பிறகு உணர்ந்துவிட்டேன். அவர் எப்போதும் சட்டத்தின் மீது அதிக மதிப்பு கொண்டிருந்தார். ஆகவே, எதையும் சட்டரீதியாக எதிர்த்து வெற்றி பெறுவார். அவர் கோட்டையை ஆள வேண்டும் என்று தொண்டர்களிடம் சொல்வார். அவர் சொன்னதைப்போல் என் மகளை நான் கோட்டையை ஆள வைப்பேன்.

என்னை அவர் ராணி மாதிரி பார்த்துக்கொண்டார். குழந்தை பிறந்த இந்த 2 ஆண்டுகளில் மகளுடன் தான் வீட்டிலேயே இருந்தார். அவர் வெளியே போன நேரமே ரொம்ப கம்மி. வீட்டிலிருந்தே கட்சி தொண்டர்களை வைத்து நிர்வாகத்தைச் செய்தார். அவருக்கு மகள் தான் உயிர். அவள் மீது அளவு கடந்த பாசம். அப்படி இருந்தவரை எப்படி திட்டமிட்டு கொலை செய்தார்கள் என்பதே புரியவில்லை. அந்தச் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது.

எனக்கு முதலில் போன் செய்து 'தலையில் அடிப்பட்டுள்ளது. உடனே ஆஸ்பத்திரிக்கு வாங்க' என்று சொன்னார்கள். உடனே என் கையில் கொஞ்சம் பைசா இருந்தது. அதை மட்டும் எடுத்துக் கொண்டு போனேன். தலையில்தானே அடி? சின்ன காயமாக இருக்கும் என்று நம்பிப் போனேன். மருத்துவமனைக்குப் போனால் ஜனங்கள் கூட்டமாக நின்றார்கள். போலீஸ் வேறு இருந்தது. எனக்கு அப்போது உள்ளுக்குள் நடுக்கம் எடுத்தது. பிறகுதான் என் கணவரை வெட்டிவிட்டார்கள் என்று சொன்னார்கள்.

வீட்டிலிருந்த இரண்டு ஆண்டுகளும் அவர் மகளுக்காக புதிய வீட்டைப் பார்த்துப் பார்த்து கட்டி வந்தார். அதில் ஒவ்வொரு வசதியும் மகளுக்காக எப்படி செய்ய வேண்டும் என பல கனவுகளை வைத்திருந்தார். அந்த வீடுதான் அவர் கனவு. காலை 7 மணிக்கே பெரம்பூரிலிருந்து அயனாவரம் வீட்டுக்குப் போய்விடுவார். அவரே கட்டிடத்திற்குத் தண்ணீர் விடுவார். வேலை ஆட்களை இருந்து வேலை வாங்குவார். கடைசியில் அந்த வீட்டின் முன்னாலேயே எமன் வருவான் என்று நாங்கள் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

என் மகள் பிறந்து 5 ஆம் நாள் மருத்துவமனையிலிருந்து வீட்டுக்கு வந்தேன். அன்று முதல் அவர் தன் மார்பு மீது போட்டுத்தான் மகளை வளர்த்தார். என் வீட்டுக்கு வந்த மகாலக்ஷ்மி என அடிக்கடி சொல்வார். பல ஆண்டுகளாகக் குழந்தை இல்லாமல் இப்போதுதான் எங்களுக்கு வாரிசே வந்தது. அதைப் பார்த்து அனுபவிக்கக் கூட அவருக்குக் கொடுத்து வைக்கவில்லை"என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+