8% நிதியை 4% ஆக குறைத்த மத்திய அரசு? 50% கிடைக்குமா? வஞ்சிக்கப்படுகிறதா தமிழ்நாடு?
சென்னை: மாநிலங்களுக்கான வரிப் பகிர்வை 50% ஆக உயர்த்த வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்த நிலையில், அது குறித்து தமிழ்நாடு எந்தளவுக்குப் பாதிக்கப்படுகிறது என்பதைப் பற்றி ஜெயரஞ்சன் விளக்கம் அளித்திருக்கிறார்.
கடந்த 18 ஆம் தேதி மத்திய அரசின் 16 ஆவது நிதி ஆணையக் குழு கூட்டம் தமிழ்நாட்டில் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய முதல்வர் ஸ்டாலின் மாநில அரசுக்கு ஒதுக்கும் நிதியின் அளவை 50% ஆக உயர்த்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையை வைத்துள்ளார். அதாவது கடந்த 15வது நிதி ஆணையக் குழு கூட்டத்தில் மாநில அரசுக்கு வழங்கப்படும் நிதி பகிர்வானது 41% ஆகப் பிரித்து வழங்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. ஆனால், இதுவரை வரி வருவாயில் 33.16% மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்படுகிறது என்பதை ஸ்டாலின் தன் உரையில் சுட்டிக் காட்டி பேசி இருந்தார்.

கடந்த 9வது நிதிக் குழு காலகட்டத்தில் 8% நிதி தமிழ்நாட்டுக்கு கிடைத்தது என்றும் அது இப்போது அப்படியே பாதியாகக் குறைந்து 4% தான் கிடைக்கிறது என்று அவர் கூறியுள்ளார். இதனால் தமிழ்நாட்டுக்கு உரிய அளவில் நிதி கிடைக்கவில்லை என்பதை தன் பேச்சின் மூலம் ஸ்டாலின் உறுதிப்படத் தெரிவித்திருக்கிறார்.
ஏன் இந்தளவுக்கு நிதி தமிழ்நாட்டுக்கு வரவர குறைந்து வருகிறது? அதைப் பற்றி மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், "மக்கள் தொகை கணக்கின் அடிப்படையில் நிதி பகிர்வு செய்யப்படுகிறது. தமிழ்நாட்டு எப்போதோ மக்கள் தொகையை ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. உபி, பீகார் போன்ற மாநிலங்கள் அந்த நிலையை அடையவில்லை. எனவே அதிக நிதியை அங்கே மத்திய அரசு அளிக்கிறது. இதனால் மறைமுகமாகத் தமிழகம் வஞ்சிக்கப்படுகிறது.
தமிழகத்தில் வசூலிக்கப்படும் ஜிஎஸ்டி வரி தொகையுடன் மக்கள் தொகையை அளவிட்டு அதன்படி நிதியை ஒதுக்கும் போது மாநில அரசு பாதிக்கப்படுகிறது. நாம் அதிக வரியைச் செலுத்திவிட்டு, குறைந்த நிதியைப் பெறுகிறோம். குறைந்த வரியை மத்திய அரசுக்குச் செலுத்திவிட்டு சில மாநிலங்கள் அதிக நிதியை மக்கள் தொகை அதிகம் உள்ளது என்ற அளவில் பெற்றுவிடுகின்றன. இது ஒரு மோசமான நிதி பகிர்வு. வளர்ந்த மாநிலமாக இருக்கிறோம் என்பதால் நசுக்கப்படுவது சரியா? அதைத்தான் முதல்வர் சுட்டிக் காட்டி இருக்கிறார்" என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அரசியலமைப்பு சட்டம் மாநில அரசுக்கு உண்டான பொறுப்புகள் என்ன? அதே போல் மத்திய அரசுக்கு உண்டான பொறுப்புகள் என்ன? என்பதை தெளிவாக வரையறை செய்து கொடுத்துள்ளது. உள்துறை, ராணுவம், அணு ஆயுதம் ஆகிய பொறுப்புகள் மத்திய அரசிடம்தான் உள்ளது. அதற்கு அவர்களுக்கு நிதி தேவை. கல்வி, சுகாதாரம், மக்கள் நலத் திட்டம் என மாநில அரசிடம்தான் உள்ளன. அதற்கு ஏற்ப மாநில அரசுக்கு நிதி வேண்டும்.
ஆனால், இந்தப் பொறுப்புகளுக்கு தகுந்த மாதிரி நிதி சரியாகக் கிடைக்கிறதா? அதை ஒதுக்கீடு செய்ய என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை எல்லாம் இந்த நிதிக்குழுதான் தீர்மானிக்கிறது. அதன்படி பார்த்தால் மத்திய அரசின் கடமைகள் என்பது குறைவாக உள்ளது. அதே நேரம் உரிமைகள் அதிகம் உள்ளன. மாநில அரசுதான் மக்கள் நலன் திட்டங்களைச் செயல்படுத்துகிறது. நேரடி தொடர்பு அதிகம் மாநில அரசுக்குத்தான் உள்ளது. ஆனால், துரதிருஷ்டவசமாகக் கடமைகளை அதிகமாகக் கொண்டுள்ள மாநில அரசிடம் அதைச் செயல்படுத்தும் உரிமைகள் குறைவாகவே உள்ளன.
வரி வசூல் அதிகாரம் என்பது மத்திய அரசிடம்தான் உள்ளது. வரி வருவாயை முழுக்க எடுத்துக் கொண்டு மாநில அரசுக்குப் பகிர்ந்து அளிப்பது மத்திய அரசுதான். ஆனால், செலவுக்கு ஏற்ற அளவுக்கு நமக்கு நிதி பகிர்வு கிடைப்பதில்லை. இதை மனதில் கொண்டுதான் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிதிக்குழு கூட்டம் நடத்தப்படுகிறது. இந்தக் குழு ஒவ்வொரு ஆண்டு மத்திய அரசுக்கு எவ்வளவு நிதி தேவை என்பதையும் ஒட்டு மொத்தமாக அனைத்து மாநில அரசுக்கு எவ்வளவு நிதி தேவையாகும் என்பதைக் கூடி ஆலோசித்து ஒரு தொகையை ஒதுக்கப் பரிந்துரை செய்யும்.
முதலில் நாட்டின் வரி வருவாயை மொத்தமாகக் கணக்கிட்டு செங்குத்தாக ஒரு நிதி பகிர்வை முடிவு செய்வார்கள். அடுத்து அடிமட்ட அளவில் தேவையான செலவினங்களைக் கண்டறிந்து ஒரு நிதியை ஒதுக்கத் திட்டமிடுவார்கள். ஆகவே, அந்தக் குழுவிடம் தமிழக அரசு தனது இழப்புகளைச் சுட்டிக்காட்டி இருக்கிறது. அதைத்தான் முதல்வரும் எடுத்து காட்டி பேசி இருக்கிறார்" என்கிறார்.












Click it and Unblock the Notifications