இறந்தாலும் நீ பூமியில் வாழ வேண்டும்.. நெகிழ வைத்த சென்னை சிறுவனின் பெற்றோர்! உருக்கமான பேட்டி
சென்னை: சென்னை சூளைமேட்டில் அறுந்து வந்த பட்டத்தை பிடிக்கச் சென்ற பிரசன்னா (12), 2வது மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்தார். சிறுவனின் கண்கள் மற்றும் உடல் உறுப்புகளைத் பெற்றோர் தானமாக வழங்கினர். சிறுவன் பிரசன்னாவின் தந்தை உருக்கமாக அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த தண்டபாணி என்பவரது மகன் பிரசன்னா, 12 வயது ஆகிறது. சிறுவன் பிரசன்னா, பட்டம் விட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது எதிர்பாராத விதமாக 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தான். உடனடியாக அக்கம் பக்கத்தினர் பெற்றோர், மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மூளைச்சாவு அடைந்துவிட்டதை கூறினர். இதையடுத்து சிறுவன் பிரசன்னாவின் பெற்றோர் அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய முடிவு செய்ய முடிவு செய்தனர். இதன்படி கண்கள் மற்றும் உடல் உறுப்புகளை தானமாக வழங்கினர்.
இறந்தும் பலருக்கும் வாழ்வழித்த பிரசன்னாவின் தந்தை தண்டபாணி செய்தியாளர்களிடம் கூறுகையில், "என் பெயர் தண்டபாணி, தையல் கடை வைத்துள்ளேன். சூளைமேட்டில் வசித்து வருகிறேன். என் பையன் விளையாட போனான். பசங்களோட விளையாடும் போது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துவிட்டான். தவறி விழுந்து இறந்ததால், கண், உடல் , உறுப்புகளை தானம் செய்திருக்கிறேன்.
இனிமே மத்தவங்க அவங்க அவங்க பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கணும், இந்த இழப்பு மத்தவங்க யாருக்கும் வரக்கூடாது. இதை தாழ்மையுன் கேட்டுக் கொள்கிறேன். எனக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு.. யாரையும் குறை சொல்ல முடியாது. அவன் நேரமோ என்னமோ தெரியல.. கால் தவறி விழுந்துட்டான். இது ரொம்ப பெரிய இழப்பு.. தாங்க முடியல.. மற்ற பெற்றவங்கள.. பிள்ளைங்க எங்க போறான் அப்படீன்றத கவனமாக கேட்கணும்.." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications