அமலாக்கத்துறையால் எந்த மாநில முதல்வரையும் கைது செய்ய முடியும்.. வானளாவிய அதிகாரத்தின் பின்னணி
சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின் மூலம் அமலாக்கத்துறையால் எந்த மாநில முதல்வரையும் எளிதாக கைது செய்ய முடியும்.. ப சிதம்பரம் முதல் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை எதிர்க்கட்சியின் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட சட்டத்தின் வானளாவிய அதிகாரம் குறித்து பார்ப்போம்.
ப.சிதம்பரம், கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார், ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வரை பலரையும் சிறையில் தள்ளியிருக்கிறது அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டம்.

முதலில் இந்த சட்டத்தால் யாரெல்லாம் கைது செய்யப்பட்டார்கள் என்பதை பார்ப்போம். கடந்த 2018ம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மகாராஷ்டிரா முன்னாள் துணை முதல்வரான சகன் புஜ்பால் 840 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இதேபோல் தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அனில் தேஷ்முக் மற்றும் நவாப் மாலிக் ஆகியோரும் பணமோசடி வழக்குகளில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்கள்.
அடுத்ததாக கடந்த 2019ல் முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் கைதானார். சுவர் ஏறி குதித்து அதிகாரிகள் அதிரடியாக அவரை கைது செய்தனர். நிதியமைச்சர் பதவியை தவறாகப் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டில் ப சிதம்பரம் நீண்ட நாட்கள் சிறையில் இருந்தார்.
அடுத்ததாக 2019ம் ஆண்டு செப்டம்பரில், வெளிநாட்டு நிறுவனங்களில் சட்டவிரோதமாக முதலீடு செய்த வழக்கில், கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர் டி.கே.சிவக்குமார் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். நீண்ட சட்ட போராட்டத்திற்கு பின்னரே ப சிதம்பரமும், டிகே சிவகுமாரும் ஜாமீனில் வந்தனர்.
இதேபோல் கடந்த 2022ம் ஆண்டு 1,034 கோடி ரூபாய் பத்ரா சால் நில மோசடி வழக்கில் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் எம்.பி. கைது செய்யப்பட்டார். இதனிடையே மதுபான கொள்கை ஊழல் புகார் தொடர்பாக பணமோசடி வழக்கில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். இதேபோல் ஆம் ஆத்மி கட்சியின் டெல்லி அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் அதேபோன்ற வழக்கில் கைதானார். தற்போது இருவருமே ஒரு வருடங்களை கடந்து சிறையில் இருக்கிறார்கள். இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை..
தமிழகத்தின் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட நிலையில், இன்னமும் ஜாமீன் கிடைக்கவில்லை.. அண்மையில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டார். முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் எந்த நேரமும் கைதாகக்கூடும் என்பதை அறிந்து பதவியை ராஜினாமா செய்தார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதவியில் இருக்கும் போதே கைது செய்யப்பட்டுள்ளார். தேர்தல் நெருங்கும் நிலையில் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டிருப்பது காங்கிரஸ் கட்சியின் இந்தியா கூட்டணியில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தி உள்ளது. கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக டெல்லியில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்க ஆம் ஆத்மி திட்டமிட்டுள்ளது.
பணமோசடி தடுப்பு சட்டம், 2002 நாடாளுமன்றத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட சட்டமாகும், பணமோசடியைத் தடுக்கவும், பணமோசடியில் இருந்து பெறப்பட்ட சொத்துக்களை பறிமுதல் செய்யவும் இயற்றப்பட்ட சட்டம் ஜூலை 1, 2005 முதல் நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தில் கைது செய்யப்பட்ட குற்றவாளி குற்றமற்றவர் என்பதை குற்றவாளிதான் நிருபிக்க வேண்டும், குற்றத்தை அமலாக்கத்துறை நிருபிக்க தேவையில்லை .. அதேபோல் ஜாமீன் அவ்வளவு எளிதில் கிடைக்காது... அமலாக்கத்துறையால் எந்த மாநில முதல்வரையும் எளிதாக கைது எளிதாக முடியும் ..
அதேநேரம் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் மூன்று வருடங்களுக்கும் மேலாக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஒருவருக்கு அரசு பொது வழக்கறிஞர் எதிர்த்தால் ஜாமீன் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்ற பிரிவினை உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு நீக்கிவிட்டது.
அதேநேரம் பணமோசடி தடுப்புச் சட்டத்தில் கைதான ஒருவர் ஜாமீன் பெற வேண்டும் என்றால், குற்றம் சாட்டப்பட்டவர் குற்றத்தில் குற்றவாளி அல்ல என்பதையும், கூடுதலாக ஜாமீனில் வெளியே வரும்போது எந்தவொரு குற்றத்தையும் செய்ய வாய்ப்பில்லை என்பதையும் நீதிமன்றம் நம்ப வேண்டும்.
பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இருக்கிறது. பணப் பரிமாற்ற மோசடி தடுப்புச் சட்டத்தின் 19ஆம் பிரிவின்படி, கைது செய்வதற்கான அதிகாரம் அமலாக்கத்துறைக்கு வழங்கப்பட்டிருக்கிறது.
அதுபோல பணப் பரிமாற்ற மோசடி வழக்குகளில் சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் 5ஆம் பிரிவும், அரசியல் சாசன சட்டத்தின்படி செல்லும். அமலாக்கத்துறை வழங்கும் இ.சி.ஐ.ஆர்., எனப்படும் அமலாக்க வழக்கு தகவல் அறிக்கையை, குற்றம் சாட்டப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. அது இல்லாமலேயே அமலாக்கத்துறை ஒருவர் மீது நடவடிக்கை எடுக்கலாம். கைது செய்யும் போது, எந்த அடிப்படையில் கைது செய்யப்படுகிறார் என்பதை மட்டும் அமலாக்கத்துறை தெரிவித்தால் போதும்.
பணமோசடிக்கு குற்றவாளி எனக் கண்டறியப்பட்ட எந்தவொரு நபருக்கும் மூன்று ஆண்டுகள் முதல் ஏழு ஆண்டுகள் வரை கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படும். அதேபோல் சட்டவிரோத பணப்பரிமாற்றச் சட்டத்தில் மூலம் ஒருவர் சம்பாதித்த சொத்துக்களையும் அமலாக்கத்துறையால் முடக்க முடியும். அந்த முடக்கத்தை ரத்து செய்ய வேண்டும் என்றால், பணமோசடி குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர், குற்றத்தின் மூலம் கூறப்படும் வருமானம் உண்மையில் சட்டப்பூர்வமான சொத்து என்பதை நிரூபிக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
தற்போது தயாநிதி மாறன், கார்த்தி சிதம்பரம், ஆ.ராசா, அனிதா ராதாகிருஷ்ணன், ஜெகத்ரட்சகன், ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோரின் சில சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications