பட்டாசு வெடித்து.. பலகாரம் ருசித்து.. படு ஜோராக தீபாவளி கொண்டாடும் மக்கள்! அதிகாலையே வான வேடிக்கை
சென்னை: தீபாவளி பண்டிகையான இன்று நாடு முழுவதும் இந்து மக்கள் பட்டாசுகள் வெடித்து, பலகாரங்களை ருசித்து கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள்.
இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி இருந்து வருகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் வாழும் இந்துக்கள் பட்டாசுகளை வெடித்து கோலாகளமாக பண்டிகையை கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் இன்று தீபாவளி பண்டிகையை வெகு விமரிசையாக மக்கள் கொண்டாடி வருகிறார்கள். வெளியூர், வெளிமாநிலங்களில் பணி, படிப்பு நிமித்தமாக தங்கி இருந்த தமிழ் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி உள்ளனர். இரவு முழுவதும் ரயில்கள், அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

குடும்பத்தினர், உற்றார், உறவினர்கள், நண்பர்களுடன் பண்டிகையை கொண்டாடி மகிழ பல்வேறு சிரமங்களை கடந்த லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு வந்து இருக்கிறார்கள். காலையே எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு புத்தாடை அணிந்து, பூஜை செய்து, வீட்டில் சமைத்த அல்லது கடைகளில் வாங்கிய இனிப்பு பலகாரங்களை சுவைத்து, பட்டாசு வெடித்து அனைவரும் தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார்கள்.
அதிகாலை முதலே இளைஞர்கள், சிறுவர்கள் பட்டாசுகளை வெடித்து வருவதால் எங்கு வெடி சத்தம் சூழ்ந்து காணப்படுகிறது. நாடே கொண்டாட்ட மனநிலையில் திளைத்திருக்கிறது. ஓராண்டுக்குள் திருமணம் செய்த புதுமணத் தம்பதியினர் இன்று தலை தீபாவளியை கொண்டாடி மகிழ்கின்றனர். மாற்று மதத்தினருக்கு வீட்டில் சமைத்த உணவு பலகாரங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை பரிமாறி வருகிறார்கள்.
தீபாவளியை முன்னிட்டு பட்டாசுகளை வெடிக்க நேரக் கட்டுப்பாடும் விதிக்கப்பட்டு இருக்கிறது. உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தீபாவளிக்கு தமிழ்நாட்டில் 2 மணிநேரம் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசு எச்சரித்து உள்ளது. டெல்லி உள்ளிட்ட பெருநகரங்களில் காற்று மாசு பெரும் பிரச்சனையாக தலைதூக்கியுள்ள நிலையில் இத்தகைய கட்டுப்பாட்டை அரசு விதித்து உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications