நாடு முழுவதும் களைகட்டிய ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்கள்.. தலைவர்கள் வாழ்த்து! வங்கிகளுக்கு விடுமுறை
சென்னை: நாடு முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் விழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தை கொண்டாடும் விழாவாக இது கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்த விழாவுக்கு பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளை கூறியுள்ளனர்.
இந்த சமூகம் என்பது சகோதரத்துவத்தையும் அன்பையும் உள்ளடக்கியது என்பதை வலியுறுத்தும் விதமாக ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் நாம் யார் கைகளில் கயிற்றை கட்டுகிறோமோ அவர்களை காலம் முழுவதும் சகோதர/சகோதரிகளாக பாவித்து அவர்களின் சுக துக்கங்களில் பங்கெடுப்பதை உறுதி செய்ய வேண்டும். நாடு முழுவதும் இந்த விழா கொண்டாடப்படும் என்று சொன்னாலும் கூட வட மாநிலங்களில் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில்தான் இது அதிகமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில் இந்த பண்டிகையை சிறப்பிக்கும் விதத்தில் கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 குறைக்கப்படுகிறது என்கிற அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டிருந்தது. பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகளையும் கூறியுள்ளனர். "ரக்ஷா பந்தன் பண்டிகை நம் குடும்பத்தில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் நாளாகும். கேஸ் சிலிண்டரின் விலை குறைப்பு எனது குடும்பத்தில் உள்ள சகோதரிகளின் வசதியை அதிகரித்து அவர்களின் வாழ்க்கையை எளிதாக்கும். என்னுடைய ஒவ்வொரு சகோதரியும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும், ஆரோக்கியமாக இருக்க வேண்டும், இதுவே என் விருப்பம்" என்று பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.
ரக்ஷா பந்தன் கொண்டாட்டம் காரணமாக வட மாநிலங்களில் ராஜஸ்தான் மற்றும் இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இன்று வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், கேரளா மற்றும் அசாம் மாநிலங்களில் ஆகஸ்ட் மாதம் 31ம் தேதியான நாளை வங்கிகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications