TN Election history: முதலும் கடைசியும்.. 2 தேர்தல்கள்.. மருத்துவமனையில் படுத்தபடி ஜெயித்த எம்.ஜி.ஆர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன் வாழ்நாளில் முதல் மற்றும் கடைசி தேர்தலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே சந்தித்து, களத்திற்கு வராமலேயே இமாலய வெற்றியைப் பெற்றுக் காட்டினார் எம்.ஜி.ராமச்சந்திரன்.

1967ல் திமுக அமோக வெற்றி என்ற செய்தியைக் காங்கிரஸ்காரர்கள் முதலில் நம்பவே இல்லை. அதைவிட விருதுநகரில் காமராஜர் தோற்றுப் போனார் என்ற பெரிய இடி அவர்களுக்குக் காத்திருந்தது. 1942இல் இருந்து ஆட்சியில் இருக்கும் கட்சி. 25 ஆண்டுக்கால சகாப்தம் அச்சு முறிந்த வாகனம்போல் குடை சாய்ந்து கிடந்தது.

The first and the last elections MGR won while confined to a hospital bed

காமராஜரால் அதைத் தாங்க முடியவில்லை என்றார்கள். அது உண்மையில்லை அவர் தைரியசாலி என்றார்கள் கதர் சட்டைகள். திமுக வேட்பாளரான பி.சீனிவாசன் ஓர் இளைஞர். காமராஜரின் அரசியல் சாம்ராஜ்யத்திற்கு முன் அவர் ஒரு சாமானியன். அந்த மாணவர் காமராஜரைத் தேர்தல் களத்தில் வீழ்த்தினார்.

நூற்றாண்டு பழமையான காங்கிரஸ் கட்சியை, தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளே கடந்திருந்த திமுக வீழ்த்திக் காட்டியது. அதற்குக் காரணம் அரிசி பஞ்சம், வறுமை என்றார்கள். கட்டுக்கடங்காத விலைவாசி உயர்வு ஒரு காரணம் என்றது 'தி இந்து'. முதன்முறையாகப் பெண்களின் வாக்குகள் அதிகம் திமுகவுக்கு விழுந்தன. 'புதியதாக உண்டான மக்கள் உணர்ச்சியை பக்தவத்சலம் கண்டுகொள்ளவில்லை. அதுவே காரணம்" என்று தன் நினைவலைகளில் எழுதியுள்ளார் சி.சுப்பிரமணியம். தமிழ்நாட்டில் 10 ஆண்டுக்காலம் (1952-62) வரை நிதியமைச்சராக இருந்தவர்.

1967 மார்ச் 1 அன்று நடந்த சட்டசபைத் தேர்தலில் அண்ணா போட்டியிடவில்லை. கட்சியின் தலைவரான அவர் தென்சென்னை தொகுதியில் மக்களவை வேட்பாளராகப் போட்டியிட்டார். கருணாநிதி, எம்ஜிஆர் உள்ளிட்ட அவரது தம்பிகள் சட்டசபைக்கு நிறுத்தப்பட்டனர். மொத்த வாக்காளர்கள் 2,07,99,362 பேர். பதிவான வாக்குகள் 1,59,25,796. ஆண்கள் 79.19%. பெண்கள் 73.99%. ஒட்டு மொத்தம் 76.57%. விலைவாசி உயர்வு பெண்களை திமுக பக்கம் தள்ளியது.

இந்திப் போராட்டத்தை பக்தவத்சலம் தன் ஆட்சிக்காலத்தில் மிகக் கொடூரமாக ஒடுங்கியதால், மாணவர்களின் ஓட்டுக்களை திமுக வாரிச் சுருட்டியது. அதன் அடையாளமே விருதுநகரில் இளைஞர் சீனிவாசனின் வெற்றி. இந்தக் காரணங்களைத் தாண்டி திமுகவின் வெற்றிக்கு ஒரு தனிநபர் காரணமாக இருந்தார். அவர் திமுக நட்சத்திர வேட்பாளர் ம.கோ. இராமச்சந்திரன். ஆம் எம்ஜிஆரேதான்.

எம்.ஜி.ஆரை சுட்ட ராதா

1967 ஜனவரி மாதம் 12 ஆம் தேதி எம்ஜிஆர் வீட்டில் ஓர் அதிர்ச்சி சம்பவம் நடந்தேறியது. எம்.ஜி.ஆரை நடிகர் எம்.ஆர்.ராதா சுட்ட சம்பவம் நடந்த அன்றுதான். சுமார் 5 மணி அளவில் நந்தம்பாக்கம் செயின்ட் தாமஸ் சாலையில் எம்ஜிஆர் வீட்டுக்குச் சென்ற ராதா இந்தப் படுபாதக செயலை செய்தார் எனச் செய்தி பரவியது. நாடு முழுவதும் உள்ள எம்ஜிஆர் ரசிகர் மத்தியில் காட்டுத் தீ போல் செய்தி பரவியது. ரசிகர்கள் தெய்வமாக வழிபடும் நடிகரின் உயிருக்கு ராதா விலை பேசத் துணிந்ததை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

இந்தச் சம்பவத்தை நேரில் கண்டவர் கே.கே.வாசு மட்டுமே. 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தின் தயாரிப்பாளர். அவர் ராதாவிடம் கடன் பெற்றுப் படத்தைத் தயாரித்திருந்தார். நல்ல வசூல் வேட்டை செய்ததால், பணத்தை வட்டியும் முதலுமாக அவர் திரும்ப அடைந்திருந்தார். மீண்டும் ஒரு படத்தைத் தயாரிக்கப் பேச்சுவார்த்தை நடத்தவே அவர் ராதாவுடன் எம்ஜிஆர் இல்லம் சென்றிருந்தார். ராதா வரும்போது ஒரு கைப்பையுடன் வந்ததாகச் சொல்லப்பட்டது.

பேச்சுவார்த்தைக்கு நடுவே ராதா எழுந்து நின்று எம்.ஜி.ஆரை சுட்டதாகவும், பயங்கர சத்தத்திற்குப் பின் கழுத்தில் குபுகுபு என ரத்தம் வெளியேறியபோது எம்ஜிஆர் உணர்ந்ததாகவும் பின்னர் வாக்குமூலம் மூலம் அறியமுடிந்தது. இதை ராதா மறுத்தார். எம்ஜிஆர் துப்பாக்கியைக் காட்டி மிரட்டவே அதை மடக்கித் தான் சுட்டதாகச் சாட்சியம் சொன்னார். அதில் குழப்பங்கள் மலிந்தன.

எம்ஜிஆர் சுட்டப்பட்டது உண்மை. காமராஜர் சம்பந்தமான உரையாடலுக்கு இடையேதான், வெகுண்டு எழுந்த ராதா எம்ஜிஆரை சுட்டார் என்றும் சொல்லப்பட்டது. எம்ஜிஆரைச் சுட்ட ராதா தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். தான் காயமடைந்து, உயிருக்கு ஆபத்தான நினைவில் இருப்பதை உணர்ந்த எம்ஜிஆர், வீட்டிலிருந்து வெளியேறி தன் ஓட்டுநரை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு இட்டுச் செல்ல உத்தரவிட்டார்.

அங்கு அவருக்குச் சிகிச்சை நடைபெற்ற நிலையில், வெளியே கலவரம் வெடித்தது. ராதா வீடு சூறையாடப்பட்டது. முன்னதாகவே ராதாவும் சிகிச்சைக்காக மருத்துவனைக்குக் கொண்டுவரப்பட்டார். எம்ஜிஆரின் உடலில் இரண்டு இடங்களில் குண்டு பாய்ந்திருந்து. கழுத்தில் புகுந்த குண்டு ஒன்று முதுகெலும்பில் நடுவே, வெளியேற முடியாமல் சிக்கி நின்றது. அதை அகற்ற மருத்துவர்கள் போராடினர். அதை வெளியேற்றினால் உயிருக்கே உலையாகிவிடும் என்பதால், அகற்ற வேண்டாம் என முடிவு செய்தனர்.

அமெரிக்காவில் எம்ஜிஆர்

பின்னர் அறுவைச் சிகிச்சைக்காக எம்ஜிஆரும் ராதாவும் ஒரே ஆம்புலன்சில் அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டனர். சிகிச்சைக்குப் பின் மறுநாள் காலை 11 மணிக்கு இருவரும் ஒரேசேர சுயநினைவுக்குத் திரும்பினர். குணமடைந்த பின்னர் ராதா சென்னை மத்தியச் சிறை 'முதல்' வகுப்பில் அடைக்கப்பட்டார். அதாவது ஜனவரி 30 வரை அவர் மருத்துவமனையில் இருந்தார். குற்றப்பத்திரிகை பிப்ரவரி 27 அன்று தாக்கல் செய்யப்பட்டது. அவர் 1971இல்தான் வெளியே வந்தார். விசாரணையில் கைத்துப்பாக்கியின் உரிமம் ராதாவின் பெயரிலிருந்தது கண்டறியப்பட்டது. அதன் உரிமம் 1964இல் காலாவதியாகி இருந்தது.

எம்ஜிஆரை ராதா சுட்ட சம்பவம் திமுக வெற்றியில் ஒரு முக்கிய பங்காற்றியது. ஏனெனில் பரங்கிமலை தொகுதிக்கான வேட்பு மனுவை மருத்துவமனையில் குண்டடிபட்டு கழுத்தில் கட்டுக்கட்டிய நிலையில் தாக்கல் செய்த புகைப்படம் பத்திரிகைகளில் வெளியாகினர். அதைக் கண்டு மக்கள் கதிகலங்கினர். மேலும் அவர் தொகுதிக்குச் செல்ல இயலாததால், அவரது புகைப்படங்களை கட் அவுட் மூலம் வண்டிகளில் வைத்து பிரச்சாரம் செய்யப்பட்டது. முதன்முறையாக இந்தக் கலாச்சாரத்தை அரசியலில் அவரே தொடங்கிவைத்தார்.

அவர் 54,106 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். காங் வேட்பாளர் டி.எல்.ரகுபதி பெற்ற வாக்குகள் 26,432. திமுக மட்டும் 174 தொகுதிகளில் போட்டியிட்டு 137 இடங்களை வென்றது. இக்கட்சி பெற்ற வாக்குகள் 62,30,552 ஆகும்.

அடுத்து 1984 தேர்தல். அக்டோபர் 5 அன்று மூச்சுத் திணறல் காரணமாகச் சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார் எம்ஜிஆர். 16 அன்று பிரதமர் இந்திரா காந்தி சந்தித்து அனைத்து உதவிகளையும் அரசு செய்யத் தயாராக உள்ளது என்றார்.

நவம்பர் 20 அன்று ஜப்பானிய நரம்பியல் மருத்துவர் அவரை பரிசோதித்து அறிக்கை அளித்தார். 25 அன்று அவருக்குப் பக்கவாதம் ஏற்பட்டது அறியப்பட்டதாக 'தி ஹிந்து' செய்தி கூறியது. பின் அமைச்சரவை அவரை அமெரிக்காவுக்குச் சிகிச்சைக்கு அனுப்புவது என்று முடிவு செய்து அனுப்பியது.

ஆக, 1984 தேர்தல் போது எம்ஜிஆர் பற்றிய செய்திகளின் தாக்கம் பலமாக இருந்து. அவர் மீண்டுவரத் தெய்வத்தைத் தொழுதார்கள் மக்கள். அதற்கான உபகாரமாக அதிமுகவுக்கு அமோக ஆதரவு குவிந்தது. ஆண்டிபட்டியில் எம்ஜிஆருக்குப் பதிவான வாக்குகள் 60,510. அவரை எதிர்த்து நின்ற திமுக வேட்பாளர் தங்கராஜ் என்ற வல்லரசுக்கு 28,026 வாக்குகளே விழுந்தன. அதாவது 32,484 இடைவெளி. தேர்தல் பிரச்சாரத்திற்கு வராமலே பத்திரிகைகளில் வெளியான அவரது முகத்தைப் பார்த்து மக்கள் வாக்களித்தனர். அதிமுக 132 தொகுதிகளில் வென்றது.

முதல் முறையில் மருத்துவமனையில் படுத்துக்கொண்டே வெற்றிபெற்ற எம்.ஜி.ராமச்சந்திரன் அவரது இறுதி தேர்தலிலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபடியே வென்று காட்டினார். அதுவரை வேறு யாரும் செய்திராத சாதனை அது.

எழுதியவர்: கடற்கரய்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+