மது விலக்கை தந்த முதல் முதல்வர்! அமெரிக்கா பாராட்டிய சேலம்! 23 வருடம் மது இல்லாத தமிழ்நாடு
சென்னை: தமிழ்நாட்டில் உள்ள சேலம் மாவட்டத்தில் ராஜாஜி முதன்முதலாக மது விலக்குக் கொள்கையை நடைமுறைப்படுத்தினார்.
விசிக மது ஒழிப்பு மாநாடு திமுகவுக்கு தலைவலி தரும் விசயமாக மாறும் எனப் பலரும் விவாதித்துக் கொண்டிருந்த தருணத்தில், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து தங்கள் கட்சி மாநாட்டுக்கு ஆதரவைப் பெற்றுள்ளார் திருமாவளவன். கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திமுக மது ஒழிப்பு பற்றிப் பேசியது. ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் சாராய ஆலைகளை அவரது ஆதரவாளர்களே நடத்துவதாகக் கூட குற்றஞ்சாட்டி இருந்தது. எனவே திமுகவுக்கு மது விலக்கு ஒன்று புதியதல்ல.

எதிர்க்கட்சியாக திமுக இருந்தபோது மது ஒழிப்பைக் கடுமையாகக் கையில் எடுத்துப் பேசி இருப்பதைப் பலரும் கவனித்து இருக்கலாம். குறிப்பாக கொரோனா ஊரடங்கு காலங்களில் மதுக்கடைகள் நடத்தப்படுவது குறித்து ஸ்டாலின் பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். நேரத்தைக் குறைக்கவேண்டும் என்று வாதிட்டார். இப்போதுகூட மது ஒழிப்பு பற்றி ஸ்டாலின் பேசிய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஒரு தேர்தல் பிரச்சாரத்தின் போது கனிமொழி, திமுக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து மது விலக்குதான் என்று பேசிய வீடியைவை வைத்து அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் பல காலமாக ட்ரோல் செய்து வருகின்றனர். அதற்கு அவர் தொடர்ந்து விளக்கங்களை அளித்து வருகிறார்.
உதயநிதியிடம் ஒரு முறை மது விலக்கு பற்றி கேள்வி எழுப்பிய போது, திமுக மது ஒழிப்பைக் கொண்டு வரும் என்று மக்களிடம் வாக்கு கேட்டோம். அந்தத் தேர்தலில் மக்கள் எங்கள் கொள்கையை ஆதரிக்கவில்லை. திமுக தோல்வியைத் தழுவியது. அதனால் நாங்கள் அதனை அடுத்துச் செயல்படுத்துவோம் எனச் சொல்லி வாக்குறுதி எதுவும் தரவில்லை என்று பதிலளித்திருந்தார்.
தமிழ்நாட்டில் மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்றும் கள்ளு விற்பனைக்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றும் தொடர்ந்து நல்லசாமி போராடி வருகிறார். அவர் இது தொடர்பாக வழக்குகளைக் கூட போட்டுள்ளார். கள்ளுக்கடைகளை அரசு திறப்பது பற்றி பரிசீலனை செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தலைவர்களில் ஒருவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் கூட கருத்து தெரிவித்துள்ளார். இவரை ஏன் சொல்கிறோம் என்றால், காந்தி மது ஒழிப்பு பற்றிப் பேசிய காலத்தில் தன்னிடம் இருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி வீசியவர் பெரியார். அவரது குடும்பத்தைச் சேர்ந்த இவரே கள்ளுக்கடைக்கு ஆதரவு கொடுத்துள்ளார்.
அதேபோல அண்ணாமலை, பூரண மது விலக்குக்குச் சாத்தியம் இல்லை. கள்ளுக்கடை திறப்பது குறித்து அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என்று பேசி இருக்கிறார். இந்தக் கள்ளுக்கடை திறப்பை திருமாவளவனும் ஆதரித்துள்ளார்.
தமிழக அரசியலில் மதுப் பழக்கத்தை எதிர்த்து அதிகம் போராடிய கட்சி பாமக. அந்தக் கட்சி ரஜினியின் 'பாபா' படம் வெளியானபோது மிகப்பெரிய போராட்டத்தை நடத்தியது. அந்தப் படத்தில் ரஜினி சிகரெட் பிடிப்பதைப் போல உள்ள காட்சிக்கு எதிராகக் களத்தில் நின்று போராட்டத்தை நடத்தியது. ஒரு பெரிய ஹீரோவின் ஆதரவு தங்கள் கட்சிக்கு கிடைக்காதா என்று பல ஆண்டுகள் பழமையான கட்சிகள் தவம் கிடந்த காலத்தில் செல்வாக்கு மிக்க நடிகரான ரஜினியை பாமக எதிர்த்தது. அது மிகப்பெரிய சர்ச்சையாகவும் பாமக மற்றும் ரஜினி ரசிகர்களிடையே பகையாகவும் மாறியது.
கடந்த 2004 ஆம் ஆண்டு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக அன்புமணி பதவியிலிருந்தபோது புகையிலை பொருட்கள் விற்பனைக்கு எதிராக மிகக் கடுமையாக நடவடிக்கைகளை எடுத்தார். அதைப் பயன்படுத்துவோர் மீதும் விற்பனை செய்வோர் மீதும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளச் செய்தார். இந்திய அரசியல் கட்சிகளிலேயே முதல்முறையாக நாடு தழுவிய தேசிய மது விலக்குக் கொள்கையை உருவாக்கி அக்டோபர் 2 ஆம் தேதி உலக மது ஒழிப்பு தினமாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

ஆனால், மது ஒழிப்பில் நீண்ட வரலாறு கொண்ட பாமகவை தங்களின் மாநாட்டுக்கு அழைக்கப் போவதில்லை என்று திருமாவளவன் சொன்னதை மிகப்பெரிய அரசியல் சறுக்கலாகவே இந்த விசயத்தில் பலரும் கருதுகின்றனர். ஆனால், பாமகவை அழைத்தாலும் அழைக்காவிட்டாலும் விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாட்டை எங்கள் கட்சி ஆதரிக்கும் என்று அன்புமணி அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மேலும் விசிக மாநாட்டு பற்றிப் பேசும் போது, "மது ஒழிப்பில் பாமக பிஹெச்டி படித்துள்ளது. ஆனால், திருமாவளவன் இப்போதுதான் எல்.கே.ஜி வந்துள்ளார். இப்போது அவர் மது ஒழிப்பைத் தொடங்கி இருக்கிறார். பாமக நிறுவனர் ராமதாஸ் கட்சி தொடங்குவதற்கு முன்பே மது எதிர்ப்பு போராட்டங்களை நடத்தியவர். மது ஒழிப்பு போராட்டத்தால் பாமகவைச் சேர்ந்த 15 ஆயிரம் பெண்கள் சிறைக்குச் சென்றிருக்கிறார்கள்.
பாமக நடத்திய தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாகத்தான் தமிழ்நாட்டில் 3ஆயிரத்திற்கும் மேலான மதுக்கடைகளையும் இந்திய முழுக்க 90 ஆயிரம் மதுக்கடைகளையும் மூடி இருக்கிறோம். டாஸ்மாக் மது விற்பனை நேரத்தைக் குரைக்க பாமக தான் நடவடிக்கை எடுத்தது" என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டில் மது ஒழிப்பு, போதைப் பொருட்கள் ஒழிப்பு, பசுமை இயக்கம் என பல முன்னோடியான போராட்டகளை தொடங்கியது பாமகதான். ஒரு காலத்தில் திருமாவளவனை ஆதரித்தவர் தனது கூட்டணியில், போராட்டங்களில் இணைத்துக் கொண்டவர் ராமதாஸ். அவரை இந்த மது ஒழிப்பு விசயத்தில் விசிக புறக்கணிக்கவே முடியாது என்று பலரும் வாதிடுகின்றனர்.
இவற்றை எல்லாம் கடந்த தமிழ்நாட்டில் முதன்முதலாக மது விலக்கை அமல்படுத்திக் காட்டியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் முன்னாள் முதல்வர் இராஜகோபாலாச்சாரி. மது ஒழிப்புக்காகவே 'விமோசனம்' என்று ஒரு பத்திரிகையை நடத்தினார் ராஜாஜி. அதன் ஆசிரியர் யார் தெரியுமா? பிரபல எழுத்தாளர் கல்கி. இவர் திருவிகவின் 'தேசபக்தன்' பத்திரிகையில் வேலை பார்த்து வந்தார். அந்த வேலையை விட்டுவிட்டு ராஜாஜியின் மது ஒழிப்பு ஆதரித்து 'விமோசனம்' பத்திரிகையில் இணைந்தார். இந்தப் பத்திரிகை மதுவுக்கு எதிராக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது.
அதன்பின்னர் 1937இல் ராஜாஜி மெட்ராஸ் பிரசிடென்சியின் முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார். உடனே தனது சொந்த மாவட்டமான சேலத்தில் மது விலக்கு கொள்கையை அமல்படுத்தினார். அதன் மூலம் அரசுக்கு ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட 1939இல் விற்பனை வரியை விதித்தார். இந்த மது விலக்கை அமெரிக்கா பத்திரிகை டைம்ஸ் பாராட்டி எழுதியது. அமெரிக்காவில் சேலம் என்று பெயரில் ஒரு ஊர் இருக்கிறது. அதைச் சுட்டிக்காட்டிய டைம்ஸ், இந்தியாவில் இதே பெயரில் ஒரு ஊர் உள்ளது. அங்கே மதுவிலக்கு கொள்கை அமலில் உள்ளது எனக் கூறி வியந்தது.
சேலத்தில் உள்ள புதிய கலெக்டர் அலுவலகத்தின் முன்பாக உள்ள கல்வெட்டில் இதற்காகச் சான்று உள்ளதை இப்போதும் பார்க்க முடியும். அதில், 'இந்தியாவில் முதன்முதலாக மது விலக்கும் அமல்படுத்தப்பட்டது' என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இவரைத் தொடர்ந்து 1948இல் முதல்வராக இருந்த ஓமந்தூர் ரெட்டியார் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கைக் கொண்டுவந்தார். இந்த நடைமுறை 23 ஆண்டுகள் தமிழ்நாட்டில் கடைப்பிடிக்கப்பட்டு வந்தது. அப்போது மது இல்லாமல் மக்கள் யாரும் கலகத்திலோ, கலவரத்திலோ ஈடுபடவில்லை. அரசை எதிர்த்து வன்முறையையும் செய்யவில்லை என்பது வரலாறு.












Click it and Unblock the Notifications