இனி ஒன்லி வெஜ்..சாலையோர ஓட்டல்களில் இனி சைவம் மட்டும் தான்..அதிரடி கட்டுப்பாடுகள் விதித்த தமிழக அரசு
சென்னை : தமிழகத்தில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படும் மோட்டல்கள் எனப்படும் சாலையோர உணவகங்களில் இனி சைவ உணவு மட்டும் தான் தயாரிக்க வேண்டும், உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் MRP இருக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு அதிரடி நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது.
தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் பயணம் இடைவேளைக்காக சாலையோரங்களில் அமைக்கப்பட்டிருக்கும் பயண வழி உணவகங்களில் இறங்கி வருவது வழக்கம்.
சென்னை சாலையில் மட்டுமல்லாது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இது போன்ற உணவகங்கள் செயல்பட்டு வருகிறது. நீண்ட தூர பயணம் செய்யும் பயணிகள் கண்டிப்பாக உணவு அல்லது அவசர தேவைக்காக இறங்கியே ஆகவேண்டும் என்ற கட்டாயம் உள்ளதால் மோட்டல் நிர்வாகத்தினர் அராஜகம் செய்யதாக புகார் எழுந்துள்ளது.

சாலையோர உணவகங்கள்
இந்நிலையில், சாலையோர உணவங்களில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் நின்று செல்ல, ஓராண்டு உரிமம் பெறுவதற்கு உணவகங்களிடம் இருந்து ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. அதில் அரசுப் பேருந்துகள் தங்களது உணவகத்தில் நிறுத்தம் செய்ய சாலையோர உணவகங்களுக்கு பல்வேறு நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளது. அதன்படி, " உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும் எனவும், மேலும் சாலையோர உணவங்களில் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்வேறு நிபந்தனைகள்
உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். பயோ-கழிவறை இருக்க வேண்டும் குறிப்பாக கழிப்பறை வசதியை வாடிக்கையாளர்களுக்கு இலவசமாக வழங்க வேண்டும், பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாகத் தெரியும்படி உணவகத்தின் இடம் இருக்க வேண்டும். உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி CCTV பொருத்தியிருக்க வேண்டும்.

நியமான எம்ஆர்பி
பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும். உணவகத்தில் விற்கப்படும் உணவுப் பொருட்களின் விலைப்பட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும். உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் M.R.P. இருக்க வேண்டும். எம்.ஆர்.பி விலையை விட அதிகமில்லாமல் அனைத்து உணவும் விற்கப்பட வேண்டும்.

புகார் பெட்டி கட்டாயம்
உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு ஏதேனும் இடையூறு தரும் செயலோ, புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படாவண்ணம் இருக்க வேண்டும். உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்ட புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்." என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நிபந்தனைகளை பின்பற்றும் சாலையோர உணவகங்களுக்கு மட்டுமே அரசு பேருந்துகள் நின்று செல்ல ஒப்பந்தம் அளிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications