வக்பு வாரியத் தலைவர் மீதான புகார்! முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்க! உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை: தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீதான புகாரில் முகாந்திரம் இருந்தால், வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.
வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மான் மீதான புகாரின் விவரம் வருமாறு;

வக்பு வாரியம்
வக்பு வாரிய பாதுகாப்புக்குழு அறக்கட்டளை தலைவரான மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் தாக்கல் செய்திருந்த மனுவில், தமி்ழ்நாடு வக்பு வாரிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அப்துல் ரஹ்மான், வக்பு வாரிய அலுவலக உபயோகத்துக்கான காரில் தேசியக்கொடி, தமிழக அரசின் சின்னம், மற்றும் ஊதா நிற சுழல் விளக்குடன் வலம் வந்து கொண்டிருப்பதாக கூறி, உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

முகாந்திரம் இருந்தால்
ஆனால், வக்பு வாரிய தலைவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய, அரசின் முன் அனுமதி பெற வேண்டும் எனக்கூறி ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தனது மனுவை திருப்பி அனுப்பி விட்டதால், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி, இதுதொடர்பாக சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, மனுதாரரின் புகாரில் முகாந்திரம் இருந்தால் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கலாம் என உத்தரவிட்டுள்ளார்.

காவல்துறையினர்
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மதுரை கட்ராபாளையத்தைச் சேர்ந்த எம்.அஜ்மல்கான் முன் வைக்கும் புகார் குறித்து, தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவர் அப்துல் ரஹ்மானிடம் சென்னை வடக்கு கடற்கரை காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்துவார்கள் எனத் தெரிகிறது. தமிழகம் முழுவதும் பல நூறு கோடி மதிப்புடைய வக்பு சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு வருவதாக அப்துல் ரஹ்மான் பெருமிதம் தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஐ.யூ.எம்.எல். கட்சி
தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவராக இருக்கும் அப்துல் ரஹ்மான் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்தவர் என்பதும் வேலூர் நாடாளுமன்ற தொகுதியின் முன்னாள் எம்.பி. என்பதும் கூடுதல் தகவலாகும்.












Click it and Unblock the Notifications