‘நிர்வாண வீடியோ’ பெண்களை சந்தித்த கனிமொழி! மணிப்பூர் திக்திக்! ஜனாதிபதியிடம் விளக்கிய ‘இந்தியா’ குழு
சென்னை: 'குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் இந்தியா' கூட்டணி எம்.பிக்கள் சார்பில் மணிப்பூர் கலவரம் குறித்து நடத்தப்பட்ட ஆய்வறிக்கையைக் கூட்டணிக்கட்சியின் தலைவர்கள் இன்று அளித்துள்ளனர். அந்தச் சந்திப்பில் குடியரசுத் தலைவர் பேசியது என்ன? அவர் அளித்த வாக்குறுதி நம்பிக்கை தருவதாக உள்ளதா? அறிக்கையில் கூறப்பட்டுள்ளது என்ன? புட்டு புட்டு வைத்த 'இந்தியா' கூட்டணி தலைவர்கள்.
காங். தலைவர் மல்லிகார்ஜுன கார்கே:

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிக்கார்ஜுனே கார்க்கே, "எங்கள் கூட்டணிக் கட்சியின் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து குடியரசுத் தலைவரைச் சந்தித்தோம். மணிப்பூரில் நடைபெற்றுவரும் கலவரம் பற்றிச் சொன்னோம். எங்கள் எம்.பி குழு என்னவெல்லாம் மணிப்பூரில் பார்த்ததோ, அதை எல்லாம் குடியரசுத் தலைவரிடம் சொன்னோம்.
கிட்டத்தட்ட 5000 வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. 200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 500 பேர் காயமடைந்துள்ளனர். 60 ஆயிரம் பேர்களுக்கு மேல் இந்தக் கலவரத்தால், இடம்பெயர்ந்துள்ளனர்.
பலருக்கும் உணவு இல்லை. குடிநீர் இல்லை. குழந்தைகளுக்கு போதுமான சாப்பாடு இல்லை. அதை எல்லாம் எங்களது மனுவில் குறிப்பிட்டு, குடியரசுத் தலைவரிடம் கொடுத்துள்ளோம். அவர் பரிசீலிப்பதாகச் சொன்னார்.
இந்தக் கலவரம் குறித்து இரண்டு அவைகளிலும் விவாதிக்க வேண்டும். பிரதமர் அவைக்கு வந்து விளக்கம் அளிக்கவேண்டும் என்பதையும் வலியுறுத்தினோம். அதைச் செய்யத் தவறினால், நாங்கள் இரு அவைகளிலும் Rule 176 vs Rule 267 ஆகிய இரண்டையும் மீண்டும் மீண்டும் கொண்டுவருவோம்.
அதையும் தாண்டி நம்பிக்கை இல்லாத தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளோம். அவையில் மோடி விவாதித்தால்தான் மக்களுக்கு உண்மைகளை நாங்கள் சொல்ல முடியும். அரசு தரப்பு விளக்கங்களைத் தெரிவித்தால், எங்கள் வசம் சில தரவுகள் உள்ளன. அதையும் நாங்கள் விளக்கி விவாதிப்போம்.
ஆனால், இதுவரை அரசு அதைச் செய்யாமல் தட்டிக்கழிக்கிறது. எங்களுக்கு வாய்ப்பு கிடைக்குமா தெரியவில்லை? நாங்கள் சொல்லவே முடியவில்லை.

எதிர்க்கட்சியின் தலைவரான எனது மைக்கை கூட ஆஃப் செய்து விட்டார்கள். இரண்டு செகண்ட்டில் மைக்கை அமைத்துவிட்டார்கள். இது ஜனநாயகம் இல்லை. இவர்கள் ஜனநாயகமாக நடந்துகொள்ளவில்லை. மணிப்பூரில் விலை உயர்ந்த ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் வந்துள்ளன. அவை எங்கிருந்து வந்தன?
குக்கி மற்றும் மைத்தி ஆகிய இரண்டு குழுக்கள் அங்கே சண்டையிடுகின்றார்கள். அவர்களைச் சந்தித்து பிரதமர் மோடி சமாதானம் பேச வேண்டும். அமைதி திரும்ப வழி செய்ய வேண்டும். பிரதமர் அங்குச் சென்றால்தான் அமைதி வரும். ஆகவே அதை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்" என்கிறார்.
திமுக எம்.பி திருச்சி சிவா:

திமுக எம்.பி. திருச்சி சிவா, "நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கிய 21 உறுப்பினர்கள் மணிப்பூர் நிலவரம் குறித்து நேரடியாக ஆய்வு செய்வதற்காக 'இந்தியா' கூட்டணி சார்பாகச் சென்றிருந்தோம். அங்குள்ள களநிலவரத்தைப் பார்த்தோம்.
அதன் பின்னால் அங்குள்ள மக்களுடன் கலந்து பேசினோம். அங்கு நாங்கள் கள ஆய்வு மூலம் திரட்டிய தரவுகளை ஒன்றாகத் திரட்டி, அதை ஒரு அறிக்கையாக இன்றைக்குக் குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்தோம். அந்தச் சந்திப்பில் 21 உறுப்பினர்களின் சார்பாக உள்ள கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் சந்திப்பிலிருந்தனர்.
எங்கள் அனைவரின் சார்பாக மல்லிகார்ஜுன கார்கே மணிப்பூர் நிலைமைகளை விளக்கிச் சொன்னார்கள். அனைத்தையும் மிகப் பொறுமையாகக் குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டர். அறிக்கையைக் குறித்து ஆலோசித்த பிற்பாடு, நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

குறிப்பாக எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு விளக்கம் அளிப்பதற்காகப் பிரதமர் மோடியை அவைக்கு அழைத்திருந்தோம். ஆனால், அவர் அவைக்கு வரவில்லை. அவர் அவைக்கு வந்து விவாதிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. அவர் இந்தக் கலவரம் குறித்துப் பேசவேண்டும் என்பதே எங்களின் அக்கரையே தவிர, வேறு எந்தவகையான நிர்ப்பந்தமும் இல்லை. எனவே அனைத்து விவகாரங்களையும் நாங்கள் விளக்கிக் கூறினோம்" என்கிறார்
திமுக எம்பி கனிமொழி:

திமுக எம்.பி., கனிமொழி, "நாங்கள் மணிப்பூர் கலவரம் தொடர்பாகச் செய்த ஆய்வின் அறிக்கையைக் குடியரசுத் தலைவரிடம் வழங்கினோம். குறிப்பாக அந்த அறிக்கையில் கிட்டத்தட்ட 92 நாள்கள் கடந்த பிறகும் அந்த மாநிலத்தில் ஒரு அமைதியான சூழல் திரும்பவில்லை என்பதைச் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
பல பேரின் வீடுகள் எரிக்கப்பட்டுள்ளன. பல பேரின் வீடுகள் சிதைக்கப்பட்டுள்ளன. அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பறிக்கப்பட்டுள்ளது. பலர் உயிரிழந்திருக்கிறார்கள். பல பெண்கள் மீது வன்முறை நடத்தப்பட்டுள்ளது. பலர் காயப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றார்கள்.
மக்கள் கூட்டம் கூட்டமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் போதுமான உணவுகள் கிடைக்கவில்லை. அங்கே உணவுப் பற்றாக்குறை உள்ளது. பாதுகாப்பும் உறுதி செய்யப்படவில்லை. அம்மாநிலத்தில் உள்ள அரசு இதைப்பற்றி எல்லாம் கவலைப்படுவதாக இல்லை.
மணிப்பூர் குறித்து வெளியான வீடியோ பதிவிலிருந்த 2 பெண்களை நாங்கள் சந்தித்துப் பேசினோம். 'எங்களை வன்முறையாளர்களிடம் விட்டுவிட்டுச் சென்ற அந்தக் காவல்துறை அதிகாரிகள் மீது இதுவரை ஒரு நடவடிக்கை கூட எடுக்கப்படவில்லை. அவர்களை அரசு இடைநீக்கம் கூடச் செய்யவில்லை' என்பதைச் சொன்னார்கள். இப்படிப் பட்ட சூழலில் எப்படி பெண்கள் தைரியமாக மணிப்பூரில் வாழ முடியும்?
அரசு இதற்கு எல்லாம் பொறுப்பேற்றுக் கொண்டு அம்மாநிலத்தில் முதலமைச்சர் பதவி விலகவேண்டும். இது 'இந்தியா' கூட்டணியின் கோரிக்கை மட்டுமல்ல; அந்த மாநிலத்தில் உள்ள மக்களின் கோரிக்கையும் அதுதான். அதை அம்மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். எங்களிடமும் இதைச் சொன்னார்கள்.
இதைப்பற்றி எல்லாம் நாடாளுமன்றத்தில் விவாதிக்க நிலையே நீடிக்கிறது. பிரதமர் அது குறித்து விவாதிக்கத் தயாராக இல்லை. ஆகவே, அந்த மக்களுக்கு நியாயம் வழங்கப்படவில்லை என்பன போன்ற பல விசயங்களைக் குடியரசுத் தலைவரிடம் விளக்கிக் கூறினோம்.
இதைக் குடியரசுத் தலைவருக்குத் தெரிவிப்பது எதிர்க்கட்சிகளாகிய எங்களின் கடமை. அவரும் நாட்டின் குடிமகனாக இருந்து இது குறித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவார் என நாங்கள் நம்புகிறோம்.
விசிக எம்.பி. திருமாவளவன்:

விசிக எம்பி, திருமாவளவன், "இன்று காலை 11:30 மணிக்கு 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த அனைத்துக் கட்சித் தலைவர்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்தோம். 11:45 மணி அளவில் எங்கள் குழுவைக் குடியரசுத் தலைவர் சந்தித்தார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகாஜுனே கார்கே, மணிப்பூரில் நாங்கள் மேற்கொண்ட ஆய்வு குறித்து எல்லாம் விளக்கிச் சொன்னார். அதன்பின்னர் காங்கிரஸ் கட்சியின் மக்களைக் குழுத் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி மணிப்பூர் விவகாரத்தைப் பற்றி குடியரசுத் தலைவரிடம் விளக்கினார்.
பின்னர் கோரிக்கை மனுவைக் குடியரசுத் தலைவர் பெற்றுக்கொண்டார். 'உங்கள் கோரிக்கைப் பரிசீலிக்கப்படும்' என்று சில வார்த்தைகள் மட்டுமே பகிர்ந்துகொண்டார்.
பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்லவேண்டும். அங்குள்ள இரண்டு தரப்பு மக்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவேண்டும். அங்கே அமைதியை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கை மனுவில் நாங்கள் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறோம்.
ஆனால், குடியரசுத் தலைவரின் பேச்சு திருப்தி அளிக்கும்படி இல்லை. அவர் பரிசீலிக்கிறோம் என்று ஒற்றை வார்த்தை மட்டுமே சொன்னார். தலையசைத்துக் கேட்டுக் கொண்டார். ஆனாலும் எங்கள் தலைவர்கள் சொன்னதை எல்லாம் பொறுமையாகக் கேட்டுக் கொண்டார் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்" என்கிறார்.












Click it and Unblock the Notifications