ஏப்ரல் டூ ஜுன்.. 3 மாதம் ரொம்ப பாதுகாப்பா இருங்க மக்களே.. வெப்ப அலை அதிகரிக்க போகுதாம்! ‛வார்னிங்’
சென்னை: இந்த ஆண்டு நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலையானது வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் மார்ச் மாதம் கோடைக்காலம் தொடங்கும். இந்த முறை சற்று முன்னதாக பிப்ரவரி கடைசி வாரத்திலேயே கோடை தொடங்கிவிட்டது. கோடைக்காலங்களில் இந்தியா பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கிறது. அதில் முக்கியமானது, மின்சார தட்டுப்பாடு. கடந்த ஆண்டு கோடை காலத்தில் கேரளா முன்னெப்போதும் இல்லாத மின்சார தட்டுப்பாட்டை எதிர்கொண்டது. காரணம், நீர்மின் உற்பத்தி செய்யப்படும் நீர் நிலைகளில், நீரின் அளவு குறைந்ததுதான்.

இந்த முறை கேரளா மட்டுமல்லாது, மொத்த இந்தியாவிலும் நீர் மின் உற்பத்தி சரிவை சந்தித்திருக்கிறது. கடந்த 38 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவில் நீர் மின் உற்பத்தியானது குறைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அடுத்து வரும் நாட்களிலும் உற்பத்தி குறையும் என்பதால், மின்சார உற்பத்திக்கு நிலக்கரி பயன்பாடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இதில் மற்றொரு சிக்கல் இருக்கிறது.
அதாவது, கரியமில வாயு குறைப்பு குறித்த பாரிஸ் ஒப்பந்தத்தில் இந்தியாவும் கையெழுத்திட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், கடந்த 2005ல் இந்தியா எந்த அளவுக்கு கரியமில வாயுவை வெளியேற்றியதோ, அந்த அளவிலிருந்து 45%ஐ குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறது. ஆனால், மின்சார உற்பத்திக்காக நிலக்கரி அதிக அளவு பயன்படுத்தப்பட்டால், ஒப்பந்தத்தில் கூறியுள்ளதை சாத்தியப்படுத்த முடியாது.
வானிலையை பொறுத்த அளவில் இந்தியாவின் கிழக்கு, வடகிழக்கு பகுதிகள் மற்றும் வடமேற்கு பகுதியை தவிர மற்ற பகுதிகளில் வெப்பம் அதிகரிக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது, வங்க கடலை ஒட்டியுள்ள பகுதிகள், அசாம், மேகாலயா, மணிப்பூர் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் இந்த முறை வெப்பம் இயல்பாகதான் இருக்கும்.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, பீகார் மேற்கு ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வெப்ப அலை தீவிரமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.
ஏற்கெனவே இந்த ஆண்டு ஜனவரியில் மிக அதிக அளவு வெப்பம் பதிவாகியிருந்தது. 175 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் பதிவாகியிருந்ததாக அமெரிக்க தேசிய கடல் மற்றும் வளிமண்டல நிர்வாகம் கூறியிருந்தது. இந்நிலையில் இந்தியாவில் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை வெப்ப அலைகள் தீவிரமாக இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications