சென்னைவாசிகளே இப்போதே நிரம்ப போகிறது செம்பரம்பாக்கம் ஏரி.. நிரம்பிய 21 ஏரிகள்..இனி எப்படி இருக்கும்?
சென்னை: இதுவரை இல்லாத அளவாக இந்த முறை தென்மேற்கு பருவமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சென்னையை சுற்றியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன. செம்பரம்பாக்கம் ஏரி நிறையும் தருவாயில் உள்ளது. இன்னமும் வடகிழக்கு பருவ மழை ஆரம்பிக்கவே இல்லை, ஆனால் அதற்குள்ளவே ஏரிகளின் நீர் மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
தென்மேற்கு பருவ மழை இந்த ஆண்டு வழக்கமான அளவில் இல்லாமல் அதிக அளவு பெய்து வருகிறது. செப்டம்பர் மாதத்தில் பொதுவாக பெரிய அளவில் மழை இருக்காது. ஆனால் இந்த முறை சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் பகுதிகளில் அதிகமாக மழை பெய்து வருகிறது.

இந்த கனமழை காரணமாக ஏரிகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது. காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஏரிகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டில் 1,022 ஏரிகள் இருக்கின்றன. இதில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு என ஐந்து மாவட்ட ஏரிகள் அடக்கம். இதன்படி பார்த்தால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 381 ஏரிகளும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 528 ஏரிகளும் உள்ளன. சென்னை மாவட்டத்தில் 16 ஏரிகளும், திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 ஏரிகளும், திருவள்ளூர் மாவட்டத்தில் 4 ஏரிகளும் இருக்கின்றன. இவற்றில் 38 ஏரிகள் நிரம்பியுள்ளன.
திருவண்ணாமலை உள்பட அருகில் உள்ள மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 381 ஏரிகளில் 21 ஏரிகள் முழுமையாக நிரம்பி இருக்கின்றன. இதுதவிர 22 ஏரிகளில் 75 சதவீதத்துக்கும் அதிகமான நீர் இருப்பு உள்ளது.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து பருவ மழையால் அதிகரித்துள்ளது. அந்த அணை நிரம்பும் தருவாயில் உள்ளது. மொத்தம் 23 அடி கொள்ளளவு கொண்ட இந்த ஏரியில் தற்போது 21.5 அடிக்கு நீர் இருக்கிறது.
நீர் வரத்து தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் விரைவில் ஏரி நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஏரி மதகுகள் பராமரிப்பு பணி நேற்று நடந்தது. ஏரி முழு கொள்ளளவை எட்டிய உடன் செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது.
இன்னும் பருவ மழை தொடங்காத நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரிய அளவில் மழை இல்லை. அக்கம்பக்கத்து மாவட்டங்களில் பெய்த மழை காரணமாக ஏரிகளுக்கு நீர் வரத்து இப்படி இருக்கிறது. இனிமேல் தான் காஞ்சிபுரம் செங்கல்பட்டு பகுதிகளில் நல்ல மழை பெய்யும் என்பதால் இந்த முறை பெரும்பாலான ஏரிகள் நிரம்பும் வாய்ப்பு உள்ளது. சென்னை இந்த முறை அதிகமான மழையை எதிர்கொள்ளும் அபாயமும் இருக்கிறது.












Click it and Unblock the Notifications