’வணங்கான்’ என்னோடது! கோர்ட்டுக்குப் போன சரவணன்! அதெல்லாம் முடியாது.. ஹைகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு!
சென்னை: படத்தின் தலைப்பிற்கு காப்புரிமை கோர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம், "வணங்கான்" என்ற தலைப்பை பயன்படுத்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம், பாலாவின் வணங்கான் படத்தை வெளியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில், தேசிய விருதுகளை பெற்ற இயக்குனர் பாலாவின் இயக்கத்தில், நடிகர் அருண் விஜய் நடிப்பில் "வணங்கான்" திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், "வணங்கான்" என்ற தலைப்பை பயன்படுத்த தடை விதிக்கக் கோரி, ஆரஞ்ச் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் எஸ். சரவணன் என்பவர் உரிமையியல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அதில், வணங்கான் என்ற தலைப்பை கடந்த 2020ம் ஆண்டு தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி சங்கத்தில் பதிவு செய்திருந்ததாக கூறியுள்ளார். மேலும், மத்திய வர்த்தக துறையின் வணிக சின்ன விதிகளின் கீழ் பதிவு செய்துள்ளதாகவும், தொடர்ந்து புதுப்பித்து வருவதாகவும் கூறியுள்ளார்.
எனவே "வணங்கான்" என்ற தலைப்பை பயன்படுத்தி, பாலாவின் படத்தை வெளியிட அனுமதித்தால் தமக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் எனவும், அந்த தலைப்பை பயன்படுத்தவும், அந்த தலைப்புடன் படத்தை வெளியிடவும் தடை விதிக்க வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்திருந்தார்.
இந்த மனு நீதிபதி P. வேல்முருகன் முன் விசாரணைக்கு வந்தபோது, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் இயக்குனர் பாலா ஆகியோர் தரப்பில் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆஜராகி, வணங்கான் என்ற பெயரில் படம் தயாரிப்பது 2022ம் ஆண்டிலேயே மனுதாரருக்கு தெரியும் நிலையில், இரண்டு ஆண்டுகள் அமைதியாக இருந்துவிட்டு, படம் வெளியாகவுள்ள நிலையில், பணம் சம்பாதிக்கும் நோக்கில், கடைசி நேரத்தில் நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக வாதிட்டார்.
மேலும், ஒரு படத்தின் கதைக்கரு உள்ளிட்ட விவகாரங்களுக்குத்தான் காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியுமே தவிர, அந்த படத்தின் தலைப்பை காப்புரிமை சட்டத்தின் கீழ் உரிமை கோர முடியாது எனவும் விளக்கம் அளித்து வாதிட்டார்.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பட தலைப்புக்கு காப்புரிமை சட்டம் பொருந்தாது என்பதால், "வணங்கான்" பெயரை பயன்படுத்தவும், படத்தை வெளியிடவும் சுரேஷ் காமாட்சி மற்றும் பாலா ஆகியோருக்கு தடை விதிக்கவும் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இதன்மூலம், பாலாவின் வணங்கான் படத்தை வெளியிடுவதில் எவ்வித சிக்கலும் இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications