வாகன ஓட்டிகளே உஷார்.. வண்டியை காப்பாற்ற உடனே இதை செய்யுங்க.. ஹைகோர்ட் உத்தரவு தெரியுமா?
சென்னை: சென்னை உயர்நீதிமன்றம் நேற்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டும் விவகாரத்தில் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.. அதாவது நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டிய அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று போக்குவரத்து போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. வரும் 20ம் தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்க போவதாக நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் ஓடும் வாகனங்களில் போலீஸ், வக்கீல், மீடியா, பிரஸ், அட்வகேட், டாக்டர், தலைமைச் செயலகம் மற்றும் ராணுவம் என்று பணிகள், பதவிகளைக் குறிப்பிட்டு ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொள்வதை வழக்கமாக வைத்துள்ளனர். மேலும், அரசியல் கட்சி உறுப்பினர்கள் தங்கள் பங்குக்கு கட்சி சின்னங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டுகிறார்கள். இதுதவிர, தங்களுடைய சாதிச் சங்கங்களின் சின்னங்கள், பெயர்களைக் குறிப்பிட்டு ஸ்டிக்கர்களை சிலர் ஒட்டிக்கொள்கிறார்கள்.. இப்படி ஒட்டுவதை சென்னை போக்குவரத்து போலீசார் கடந்த மாதம் அதிரடியாக தடை செய்தனர்.

சென்னையில் ஓடும் தனியார் வாகனங்களின் நம்பர் பிளேட்டுகளில் போலீஸ் துறை, அரசு, ஊடகம், வக்கீல் என ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் சென்னை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டனர்.
இந்த உத்தரவை மாநிலம் முழுவதும் அமல்படுத்தக்கோரி சென்னையைச் சேர்ந்த தேவதாஸ் காந்தி வில்சன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், கார் கண்ணாடிகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்ற உச்ச நீதிமன்ற உத்தரவு தமிழ்நாட்டில் முறையாக அமல்படுத்தப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
மேலும் வாகனங்களின் முன்பக்க மற்றும் பின்பக்க கண்ணாடிகளில் மதச்சின்னங்கள், அரசியல் கட்சி தலைவர்களின் படங்கள், நடிகர்களின் படங்களை ஒட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அத்துடன் குறிப்பாக அரசு பஸ்களில் பின்புறமும், பக்கவாட்டு பகுதிகளிலும் முழுவதுமாக ஸ்டிக்கர் ஒட்டி விளம்பரங்கள் செய்வதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் மனுதாரர் தேவதாஸ் காந்தி வில்சன் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு விசாரித்து வந்தது. அவர்கள், போக்குவரத்து விதிகளை மீறும் அரசியல்வாதிகளின் வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.
பின்னர், "நம்பர் பிளேட்டுகளில் ஸ்டிக்கர் ஒட்டியிருந்தால் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். கார் கண்ணாடிகளில் கருப்பு நிறத்தில் 'கூலிங்' ஸ்டிக்கர் ஒட்டியுள்ள வாகனங்களை சோதனை செய்ய வேண்டும். இந்த வழக்கு தொடர்பாக வருகிற 20-ந்தேதி விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்" என்று கூறி விசாரணையை தள்ளி வைத்தனர். அன்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அமர்வு கூறியுள்ளது. எனவே இன்னும் இரண்டு வாரத்தில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் விரிவான உத்தரவை பிறப்பிக்க போகிறது.












Click it and Unblock the Notifications