மதிமுகவின் முக்கிய முகமாகிறார் துரை வைகோ... காத்திருக்கும் பொறுப்பு... செப்டம்பரில் அறிவிப்பு..?
சென்னை: மதிமுகவில் துரை வைகோவுக்கு முக்கிய பொறுப்பு ஒன்று காத்திருப்பதாகவும் வரும் செப்டம்பர் மாதம் அதற்கான அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
வயது மூப்பு மற்றும் உடல்நிலை காரணமாக வைகோவால் முன்பை போல் இப்போது பயணம் செய்யவோ கட்சிப் பணிகளில் தீவிர கவனம் செலுத்தவோ முடிவதில்லை.
இதனால் மதிமுகவுக்கு புது ரத்தம் பாய்ச்சும் வகையில் வைகோவின் மகனான துரை வைகோவை களத்தில் இறக்க தயாராகிவிட்டார்கள் புரட்சிப் புயலின் தம்பிமார்கள்.

துரை வைகோ
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தற்போது உடல் தளர்ந்துள்ளதால் தந்தையின் இடத்தில் நின்று கட்சிப் பணிகளை கவனித்து வருகிறார் துரை வைகோ. நடைபெற்று முடிந்த சட்டமன்றத் தேர்தலில் கூட மதிமுக வேட்பாளர்கள் போட்டியிட்ட 6 தொகுதிகளிலும் பம்பரமாக சுழன்று வாக்குச் சேகரித்தார் துரை வைகோ. இன்னும் சொல்லப்போனால் சாத்தூர் தொகுதியில் தனி கவனம் செலுத்தி அந்த தொகுதியின் மூலை முடுக்குகளுக்கு எல்லாம் பயணித்து வெற்றியும் பெற வைத்தார்.

நேரடி அரசியல்
துரை வைகோவை நேரடி அரசியலுக்கு அழைத்து வருவதை வைகோ விரும்பவில்லை. வாரிசு அரசியல் என்ற விமர்சனம் வந்துவிடுமோ என அஞ்சி மகனை மதிமுகவுக்குள் அழைத்து வர ரொம்பவே தயங்கினார். அதேபோல் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளில் ஒரு தொகுதியில் உங்கள் மகனை நிறுத்துங்கள் என வைகோவிடம் ஸ்டாலினே கேட்டுக்கொண்டும் அதை நிராகரித்தார். ஆனால் கட்சியின் இரண்டாம் கட்ட தலைவர்களோ துரை வைகோவின் வருகைக்கான அவசியத்தையும், கால சூழ்நிலையையும் வைகோவிடம் வலியுறுத்தி வந்தனர்.

முப்பெரும் விழா
இதனிடையே மதிமுக சார்பில் ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் 15-ம் தேதி முப்பெரும் விழா நடத்துவது வழக்கம். இந்தாண்டும் அந்த விழாவை நடத்துவது பற்றி மதிமுக உயர்மட்ட நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். அவ்வாறு நடத்தும் பட்சத்தில் துரை வைகோவுக்கான முக்கியப் பொறுப்பு தொடர்பான அறிவிப்பும் அன்றைய தினம் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொண்டன்
துரை வைகோவை பொறுத்தவரை இப்போது மக்கள் பணிகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்த தொடங்கிவிட்டார். அதேபோல் கட்சிக்காரர்களின் சுக துக்க நிகழ்வுகளிலும் தவறாமல் ஆஜராகிரார். தன்னை ஒரு பெரிய அரசியல் தலைவரின் மகன் என எண்ணாமல், தொண்டர்களோடு தொண்டன் என்ற மனநிலையில் அவர் இப்போது இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications