திரும்பி பார்க்க வைத்த ராணிப்பேட்டை.. ரெடியான ஜாகுவார், லேண்ட் ரோவர் தொழிற்சாலை.. எல்லாம் மாறுது
தமிழ்நாட்டின் ராணிப்பேட்டையில் டாடா குழுமம் அமைத்து வரும் ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள் 60% நிறைவடைந்துள்ளன. அடுத்த ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாத வாக்கில் கட்டுமானப் பணிகள் முழுமையாக முடிவடைந்து உற்பத்தி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ராணிப்பேட்டையில் டாடா கார் உற்பத்தி ஆலை
டாடா நிறுவனம் தனது கார் உற்பத்தி தொழிற்சாலையை சென்னைக்கு பதிலாக ராணிப்பேட்டையில் அமைத்துள்ளது. இது, தமிழ்நாட்டில் முதலீட்டிற்கு சாதகமான சூழ்நிலை நிலவுவதை எடுத்துக்காட்டும் விதமாக அமைந்துள்ளது. தொடர்ந்து பல்வேறு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றன.
முன்னதாக, டாடா மோட்டார்ஸ் குழுமம் ரூ.9,000 கோடி முதலீட்டில் கனரக வாகன உற்பத்தி தொழிற்சாலையை அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் சுமார் 5,000 நபர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு அரசிற்கும், டாடா மோட்டார்ஸ் குழுமத்திற்கும் இடையே கையெழுத்தானது. புதிய ஆலையில், மூன்றில் இரண்டு பங்கு ஜாகுவார் மற்றும் லேண்ட் ரோவர் கார்களும், மீதமுள்ளவை டாடா எலக்ட்ரிக் வாகனங்களுக்காகவும் (EV) உற்பத்தி செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
தூத்துக்குடியில் வின்பாஸ்ட் ஆலை
இது தவிர, தூத்துக்குடியில் அமைக்கப்பட்டு வரும் வின்பாஸ்ட் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இந்த ஆலை ஜூலை மாதம் இறுதியில் திறக்கப்பட உள்ளது. தொழிற்சாலையின் உட்புறத்தில் அனைத்து இயந்திரங்களும் பொருத்தப்பட்டு, விரைவில் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட உள்ளன. சோதனை ஓட்டங்கள் முடிந்த பிறகு, ஜூலை கடைசி வாரத்தில் ஆலை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது, வின்பாஸ்ட் நிறுவனம் மின்சார வாகனங்கள் தயாரிப்பில் முன்னணியில் உள்ளது. மின்சார கார்கள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற மின்சார வாகனங்களை தயாரிப்பதில் விரிவடையும் முதல் கார் பிராண்டாக இது இருக்கும். இந்த நிறுவனம் தான் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய முன்வந்துள்ளது, அதுவும் தூத்துக்குடிக்கு தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் மிகக் குறுகிய காலத்தில் மேற்கொள்ளப்பட்ட திட்டமாக இது கருதப்படுகிறது. முதலீடு அறிவிக்கப்பட்டு, புரிந்துணர்வு ஒப்பந்தமாக மாறி, முதலீடாக உருவெடுத்து, தொழிற்சாலையாக மாறியுள்ள இந்தத் திட்டம் மிக வேகமான திட்டம் என்று கூறப்படுகிறது. கடந்த வருடம் தான் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. அனைத்து அனுமதிகளும் பெறப்பட்டு, தளம் மற்றும் கூரை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, இயந்திரங்கள் நிறுவும் பணிகளும் நிறைவடைந்துள்ளன. இதன் மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் ஏற்றுமதி
ஏற்கனவே, தமிழகத்தின் ஏற்றுமதி முதல் முறையாக 50 பில்லியன் டாலர்களைத் தாண்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 9 பில்லியன் டாலர் அதிகம் ஆகும். இதன் மூலம், இந்தியாவில் எந்த பெரிய மாநிலத்திலும் இல்லாத அதிகபட்ச வளர்ச்சியை தமிழ்நாடு பதிவு செய்துள்ளது.
2024-25 நிதியாண்டில் இந்தியாவின் ஏற்றுமதியில் தமிழ்நாட்டின் மொத்தப் பங்கு 13.38% ஆக உயர்ந்துள்ளது (இது கடந்த ஆண்டில் 10.15% ஆக இருந்தது). இந்த முறை, மாநிலம் $52.073 பில்லியன் மதிப்புள்ள வணிகப் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு தமிழ்நாடு $43.56 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஏற்றுமதி செய்தது. இதன் மூலம், தமிழ்நாடு அரசு 9 பில்லியன் டாலர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. தற்போது தூத்துக்குடி வின்பாஸ்ட் ஆலை மூலம் தமிழ்நாட்டின் ஏற்றுமதி மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் டாடா மற்றும் வின்பாஸ்ட் ஆகிய நிறுவனங்களின் உற்பத்தி ஆலைகள் விரைவில் செயல்பாட்டிற்கு வர இருப்பதால், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மேலும் வலுவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ஏற்றுமதி துறையில் தமிழ்நாடு தொடர்ந்து புதிய சாதனைகளை படைக்கும் என நம்பப்படுகிறது.












Click it and Unblock the Notifications