ஷாக்..ராயப்பேட்டையில் ரகசிய கூட்டம்..தீவிரவாத கும்பலுக்கு ஆள்சேர்ப்பு! களத்தில் இறங்கியது என்.ஐ.ஏ..!
சென்னை: சென்னையில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் ரகசிய கூட்டம் நடத்தி தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தல் தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பேரை கைது செய்துள்ள நிலையில் இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது தேசிய புலனாய்வு முகமை. சென்னை போலீசாரிடம் வழக்கு தொடர்பான விபரங்களை என்ஐஏ கேட்டு பெற்றிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
கடந்த சில மாதங்களில் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தீவிரவாத நடவடிக்கைகளும் தீவிரவாதிகள் கைது செய்யப்படுவதும் அதிகரித்து வருகிறது.

இதனையடுத்து யூடியூப் பேஸ்புக் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தீவிரவாதம் தொடர்பான நடவடிக்கைகளை கண்காணிக்க சென்னை போலீசார் சிறப்பு குழு ஒன்றை அமைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
குறிப்பாக யூடியூப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் சட்டவிரவாத வீடியோக்களை வெளியிட்டு வரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கிலாபாத் பிரிவினை வாதம் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது. இது தொடர்பாக சென்னை காவல்துறையின் சிறப்பு குழுவினர் விசாரணை நடத்தினர். மேலும் இது சைபர் கிரைம் போலீசாரின் கவனத்திற்கு சென்றது,
இதையடுத்து அந்த வீடியோக்களை அப்லோடு செய்து வந்தது சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த ஹமீது உசேன் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து அவரையும் அவரது வீடியோக்களையும் போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது ஹமீது உசேன், அவரது தந்தையான அகமது மன்சூர், தம்பி அப்துல் ரகுமான் உள்ளிட்ட சிலர் ராயப்பேட்டை ஜஹான் தெருவில் ரகசியமாக கூட்டங்களை நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும், அந்த கூட்டத்தில் பங்கேற்கும் இளைஞர்களை மூளைச்சலவை செய்து தடை செய்ய தீவிரவாத இயக்கம் ஒன்றுக்கு அடியாட்களாக சேர்த்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். பொறியியல் படிப்பில் முனைவர் பட்டம் பெற்ற ஹமீது உசேன் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகவும் பணியாற்றி இருக்கிறார். இந்திய சித்தாந்தத்திற்கு எதிராகவும் தேர்தலுக்கு எதிராகவும் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதில் பிரச்சாரம் மேற்கொண்டு வந்திருக்கிறார்.
மேலும் இவரின் பேச்சைக் கேட்டு அவரை தொடர்பு கொள்ளும் நபர்களை ராயப்பேட்டைக்கு வரவழைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் நடத்தி அவர்களை தடை செய்யப்பட்ட அமைப்புக்கு தீவிரவாதிகளாக சேர்த்துள்ளார். ஹமீது உசேன் மட்டுமல்லாது அவர்களது குடும்பத்தினர் அனைவரும் அந்த குறிப்பிட்ட தீவிரவாத இயக்கத்தில் இருந்தது தெரிய வந்துள்ளது. இதையடுத்து சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் (உபா) வழக்கு பதிவு செய்து அவர்களை போலீசார் கைது செய்தனர்.
மேலும் செம்பாக்கம் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் விசாரணை மேற்கொண்டு நிலையில் இந்த வழக்கு தொடர்பாக தண்டையார்பேட்டை அகமது அலி , காமராஜர் புறம் முகமது மவுரிஸ், காதர் நவாஸ் ஷெரிப் என்ற ஜாவித் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் தற்போது தேசிய புலனாய்வு முகமை களமிறங்கி இருக்கிறது.
கைது செய்யப்பட்டவர்கள் மற்றும் அது தொடர்பான விவரங்களை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் என்ஐஏ கேட்டு பெற்றுள்ளதாகவும் இந்த விவகாரத்தில் அவர்கள் விசாரணை நடத்த இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கு மட்டுமல்லாமல் வேறு சில தீவிரவாத அமைப்புகளுடன் கைது செய்யப்பட்டவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா? இதுவரை எத்தனை பேர் அந்த இயக்கத்தில் சேர்ந்திருக்கின்றனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் குறித்து என்.ஐ.ஏ. விசாரணை நடத்தும் என தகவல் வெளியாகி இருக்கிறது.












Click it and Unblock the Notifications