பழைய ஓய்வூதிய திட்டம்.. கைவிரித்த தங்கம்.. அரசு ஊழியர்கள் எடுத்த அதிரடி முடிவு
சென்னை: நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தமிழ்நாட்டின் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை... பழைய ஒய்வூதியத் திட்டம் குறித்து பரிசீலனை செய்வதாக திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்த நிலையில், அதுபற்றி எதுவுமே கடந்த நான்காண்டுகளில் நடைபெறவில்லை.. இனி 2026ம் ஆண்டு அறிவித்தாலும் ஜூன் மாதத்திற்கு பிறகு வரும் அரசே முடிவு செய்ய முடியும்.. இதனால் கொதித்துப்போய் உள்ள அரசு ஊழியர்கள், புதிய முடிவு எடுத்துள்ளார்கள்.
2003ம் ஆண்டோடு முடிவுக்கு வந்த பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்றும், அரசு துறைகளில் உள்ள ஏராளமான காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஆசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பணியாளர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ தொடர்ந்து போராடி வருகிறது. அண்மையில் கூட போராட்டம் நடத்தியது. அந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக மறியல் போராட்டம் மேற்கொள்ளப்போவதாக அறிவித்திருந்தார்கள்.

தொடர் போராட்ட அறிவிப்புகளை தொடர்ந்து சென்னை தலைமை செயலகத்தில், கோரிக்கைகள் தொடர்பாக அரசு தரப்பில் அழைத்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அந்த பேச்சுவார்த்தையின் முடிவில் சட்டசபை கூட்டத்தொடரில் பட்ஜெட் அறிவிப்பில், கோரிக்கைகள் தொடர்பான அறிவிப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கையில் மறியல் போராட்டத்தை அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு ரத்து செய்திருந்தது.
நேற்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்த தமிழ்நாட்டின் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டில் பழைய ஓய்வூதிய திட்டம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளில் எந்த அறிவிப்பும் அரசு வெளியிடாததால் அரசு ஊழியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்நிலையில் நேற்று மாலை ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் மாயவன், சேகர், பார்த்தசாரதி ஆகியோர் தலைமையில் நடந்த கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கிறது.
இதுபற்றி அவர்கள் கூறும் போது, தமிழக பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தை கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற உள்ளது. அதன்பிறகும் தமிழக அரசு மவுனம் காத்தால், வருகிற 30-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து கூடி முடிவு செய்யப்படும் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்கள்.
இதனிடையே தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மாண்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நீண்ட நாள் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம் 2004-2006 தொகுப்பூதிய பணிக்காலம், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு, ஊக்க ஊதியத்தை பழைய முறைப்படி வழங்குதல், மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் 100 சதவீத கட்டணமில்லா சிகிச்சை உறுதிப்படுத்துதல் போன்ற எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம். இது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications