நாட்டு மக்கள்தான் என் குடும்பம்.. அவர்களுக்காகவே இரவு பகலாக உழைக்கிறேன்.. மோடி உணர்ச்சி பேச்சு
சென்னை: நாட்டு மக்களுக்காக 16 வயது முதல் உழைக்கிறேன் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். பாரத நாட்டின் மக்கள்தான் என் குடும்பம். உங்கள் முன்னேற்றத்திற்காகவே நான் இரவு பகலாக உழைக்கிறேன். என் பாரதமே என் குடும்பம் நான் மோடியின் குடும்பத்தை சேர்ந்தவன் என்று சொல்கிறது என்று உணர்ச்சி பொங்க பேசியுள்ளார் மோடி.
பிகார் தலைநகர் பாட்னாவில் நேற்று எதிர்க்கட்சிகள் ஜன் விகாஸ் மகா மாநாட்டை நடத்தின. இதில் மாநாட்டை ஏற்பாடு செய்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் உரையாற்றினார். பாஜக பிரச்சாரத்தில் பெரும் பங்கு வகிக்கும் குடும்ப அரசியல் விமர்சனத்துக்கு பதிலளிக்கும் வகையில் பேசினார்.

அப்போது, " மோடிக்கு குடும்பம் இல்லை. அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? ராமர் கோவில் பற்றி பெருமை பேசிக் கொண்டு இருக்கிறார். ஆனால் அவர் ஒரு உண்மையான இந்து இல்லை. இந்து பாரம்பரியத்தில் பெற்றோர் இறந்தால் மொட்டை அடிக்க வேண்டும். அம்மா இறந்த போது மோடி மொட்டை அடிக்கவில்லை." எனக் கூறினார்.
இதற்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். லாலுவின் பேச்சுக்கு பிரதமர் மோடி பதில் அளித்து வருகிறார்.
இன்றைய தினம் சென்னை நந்தனத்தில் பேசிய பிரதமர் மோடி, குடும்ப அரசியலை கடுமையாக சாடினார்.
மோடிக்கு குடும்பம் கிடையாதுதான்.. தேசம் இருக்கிறது. குடும்பம் இருக்கிறது என்று சொல்லிவிட்டு அரசு சொத்தை கொள்ளையடிப்பதா?. நாடும் நாட்டு மக்களும்தான் குடும்பமாக நினைக்கிறேன். நாட்டின் இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள் என் குடும்பத்தினர். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எனது குடும்பம்தான். மோடிக்கு குடும்பம் கிடையாதுதான் ஆனால் தேசம் இருக்கிறது.
திமுக, காங்கிரஸின் முதல் கொள்கை குடும்பம்தான். மோடியின் முதல் கொள்கை தேசம் என்பதுதான். திமுக தங்களின் குடும்பத்திற்கு முன்னுரிமை தருகிறது. காங்கிரஸ் கட்சியினருக்கு அவர்கள் குடும்பம்தான் எல்லாம். கப்பல் கவிழ்ந்து விட்டது போல தலையில் கை வைத்து உட்கார்ந்திருக்கிறார்கள். தேசத்தை குட்டிச்சுவராக்குவதான் இண்டி கூட்டணி தலைவர்களின் எண்ணம்.
இந்தியா கூட்டணி ஒரு ஊழல் கூட்டணி. உச்சநீதிமன்றம் இன்று வழங்கிய தீர்ப்பால் இந்தியா கூட்டணி தலைவர்கள் பெறும் பதற்றத்தில் உள்ளனர். குடும்ப அரசியலுக்கும் உழைப்பிற்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள தூரம். குடும்ப அரசியலை சேர்ந்த ஒருவர் முக்கிய பதவியை பெறும் போது தங்களின் கடமையை மறந்து போகிறார்கள். மக்களை அடிமையாக நினைக்கின்றனர். விளையாட்டாக கடந்து போகிறார்கள். தேசத்தின் மிகப்பெரிய நீதிமன்றம் திமுக அமைச்சரிடம் கடுமையான கேள்வியை முன் வைத்துள்ளது.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் தங்குதடையின்றி கிடைக்கிறது. போதைப்பொருளால் தமிழ்நாட்டின் இளைஞர்கள் பாதிக்கப்படுவார்கள். போதைப்பொருளால் குழந்தைகள் பாதிக்கப்படுவது பற்றி பெற்றோர்கள் அஞ்சுவது போல நானும் அஞ்சுகிறேன். தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலும் தடுக்க நடவடிக்கை எடுப்பது மோடியின் உத்தரவாதம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications