பொள்ளாச்சி பாலியல் கொடூரம்… அரசாணை இன்னும் கிடைக்கவில்லை… சிபிஐ தகவல்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணை தொடர்பாக தமிழக அரசின் அரசாணை இன்னும் கிடைக்கவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் சிபிஐ தகவல் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் மாணவிகள், ஆசிரியர்கள், மருத்துவர்கள் என ஆபாச வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்ததாகவும், பாலியல் தொந்தரவு செய்தாகவும் கூறப்பட்ட சம்பவம் நாட்டையே பெரும் அதிர்ச்சி அடைய செய்தது.
இதுதொடர்பாக, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்த பைனான்ஸ் அதிபர் மகன் திருநாவுக்கரசு (27), அவரது கூட்டாளிகளான பொள்ளாச்சியை சேர்ந்த சபரிராஜன் (25), சதீஷ் (29), வசந்தகுமார் (24) ஆகியோர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிபிசிஐடி விசாரணை
இந்த வழக்கை பொள்ளாச்சி கிழக்கு பகுதி போலீசார் விசாரித்து வந்தனர். ஆனால், முக்கிய புள்ளிகள் பலருக்கு தொடர்பு இருப்பதாக கூறப்படுவதால், இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் நியாயமான விசாரணை நடத்த சிபிஐக்கு மாற்ற வேண்டும் என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பியதால், சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழக அரசு அரசாணை வெளியிட்டது.

உயர்நீதிமன்றத்தில் வழக்கு
இதனையடுத்து, இந்த வழக்கின் சிபிஐ விசாரணையை உயர் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தஹில் ரமணி, நீதிபதி துரைசாமி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

சிபிஐ தகவல்
அப்போது சிபிஐ தரப்பில், ஆஜரான வழக்கறிஞர், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி, தமிழக அரசு பிறப்பித்த அரசாணை இன்னும் கிடைக்கவில்லை என குறிப்பிட்டார். எனவே, சிபிஐ விசாரணையை நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும், என்ற மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக, பதிலளிப்பது பொருத்தமாக இருக்காது, எனவும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக அரசுக்கு உத்தரவு
இதனையடுத்து, அரசாணையை, மனுதாரர் மற்றும் சிபிஐ தரப்புக்கு, தமிழக அரசு வழங்க உத்தரவிட்டு, விசாரணையை வரும் 25-ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இதற்கிடையே, பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பான விசாரணையின் ரகசிய அறிக்கையை, உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்தது. இந்த வழக்கில் மணிவண்ணன் என்பவர் 5-வது நபராக சேர்க்கப்பட்டுள்ளார். இவர், புகார் அளித்த பெண்ணின் சகோதரரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் ஆவார்.












Click it and Unblock the Notifications