திமுக எதிர்க்கும் பிரதமரின் விஸ்வகர்மா திட்டம்.. தமிழகத்தில் வரவேற்பு எப்படி? வெளியான தகவல்
சென்னை: திமுக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்திற்கு, தமிழகத்தின் ஏழு மாவட்டங்களில் இதுவரை 14,211 பயனாளிகள் பதிவு செய்துள்ளனர்.
பாரம்பரிய கைவினை கலைஞர்களுக்கு, பல்வேறு வகையான பயிற்சியுடன் கூடிய நிதியுதவி மற்றும் கடனுதவி அளிப்பதற்காக, 'விஸ்வகர்மா யோஜனா' என்ற திட்டம் செப்டம்பர் 17ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு 13,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த விஸ்வகர்மா திட்டம் 2023 முதல் 2028ம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகள் அமலில் இருக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் நோக்கம் என்னவென்றால், குரு - சிஷ்ய பரம்பரை முறையை வளர்த்தெடுப்பதும், கருவிகள் மூலமும் கைகளின் மூலமும் பொருட்களைச் செய்யும் கைவினைக் கலைஞர்கள் குடும்பம் சார்ந்து இயங்குவதையும் ஊக்கப்படுத்துவதே நோக்கம் ஆகும். மேலும் கைவினை கலைஞர்களின் தயாரிப்புகள், சேவைகளின் தரத்தை மேம்படுத்துவதையும், உள்நாட்டு மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கு அவர்களின் பொருட்களை கொண்டுசெல்வதும் இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் சேரும் கைவினைக் கலைஞர்கள் மற்றும் கைவினைத் தொழிலாளர்களுக்கு 'பிரதமர் விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. மேலும் முதல் தவணையாக ரூ. 1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் அவர்களுக்கு வழங்கப்படும். பிறகு இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்படுகிறது.
18 வகை தொழிலாளர்களுக்கு நன்மை: பிரதமரின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ் கல் தச்சர்கள், காலணி தைப்பவர்கள், காலணி செய்பவர்கள், பொற்கொல்லர்கள், குயவர், சிற்பிகள், கொத்தனார்கள், கயிறு செய்பவர்கள், முடி திருத்தும் தொழிலாளர்கள், பூமாலை கட்டுபவர்கள், சலவைத் தொழிலாளர்கள், டெய்லர் உட்பட, 18 வகையான தொழில்களில் ஈடுபடுவோர் பயன்பெற முடியும்.
தொழிற்பயிற்சி அளிக்கப்படுகிறது: பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் தொழிற்கலைஞர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. அடிப்படைப் பயிற்சிகள், மேம்பட்ட பயிற்சிகள் என இரு விதங்களில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்தப் பயிற்சி பெறுவோருக்கு தினமும் 500 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்படும். பின்னர் தொழிற்கருவிகளை வாங்க 15,000 ரூபாய் நிதியுதவியாக வழங்கப்பட உள்ளது.
இதனிடையே பிரதமரின் விஸ்வகர்மா திட்டம் ஆரம்பிக்கப்பட்ட உடனேயே தமிழகத்தில் ஆட்சியில் உள்ள திமுக அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தது. இது குலத்தொழிலை தொடர வேண்டும் என்று கொண்டுவரப்பட்ட திட்டம் என்று திமுகவும், அதன் கூட்டணி கட்சிகளும் கடுமையாக விமர்சித்தன. மேலும் விஸ்வகர்மா திட்டத்தின் நோக்கம், பயன், அதன் வழிகாட்டி விதிமுறைகள் போன்றவை குறித்து ஆய்வு செயவோம் என்றும் தமிழக அரசு அறிவித்தது. மேலும் விஸ்வகர்மா திட்டத்தின் சமூக, பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது குறித்து அறிக்கை அளிப்பதற்காக, தமிழக அரசு சார்பில் குழுவும் அமைக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 7 மாவட்டங்களில் பிரதமரின் விஸ்வகர்மா திட்டத்தின் கீழ் பலர் பதிவு செய்துள்ளனர். அக்டோபர் மாதம் 31ம் தேதி வரையில் கோவை 5,510 பேரும், ஈரோடு 1,568 பேர், புதுக்கோட்டை 2,287 பேர், ராமநாதபுரத்தில் 1,282 பேர், நீலகிரி மாவட்டத்தில் 384 பேர், திருப்பூரில் 1,286 பேரும், விருதுநகரில் 1,894 பேரும் என, மொத்தம் 14,211 பேர் பதிவு செய்துள்ளார்கள். விஸ்கர்மா திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள் பொதுச்சேவை மையங்களின் மூலம் பதிவு செய்யலாம்.
விஸ்கர்மா திட்டத்தில் பயனாளிகள் தேர்வு : விஸ்கர்மா திட்டத்தில் பயனாளிகளை தேர்வு செய்வதற்கு மூன்றடுக்கு சரிபார்ப்பு நடைமுறைகள் மேற்கொள்ளப்படும் என்றும் மூன்று கட்ட சரிபார்ப்பு நடைமுறைகளுக்கு பின்னர் இத்திட்டத்தில் பயனடைவதற்கான பயனாளிகள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது. எனவே விஸ்வகர்மா திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் இசேவை மையங்களில் தேவையான ஆவணங்களை கொடுத்து எளிதாக விண்ணப்பிக்க முடியும். தேர்வு செய்யப்படும் பயனாளிகளுக்கு தொழிற் கருவி வாங்க 15000 ரூபாய் நிதி உதவியும். வட்டியில்லாத கடனாக ஒரு லட்சம் வரையிலும் கிடைக்கும். அதை சரியாக திருப்பி செலுத்தினால். இரண்டாம் தவணையாக ரூ. 2 லட்சம் வரை 5% வட்டியுடன் கடன் வழங்கப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications