பிரிக்ஸ் - ஜி 7 இடையே பலமாக உருவெடுக்கும் இந்தியா! சர்வதேச அரசியலில் பெரும் சக்தியாகும் இந்தியா!
சென்னை: பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா அளிக்கும் பங்கு உலக அரசியலில் இந்தியாவின் சக்தியை.. அதன் முக்கியமான இடத்தை பறைசாற்றுகிறது. இந்தியாவானது சீனா, ரஷ்யா மற்றும் பல வளரும் நாடுகளுடனான தனது உறவை திறமையாக நிர்வகிக்கிறது, அதே நேரத்தில் கனடாவைத் தவிர G7ஐ சேர்ந்த பல சக்திவாய்ந்த மேற்கத்திய நாடுகளுடன் வலுவான உறவுகளை வைத்திருக்கிறது.
மேற்கத்திய நாடுகளின் பெரிய விமர்சனங்களை எதிர்கொள்ளாமல்.. இப்படி பலதரப்பட்ட நாடுகள் அனைத்துடனும் பழகும் திறமைதான் இந்தியாவை தனித்து நிற்க வைக்கிறது. உலகளவில் இது இராஜதந்திர ரீதியாக மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளுக்கு இடையே உள்ள இடைவெளியைக் குறைக்க உதவும் ஒரு முக்கிய நாடாக இந்தியா உருவெடுத்து உள்ளது.

சமீபத்தில் ரஷ்யாவின் கசான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சி மாநாடு, உலக அரசியலில் இந்தியாவின் தனித்துவமான பங்கை வெளிப்படுத்தியது. பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது, பிரதமர் நரேந்திர மோடி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் பிற தலைவர்களை சந்தித்து, உலக அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை செய்தார்.
இந்த உச்சிமாநாடு உலக அரசியலில் இந்தியாவின் சக்தியை வெளிப்படுத்துகிறது. உலகளாவிய அரசியல் நிபுணரான இயன் ப்ரெம்மர்.. இந்தியாவின் அரசியலையும்.. சர்வதேச அரசியலில் இந்தியா எடுக்கும் நிலைப்பாடுகளையும், சீனாவுடன் இந்தியா பேணும் உறவையும் கூட பாராட்டி இருந்தார்.
பிரிக்ஸ் உச்சி மாநாட்டில், பல உலகத் தலைவர்களுடன் பிரதமர் மோடி முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியது பெரிய அளவில் கவனம் பெற்றன. முக்கியமாக இந்தியாவின் இராஜதந்திர முயற்சிகள் உலக அளவில் கவனம் பெற்றன. இந்த மாநாட்டில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்களில் ஒன்று சீன அதிபர் ஜி ஜின்பிங்குடன் மோடி நடத்திய சந்திப்பு. கடந்த நான்கு ஆண்டுகளாக இரண்டு நாடுகளுக்கு இடையே நிலவிய மோதலுக்கு இடையே நடந்த இந்த சந்திப்பு மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

உலக அரங்கில், குறிப்பாக சீனா போன்ற வல்லரசுகளுடன் இந்தியா தனது உறவுகளை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சிகளை இது எடுத்துக்காட்டுகிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான மோதல் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக நீடித்தது. இரண்டு நாடுகளின் இராணுவத் தளபதிகளுக்கு இடையே 30 சுற்று பேச்சுவார்த்தை நடந்தது. இப்படி பல பேச்சுவார்த்தைகளுக்கு இடையேதான் சீன அதிபர் உடன் பிரதமர் மோடி பிரிக்ஸ் மாநாட்டில் சந்திப்பு நடத்தி உள்ளார்.
இது மட்டுமின்றி.. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளுடனும் இந்தியா நட்பை கடைபிடித்து வருகிறது. ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடுகளும் போரில் ஈடுபட்டு வரும் நிலையில்... இந்தியா மட்டுமே இரண்டு நாடுகளுடனும் நட்பை கடைப்பிடித்து வருகிறது. உலகிலேயே மோடி மட்டும்தான் இரண்டு நாடுகளுடனும் நட்பை கடைப்பிடித்து.. அதே சமயம் இரண்டு நாடுகளுக்கும் சமாதானம் செய்யும் மத்தியஸ்தராக திகழ்ந்து வருகிறார்.
முக்கியமாக பிரிக்ஸ் உச்சிமாநாட்டில், ஈரானின் மசூத் பெசெஷ்கியானையும் சந்தித்த மோடி, உலக அமைதியை மேம்படுத்துவதில் இந்தியாவின் அர்ப்பணிப்பை பற்றி பேசினார். என்னதான் சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினாலும்.. அதே சமயம் பாகிஸ்தானுக்கு சீனா வழங்கும் ஆதரவை விமர்சித்து இந்தியா வெளியிட்ட அறிக்கையும் கவனம் பெற்றது. முக்கியமாக இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாத குழுக்களை சீனா ஆதரித்து வருவதையும் இந்தியா விமர்சித்து அறிக்கை வெளியிட்டது. பாகிஸ்தானை தொடர்ந்து பாதுகாக்கும் நாடுகளை விமர்சித்து இந்தியா இந்த அறிக்கையை பதிவு செய்தது.
சர்வதேச அரசியலில், சர்வதேச பொருளாதாரத்தில்.. இந்தியாவின் பங்கை வெளிக்காட்டும் விதமாக BRICS 2024ல் இந்தியா நிலைப்பாடுகளை எடுத்தது. சர்வதேச உறவுகள் மற்றும் உலகப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் இந்தியா எவ்வாறு முக்கிய பங்கு வகிக்கிறது என்பதை இந்த பிரிக்ஸ் மாநாடு எடுத்துக்காட்டுகிறது. BRICS இல் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இந்தியா திகழ்கிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் இந்தியாவின் ஒவ்வொரு செயலும் பிரிக்ஸ் மாநாட்டில் கவனம் பெறுகிறது.

இந்த மாநாடு உலக அரங்கில் இந்தியா பெரிய தாக்கத்தை ஏற்படுத்த உதவும். இந்த உச்சிமாநாட்டில் இந்தியா எடுத்த நிலைப்பாடு.. இதில் நடந்த ஆலோசனைகள்.. சந்திப்புகள்.. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கு முக்கியமானது.
ரஷ்யாவுடனான தனது உறவை வலுப்படுத்தவும், சீனாவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவும், உலகளாவிய நிர்வாக சீர்திருத்தங்களில் பங்கு வகிக்கவும் இந்தியாவுக்கு இது வாய்ப்பளித்தது. அணிசேரா நாடு என்ற இந்தியாவின் தனித்துவமான நிலையில் இருந்து கொண்டே.. ரஷ்யா மற்றும் மேற்கு ஆகிய இரு நாடுகளுடனும் நல்ல உறவுகளைப் பேணுவது, சீனாவுடன் ஆலோசனை செய்வது.. அமெரிக்காவுடன் நட்பாக இருப்பது போன்ற நடவடிக்கைகள் உலகளாவிய மோதல்களில் மத்தியஸ்தராக செயல்பட இந்தியாவிற்கு வாய்ப்பளிக்கிறது.
உக்ரைனுடனான ரஷ்யாவின் தொடர் மோதலால் உலக வல்லரசுகள் ரஷ்யாவுடனான தங்களின் கூட்டணி குறித்து மறுபரிசீலனை செய்து வரும் நேரத்தில்தான் மோடி ரஷ்யா, உக்ரைன் ஆகிய இரண்டு நாடு தலைவர்களையும் சந்தித்து ஆலோசனை செய்தார்.
முக்கியமாக ரஷ்ய ஆர்க்டிக் மற்றும் வடக்கு கடல் பாதை (என்எஸ்ஆர்) ஆகியவற்றில் இந்தியாவின் பங்கேற்பு முக்கிய விவாதப் புள்ளிகளாக உருவெடுத்து உள்ளது. இந்தோ-ரஷ்ய கூட்டுப் பணிக்குழு, என்எஸ்ஆர் வழியாக இந்திய-ரஷ்ய சரக்கு போக்குவரத்து, ஆர்க்டிக் கப்பல்களை உருவாக்குவதற்கான கூட்டுத் திட்டங்கள் மற்றும் துருவ நீரில் பயணிப்பதில் இந்திய மாலுமிகளுக்கான சாத்தியமான பயிற்சித் திட்டங்களைப் பற்றியும் ஆலோசனைகள் செய்யப்பட்டன.
BRICS உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி நடத்திய பாதுகாப்பு பேச்சுவார்த்தைகள் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மை குறித்து, கவனம் செலுத்தியது.
பிரிக்ஸ் 2024 மாநாட்டில் இந்தியா கலந்து கொண்ட விதம்.. கிழக்கு மற்றும் மேற்கு நாடுகளுக்கு இடையே ஒரு முக்கிய இணைப்பாக இந்தியாவை மாற்றி உள்ளது.
பிரிக்ஸ் மட்டுமன்றி.. ஜி7 நாடுகளுடன் (கனடாவைத் தவிர) இந்தியா வலுவான உறவை கடைபிடித்து வருகிறது. பிராந்திய ஸ்திரத்தன்மை, பாதுகாப்பு கூட்டாண்மை, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இந்தோ-பசிபிக் கடல்சார் பாதுகாப்பு போன்ற முக்கிய பிரச்சினைகளில் G7 உடன் இந்தியா முக்கியமான பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. காலிஸ்தானி பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மரணம் தொடர்பாக இந்தியா மீதான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து கனடாவுடன் மட்டுமே இந்தியாவின் உறவில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த மோதல்.. இரு நாடுகளுக்கும் இடையிலான மாணவர் குடியேற்றம் மற்றும் வர்த்தகத்தை பாதித்துள்ளது. ஆனாலும் மற்ற G7 நாடுகளுடன் இந்தியா நெருக்கமான நட்பை கடைப்பிடித்து வருகிறது. அக்டோபர் 7, 2023 இல் தொடங்கிய காசா மோதல் போன்ற உலகளாவிய மோதல்களை இந்தியா கவனமாகவும் சமநிலையாகவும் கையாள்வது அதன் இராஜதந்திரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.
இரு தரப்பிலும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுப்பதன் மூலமும் இந்தியா இந்த விவகாரத்தில் முக்கியமான சமாதான தூதுவராக உருவெடுத்து உள்ளது. இந்த இரட்டை அணுகுமுறை நுட்பமான சர்வதேச உறவுகளைக் கையாள்வதில் இந்தியாவின் திறமையை எடுத்துக்காட்டுகிறது. சுருக்கமாக, BRICS, 2024 இல் இந்தியாவின் தலைமை, அதன் தனித்துவமான சர்வதேச அரசியல் கொள்கைகளை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இது சீனா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் உறவை பேணவும்.. அதே நேரத்தில் கனடாவைத் தவிர G7 நாடுகளுடன் வலுவான உறவுகளைத் தொடர்ந்து பராமரிக்கவும் வழிவகுக்கிறது. சர்வதேச அரசியலில் இந்தியாவை முக்கிய இடத்திற்கு உயர்த்தும் நிகழ்வாக இந்த மாநாடு அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications