தமிழ்நாட்டை சேர்ந்த 31 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.. ஒடிசா விபத்து: ரயில்வே எஸ்பி ஷாக் தகவல்!
சென்னை: கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களில் 101 பயணிகள் பாதுகாப்பாக உள்ளனர். 31 பேரின் நிலைமை என்ன என்று தெரியவில்லை என்று ரயில்வே எஸ்.பி பொன்ராம் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே விபத்தில் சிக்கி தடம்புரண்டதில், இந்த ரயிலில் பயணித்த 288 பயணிகள் உயிரிழந்துள்ளனர். 900க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

யஷ்வந்த்பூர் - ஹவுரா எக்ஸ்பிரஸ், கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என மூன்று ரயில்கள் மோதி பல பெட்டிகள் தடம்புரண்டதால், உயிரிழப்பு எண்ணிக்கை கடுமையாக அதிகரித்தது. பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று ஏறி நசுங்கியதால், மீட்புப் பணிகளும் அதிக நேரமெடுத்தன.
மீட்டு வர ஏற்பாடுகள்: ஒடிசா ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு பயணிகளுக்கு உதவுவதற்காக புறப்பட்ட தமிழ்நாடுஅரசின் குழு ஒடிசா சென்றடைந்தது. ஒடிசா ரயில் விபத்தில் காயமடைந்த மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் ஒடிசா மாநிலம் செல்ல இன்றிரவு 7.25 மணிக்கு சிறப்பு ரயில் புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, ஒடிசா ரயில் விபத்தில் மீட்கப்பட்டவர்கள் மற்றும் சிறு காயம் அடைந்தவர்கள் புவனேஸ்வரில் இருந்து சென்னை நோக்கி சிறப்பு ரயிலில் புறப்பட்டுள்ளனர். படுகாயம் அடைந்த 55 பேர் சிறப்பு விமானம் மூலம் இன்று சென்னை அழைத்துவரப்பட உள்ளனர்.
ரயில்வே எஸ்பி பேட்டி: இந்நிலையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே எஸ்.பி பொன்ராம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், "சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையில் காவல்துறை சார்பில் ஒரு டிஎஸ்பி, ரயில்வே பாதுகாப்புப் படை சார்பில் ஒரு டிஎஸ்பி, மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் 24 மணி நேரம் பணியாற்றி வருகின்றனர்.
இதுவரை 4 பேர் பாதிக்கப்பட்ட தங்களின் உறவினர்கள் தொடர்பான தகவலை, கட்டுப்பாட்டு அறையில் கேட்டுள்ளனர். அவர்களுக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 132 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் முன்பதிவு செய்து பயணித்துள்ளனர். 132 பேரில், 101 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் மீதமுள்ள 31 பேரின் நிலை என்னவென்றே தெரியவில்லை.

31 பேரின் நிலை தெரியவில்லை: 200 காவல்துறையினர் மற்றும் 20 கமாண்டோக்கள் கொண்ட ஒரு படையினர் சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் உள்ளனர். விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களில் 250 பேர் நாளை காலை சென்னை வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 120 பேரின் எண்களை தொடர்பு கொண்டு தகவல் சேரித்துள்ளோம்.
விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் 800-க்கும் மேற்பட்டவர்கள் முன்பதிவு செய்துள்ளனர். ஆனால் இந்த ரயில்களில் முன்பதிவு செய்யாத பெட்டிகள் தான் எப்போதும் அதிகமான பயணிகள் கூட்டம் இருக்கும். 5 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இருக்கலாம். இதில் அளவுக்கு அதிகமாக பயணிகள் பயணம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications