மழைநீர் வடிகால் ப்ளானே சுத்த சொதப்பல்; வடசென்னைக்கு ஆபத்து? பொறியாளர் தந்த எச்சரிக்கை

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் டிசம்பர் மாத மழைக்கு வடசென்னை மூழ்குவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்ற ஒரு அதிர்ச்சியான தகவலை முன்னாள் பொதுப்பணித்துறை பொறியாளர் கூறியிருக்கிறார். மேலும் வடசென்னை வெள்ளத்தில் மூழ்குவதற்கான உண்மை காரணம் என்ன என்பதையும் அவர் விளக்கி இருக்கிறார்.

கடந்த 2015 சென்னை மழை வெள்ளத்தால் மூழ்கியது. அடுத்து சில ஆண்டுகள் கழித்து ஆட்சிக்கு வந்த திமுக 'இனிமேல் சென்னை மழை வெள்ளத்தில் மூழ்காது. அதற்கு நாங்கள் கியாரண்டி’ என்று சவால் விடுத்தது. ஆனால், நிலைமை என்ன? 2023 இல் மாபெரும் வெள்ளம். 60% வடிகால் படிகள் முடிக்கப்பட்டுவிட்டன என்று சொல்ல திமுக அமைச்சர்கள் சிலர் மழை வெள்ளத்திற்குப் பிறகு அப்படியே அந்தர் பல்டி அடித்தனர்.

Chennai floods North madras

அதன்பின்னர் மிகப்பெரிய சர்ச்சையாக இந்தப் பிரச்சினை உருவெடுத்த பின்னர் 2015ல் 14 மணி நேரத்தில் 20 செ.மீ. மழை பெய்தது. ஆனால் 2023இல் மிக்ஜாம் புயல் காரணமாகப் பேய் மழை பெய்தது. அதனால் டிசம்பர் 4 ஆம் தேதி 23 செ.மீ. மழை பெய்தது. இந்த இரண்டிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்று திமுக அரசு நிர்வாகத்தினர் பேசி சமாளித்தனர். இப்போது 2024இல் இருக்கிறோம். ஆனால், அமைச்சர்கள் கடந்த ஆண்டு சொன்னதைப் போல 60% வடிகால் பணிகள் இன்னும் முழுமையாக முடிக்கப்பட்டு விட்டனவா? என்பதற்கு உத்தரவாதம் இல்லை. தாம்பரம் மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட உடன் பல பகுதிகளில் பாதாள சாக்கடைப் பணிகளுக்காக மாபெரும் பள்ளங்கள் தோண்டப்பட்டு அப்படியே கிடக்கின்றன. பல்லாவரம் டூ குன்றத்தூர் சாலை முழுதாக முடங்கிவிட்டது. பேருந்துகள் அந்தச் சாலை வழியே இயக்கப்படுவது நிறுத்தப்பட்டும் விட்டன.

இந்நிலையில் டிசம்பர் மழைக் காலம் தொடங்கிவிட்டது. மக்கள் மீண்டும் சென்னை மூழ்கிவிடுமோ அன்று அடிவயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு பதறி வருகின்றனர். இந்தச் சிக்கல்கள் குறித்து சென்னை பொதுப்பணித்துறை முன்னாள் பொறியாளர் திருநாவுக்கரசு விரிவான விளக்கங்களை அளித்துள்ளார். அவர் சென்னையில் வெள்ள வருமா என்பது பற்றி, "கடந்த மழையின் போது மழைநீர் வடிகால் பணிகள் எங்கே எல்லாம் முழுமையாக நடந்து முடிந்திருந்ததோ, அந்தப் பகுதிகளில் எல்லாம் வெள்ளம் வரவில்லை. மிக இயல்பாக மழை நின்றவுடன் வெள்ளம் வடிந்துவிட்டது. அதற்கு எங்கள் பகுதியே ஒரு உதாரணம். ஆனால், அதில் இப்போது என்ன சிக்கல் வந்துவிட்டது என்றால் மடிப்பாக்கம் பகுதியில், மழைநீர் வடிகால் பணிகள் முடிந்த உடனேயே அடுத்து பாதாள சாக்கடை திட்டத்தைக் கொண்டுவந்து விட்டார்கள். பல சாலைகளில் குழி தோண்டி போட்டுவிட்டார்கள். எங்கே பார்த்தாலும் ஜேசிபி கனரக வாகனங்கள் நின்று வேலை செய்து கொண்டுள்ளன.

இன்னொரு பக்கம் மெட்ரோ பணிகளுக்காகத் தோண்டப்பட்ட பள்ளங்கள் இருக்கின்றன. அங்கே பணிகள் இன்னும் முடிவடையாததால், அங்கே எல்லாம் மழை வெள்ளம் தேங்குவதற்கான வாய்ப்புகள் கட்டாயம் இருக்கின்றன. சென்னை மாநகராட்சி நிர்வாக துறையில் பணியாற்றி வரும் பொறியாளர் காந்திமதிநாதன் கூட ஒரு பேட்டியில் சில இடங்களில் பெயர்களைக் குறிப்பிட்டு அங்கே எல்லாம் வெள்ளம் வர வாய்ப்பு இருக்கிறது என்றே சொல்லி இருக்கிறார். இதற்கு மாறாக 'எப்படிப்பட்ட மழை வந்தாலும் சமாளிப்போம்’ என்று முதல்வர் ஸ்டாலின் சொல்லி இருக்கிறார். நிலைமை இப்படி இருக்கும் போது எப்படிச் சமாளிப்பார்கள்? ஏதோ சில அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் அவர் அந்தக் கருத்தைக் கூறி இருக்கலாம். சென்னையின் கள யதார்த்தம் அப்படி இல்லை. பல சாலைகளில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அந்தப் பணிகள் முடிக்கப்படாமலேயே இழுத்துக் கொண்டிருக்கின்றன என்பதே உண்மை.

இதுதவிர, மழைநீர் வடிகால் பணிகள் எப்படி அமைக்கப்பட வேண்டும் என்பதற்காக மாதிரி வரைபடத்தைச் சென்னை மாநகராட்சிதான் உருவாக்க வேண்டும். கடந்த முறை தங்களது வடிவமைப்பின் வரைபடத்தை மெட்ராஸ் ஐஐடியே சரிபார்த்து ஒப்புதல் அளித்துள்ளது என்கிறார்கள். ஆனால், என் அனுபவத்தை வைத்துச் சொல்கிறேன், மாநகராட்சியின் வரைபட வடிவமைப்பில் பல குளறுபடிகள் இருக்கின்றன. ஏனென்றால், ஒட்டுமொத்தமாக பொதுவாக ஒரு 5 அல்லது 6 மாதிரிகளை அடிப்படையாகக் கொண்டு சாலைகளில் வடிகால் அமைப்பைக் கட்டுகிறார்கள். சாலையின் போக்கு எப்படி உள்ளது என ஆராய்ந்து அதற்கு ஏற்ப மாதிரி வரைபடம் தயாரிக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு பொத்தாம் பொதுவாக சில மாதிரியை வைத்துக் கட்டப்படும் வடிகால் அமைப்பு பொருத்தமாக இருக்குமா என்பது புரியவில்லை.

வெள்ளத் தடுப்பு பணிகளைச் சரியாகச் செய்வதற்காகத்தான் முன்னாள் ஐஏஏஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்தக் குழு அரசுக்குப் பரிந்துரைகளைக் கொடுத்தது. அதில் உள்ளே சொல்லப்பட்ட திட்டங்கள் என்ன? அவை முழுமையாக நிறைவேற்றப்பட்டுவிட்டதா? எதற்கும் தெளிவான விளக்கம் இல்லை.

ரெட்ஹில்ஸ் சிறு படிகை எடுத்துக் கொள்வோம். இதில் 200க்கும் மேற்பட்ட ஏரிகள் இருக்கின்றன. இவை அனைத்தும் சங்கிலித் தொடர் போல உள்ள ஏரிகள். அயனம்பாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், மாதவரம் ஆகிய பகுதிகளில் வரிசையாக வருகின்றன. இந்தச் சங்கிலித் தொடர் அறுந்து போய்விட்டது. காரணம், ஆக்கிரமிப்பு. வியாசர்பாடி ஏரியில் மட்டும் 27 சங்கிலித் தொடர் ஏரிகள் இருந்தன. இதன் நடுவே ஒரு கல்லூரியே கட்டப்பட்டுள்ளது. இந்த ஏரி பகுதிகளில் ஏரி நீர் வெளியேறும் அளவுக்கு வடிகால் அமைக்கப்பட வேண்டும். ஆனால், சாதாரண மழைநீர் வடிகால் அமைத்தால் அதன் கொள்ளளவு போதாது. வெள்ளம் வரத்தான் செய்யும். வடசென்னை மழை வெள்ளத்தில் மூழ்குவதற்கு முக்கியக் காரணமே ரெட் ஹில்ஸ் ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகள் முறையாக அகற்றப்படாததுதான்.

பெரம்பூரில் பெரிய ஏரி, சித்தேரி என இரண்டு இருந்தது. இப்போது அந்த ஏரிகள் எங்கே இருக்கின்றன என்பது மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியுமா? மேடவாக்கத்தில் டேங் ரோடு என்று இருக்கிறது சரி, ஆனால் டேங் எங்கே? இதை எல்லாம் சரி செய்யாமல் வெறுமனே ஒட்டு மொத்த சென்னைக்கும் 5 மாதிரி வடிகால் வடிவமைப்பு வரைபடங்களை வைத்துக் கொண்டு திட்டங்களை நிறைவேற்றினால், இந்த தலைமுறையில் அல்ல அடுத்த தலைமுறையிலும் இந்தப் பிரச்சினைகளை தீர்க்கவே முடியாது" என்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+