தமிழகம் முழுவதும் ஸ்டிரைக் தொடங்கியது! மதுரை, திருச்சியிலிருந்து மக்கள் சென்னை திரும்புவதில் சிக்கல்
சென்னை: போக்குவரத்து தொழிலாளர்கள் 8 ஆண்டுக்கால கோரிக்கைகளை முன்வைத்து நாளை மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, இன்று இரவு முதல் தென் மாவட்டங்களில் பேருந்து இயக்கம் பாதியாக குறைந்திருக்கிறது. இதனால் பயணிகள் சென்னை திரும்புவதில் சிக்கல் எழுந்திருக்கிறது.
வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறுகையில், "போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் 1,30,000 தொழிலாளர்களுக்கு கடந்த 01.09.2023 அன்று முதல் வழங்க வேண்டிய ஊதிய உயர்வுக்கான பேச்சுவார்த்தையை இதுவரை தமிழ்நாடு அரசு தொடங்கவில்லை.

மேலும், கடந்த 2015 ஆண்டு முதல் நிறுத்தப்பட்டுள்ள 90,000 ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியும் இதுவரை அரசால் வழங்கப்படவில்லை. இதர அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதுபோல் போக்குவரத்து ஊழியர்களுக்கு முறையான மருத்துவக் காப்பீடும் வழங்கப்படவில்லை என்பதோடு, பணியின்போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி நியமனம் வழங்கப்படுவதும் அண்மைக்காலமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களும் நிரப்பப்படாததோடு, பேருந்து சேவைகளின் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. மேலும், மகளிருக்கான இலவசப் பேருந்து சேவையால் போக்குவரத்துக் கழகத்திற்கு ஏற்படும் நட்டத்தையும் தமிழ்நாடு அரசு ஈடுசெய்வதில்லை. போக்குவரத்து தொழிலாளர்களின் வருங்கால வைப்புநிதியும் அரசால் செலவிடப்பட்டுள்ளது.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்டு நிலுவையிலுள்ள அகவிலைப்படி உயர்வைக் கணக்கிட்டு முழுமையாக வழங்குவோம், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துவோம் என்றெல்லாம் திமுக தேர்தல் வாக்குறுதிகளை வழங்கியிருந்தது. ஆனால் ஆட்சிப்பொறுப்புக்கு வந்த பின்னர் இவை நிறைவேற்றப்படவில்லை. இப்படியாக 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நாங்கள் வேலை நிறுத்தத்தை அறிவித்திருக்கிறோம்" என்று கூறியுள்ளனர்.
இந்த வேலை நிறுத்த அறிவிப்பையடுத்து பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இறுதியாக இன்று சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் தொழிலாளர் நலத்துறையினருடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் இது தோல்வியில் முடிந்திருக்கிறது. எனவே வேலை நிறுத்த போராட்டத்தை உறுதியாக தொடர்வோம் என்று தொழிற்சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது தென் மாவட்டங்களிலிருந்து பயணிகள் சென்னை திரும்புவதில் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது. மதுரை, திருச்சி பேருந்து நிலையங்களிலிருந்து சென்னைக்கு வரும் பேருந்துகள் ஒன்றிரண்டு மட்டுமே இயக்கப்படுகின்றன, அதுவும் SETC பேருந்துகள் மட்டுமே இயக்கப்படுகின்றன. மற்ற பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளின் இயக்கம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருக்கிறது. மட்டுமல்லாது குமரி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் பேருந்துகள் இன்னும் மதுரை வந்து சேரவில்லை என்று சொல்லப்படுகிறது.
திருச்சியை பொறுத்த அளவில், மத்திய பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூர், திருப்பதி, கன்னியாகுமரி, கோவை என பல்வேறு பகுதிகளுக்கு 93 SETC பேருந்துகள் இயக்கப்படும். ஆனால் இதில் எந்த பேருந்தும் இயக்கப்படவில்லை என்று பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர். சென்னைக்கு ஒன்றிரண்டு பேருந்துகள் மட்டும் புறப்பட்டிருக்கின்றன.
கொங்கு பகுதிகளான சேலம் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் பாதி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகள் இந்த மாவட்டங்களில் அதிக அளவு இருந்தாலும், பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டிருக்கின்றனர்.
முன்னதாக, "நள்ளிரவு 12 மணிக்கு மேல் எந்த பேருந்துகளும் ஓடாது, நீண்டதூரம் செல்லும் பேருந்துகள் நாளை காலை சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சென்று பயணிகளை இறக்கி விட்ட பின் நிறுத்தி வைக்கப்படும்" என்று என போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் கூறியிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications