மகளிர் நல திட்டங்கள், கடன் உதவிகள், நல திட்ட உதவிகள்.. தமிழக அரசு வெளியிட்ட குட்நியூஸ்
சென்னை: மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள், நலத்திட்டங்கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டுதல்களை பெறவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் புகார்கள் தெரிவிக்கவும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழக அரசின் சார்பில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின்கீழ் தமிழ்நாடு ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்ககங்கள் மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் பல்வேறு நலத்திட்டங்கள் மகளிருக்காக செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் பால்வள மையம், மாதவிடாய் சுகாதார மேலாண்மை மன்றங்கள், அறிவுசார் மையங்கள் மூலம் அளிக்கப்படும் பயிற்சிகள், சமுதாய பண்ணைப் பள்ளிகள், சமுதாய திறன் பள்ளிகள் மூலம் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

அதேபோல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்படும் கடனுதவிகள், நகர்ப்புற இளைஞர்களுக்காக மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின்கீழ் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் பயிற்சி திட்டம், வேலைவாய்ப்பு முகாம்கள், இளைஞர் திறன் விழாக்கள் போன்றவையும் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் மகளிர் வாழ்வாதாரம் தொடர்பான வாய்ப்புகள், நலத்திட்டங்கள், நல உதவிகள் குறித்த வழிகாட்டுதல்களை பெறவும், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் மற்றும் புகார்களை தெரிவிக்கவும் வாழ்வாதார உதவி அழைப்பு எண் அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி பொது அலுவலக வேலை நாட்களில் காலை 9.30 முதல் மாலை 6.30 மணி வரையில் 155330 என்ற எண்ணை தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளலாம்." இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழக அரசு வெளியிட்டுள்ள மற்றொரு அறிவிப்பில், "தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சி வழங்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. மகளிர் சுய உதவிக் குழுவினர்களுக்கு நிதி கல்வியறிவை மேம்படுத்துதல், வங்கி சேமிப்பு கணக்கை தொடங்குதல், வங்கி கடன் பெறுவதற்கான வழிவகைகள், காப்பீடு, ஓய்வூதிய சேவைகள் போன்ற நிதி சேவைகளை வழங்குவதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மூலம் நிதிசார் கல்வி திட்டம் தொடங்கப்பட்டது. நிதிசார் கல்வியானது மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களுக்கும், ஏழை மற்றும் பாதிக்கப்படக் கூடிய நிலையில் உள்ள குடும்பத்தினருக்கும் நிதி சார்ந்த விழிப்புணர்வை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
நிதிசார் திறனை வளர்ப்பது, திட்ட மானியங்கள், வட்டி மானியம், வங்கி கடன் என பல்வேறு நிதி சேவைகளை சுய உதவிக் குழு உறுப்பினர்கள் எளிதில் அணுகுவதற்கு இத்திட்டம் வழிவகை செய்கிறது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் நிதி சார்ந்த விழிப்புணர்வை பெறும் வகையில் 11.48 லட்சம் மகளிருக்கு நிதிசார் கல்வி குறித்த பயிற்சிகளை வழங்க ரூ.4.50 கோடி நிதியை தமிழக அரசு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி இதுவரை மொத்தம் 2.33 லட்சம் சுய உதவிக் குழு மகளிருக்கு நிதிசார் கல்வி பயிற்சிகள் அளிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள மகளிருக்கும் வரும் டிச.31-ம் தேதிக்குள் பயிற்சிகளை நிறைவு செய்யுமாறு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். அதற்கான பணிகள் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன"இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications