10 டிகிரி வரை அதிகரிக்கும் வெயில் தாக்கம்.. வடமாவட்டங்களுக்கு குட் நியூஸ்..சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை: தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த சில நாட்களில் வழக்கத்தைவிட 10 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை உயர வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் கோடைக் காலம் தொடங்குவதற்கு முன்னரே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதன் மாநிலம் முழுவதும் உள்ள மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர்.

அதிலும் கோடை காலம் தொடங்கிய மாநிலத்தில் பெரும்பாலான இடங்களில் வெளியின் தாக்கம் சதமடித்துள்ளது. நேற்று சென்னை, மதுரை, திருச்சி, சேலம், கோவை என பல மாவட்டங்களிலும் வெயிலின் தாக்கம் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 108.68 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
வரும் நாட்களில் மாநிலத்தின் பல மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருப்பத்தூர், வேலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலையானது 7 முதல் 10 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும் என்று கூறப்பட்டுள்ளது.
மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் அப்போது பொதுமக்கள் தேவையின்றி வெளியே செல்வதைத் தவிர்க்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல வளிமண்டலத்தில் நிலவும் சுழற்சி காரணமாக வட தமிழக மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரம் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் அதிகபட்சமாக வெப்ப நிலை 100 டிகிரி ஃபாரன்ஹீட் வரை செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications