கிரீன் சிக்னல் தந்த மோடி.. சூடுபிடிக்கும் சென்னை மெட்ரோ ரயில்.. மத்திய அரசு அனுப்பிய ரூ.3000 கோடி
சென்னை: நடப்பு நிதியாண்டில் சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்காக மத்திய அரசு ₹3,000 கோடி நிதியை விடுவித்துள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) மூலம் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை மெட்ரோ நிதி
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் ஜூலை 28 வரை இந்த நிதியை விநியோகித்துள்ளது. இந்த ஆண்டு சென்னை திட்டத்திற்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த நிதி ₹8,445 கோடி ஆகும். விடுவிக்கப்பட்ட நிதியில், ₹1,841.2 கோடி முழு பங்கு முதலீடாகவும், ₹158.8 கோடி துணைக்கடனாகவும், மேலும் வெளிநாட்டுக் கடன்கள் மூலம் பெறப்பட்ட ₹1,000 கோடி நிதி உதவிக்கான தொகையாகவும் உள்ளதாக அமைச்சகம் RTI ஆர்வலர் தயானந்த் கிருஷ்ணனுக்கு அளித்த பதிலில் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டம்
சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத் திட்டம் 118.9 கி.மீ. தூரத்திற்கு மூன்று வழித்தடங்களில் அமையவுள்ளது. இது இந்தியாவின் மிகப்பெரிய மெட்ரோ உள்கட்டமைப்பு திட்டங்களில் ஒன்றாகும். பல வருட தாமதங்களுக்குப் பிறகு, இத்திட்டம் அக்டோபர் 2024-ல் மத்திய துறை திட்டமாக அங்கீகரிக்கப்பட்டது. இது நிதி மாதிரியை மாற்றியமைத்து, மத்திய அரசின் ஆதரவை விரைவுபடுத்தியுள்ளது.
மெட்ரோ பணிகள் தீவிரம்
இன்னொரு பக்கம் பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன.,43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன.
ஒரு வருடத்தில் திட்டம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டிபிஆரில் மெட்ரோவின் சரியான நீளம், நிலையங்களின் எண்ணிக்கை, நடைபாதையின் வகை (நிலத்தடி/உயர்த்தப்பட்ட/அட்-கிரேடு), ரயிலின் வகை மற்றும் மொத்த செலவு போன்ற விவரங்கள் இருக்கும்.
அதன்பின் இதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. பரந்தூரில் மொத்தம் 2 மெட்ரோ நிலையங்கள் வர உள்ளன. உள்ளூர் விமான நிலைய பகுதிக்கு அருகே ஒரு ஸ்டேஷன், சர்வதேச விமான நிலையத்திற்கு அருகே ஒரு ஸ்டேஷன் என்று இரண்டு ஸ்டேஷன்கள் வர உள்ளன.
பூந்தமல்லியில் இருந்து திருமழிசை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் வரை பெருந்திரள் மக்கள் பயன்பாட்டிற்கான துரித போக்குவரத்து அமைப்பை (MRTS) பரிந்துரைப்பதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கையின் (DFR) முன்மொழியப்பட்ட முக்கிய அம்சங்கள் பின்வருமாறு.
1. வழித்தடத்தின் மொத்த நீளம்: 43.63 கி.மீ
2. பெருந்திரள் துரித போக்குவரத்திற்கான நிலையங்கள்: 19 (தோராயமாக)
3. மதிப்பிடப்பட்ட நிறைவு செலவு: ரூ 10,712 கோடி (தோராயமாக)
சென்னை மெட்ரோ ரயில் கட்டம் II
சமீபத்தில்தான் இந்தியாவின் முதல் 33.33 மீ நீளமுள்ள U-கர்டர் சென்னை மெட்ரோ இரயில் கட்டம் II-ல் வழித்தடம் 5-ல் ராமாபுரத்தில் நிறுவப்பட்டது. இது இந்திய மெட்ரோ கட்டுமானத்தில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க பொறியியல் சாதனை ஆகும் மற்றும் இந்திய உள்கட்டமைப்பில் ஒரு முக்கிய நிகழ்வு ஆகும். சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம், பொது ஆலோசகர்கள், AEON மற்றும் கட்டுமான ஒப்பந்ததாரர் L&T உடன் இணைந்து நாட்டின் முதல் 33.33 மீட்டர் நீளமுள்ள U-கர்டரை வெற்றிகரமாக நிறுவியுள்ளது. சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் இந்த மைல்கல் பொறியியல் சாதனை, இந்திய மெட்ரோ இரயில் திட்டங்களின் வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.
225 மெட்ரிக் டன் எடையுடன் உருவாக்கப்பட்ட இந்த U-கர்டர், ஒரு முக்கியமான பொறியியல் சாதனையாகவும் மற்றும் கட்டுமான குழுவின் தொழில்நுட்ப திறன், புதுமை மற்றும் செயல்படுத்தும் திறன்களுக்கு ஒரு முக்கிய சான்றாகவும் உள்ளது.
பொதுவாக போக்குவரத்து சந்திப்புகள் மற்றும் U-டர்ன் பகுதிகளில், எதிர்கால போக்குவரத்து தேவைகளை கருத்தில் கொண்டு நீளமான ஸ்டீல் கர்டரை பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், L&T தலைமை அலுவலகம் முன்பு அமைந்துள்ள இந்த இடத்தில், ஸ்டீலுக்கு பதிலாக நீளமான U-கர்டரை பயன்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், இந்திய மெட்ரோக்களில் இதுவே மிகவும் நீளமான U-கர்டர் ஆகும். மேலும், இது அழகியல் ரீதியாகவும் சிறப்பாக அமைந்துள்ளது . இந்த முயற்சியின் முக்கிய சவால்கள் U-கர்டர்க்காண அச்சுகள் வடிவமைத்தல், அவை பாதுகாப்பாக கொண்டு செல்லுதல் மற்றும் துல்லியமாக நிறுவுவது ஆகியவையாகும்.












Click it and Unblock the Notifications