இந்திராவின் கொடுமை.. லாக்அப் அட்டாக்! ஸ்டாலினுக்காக சிட்டிபாபு செய்த உயிர்த்தியாகம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 1976-ம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தின் ஒரு நள்ளிரவு நேரம். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எதிரே அமைந்திருந்த சென்னை மத்திய சிறையின் ஒன்பதாவது பிளாக் காரிருளில் மூழ்கியிருந்தது. வெளியில் அவசரநிலைப் பிரகடனத்தின் கீழ் கொடூரமான மிசா கைது நடவடிக்கைகள் உச்சக்கட்டத்தில் இருந்தன.

ஆனால், சிறையின் அந்த இருட்டறைக்குள் ஒரு துயரமான சரித்திரம் அரங்கேறிக் கொண்டிருந்தது. இரும்பு முனைகள் கொண்ட பூட்ஸ் கால்களும், தடிமனான லத்திகளும் இளம் வயது மு.க. ஸ்டாலினை நோக்கிப் பாய்ந்தபோது, நடுவே தன் உடலையே அரணாக விரித்துப் பாய்ந்தார் ஒரு மனிதர். அவர்தான் சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி. சிட்டிபாபு.

mk stalin dmk

மிசா சட்டம்: என்ன நடந்தது அன்று?

1971-ல் பிரதமர் இந்திரா காந்தி அரசால் கொண்டுவரப்பட்ட 'உள்நாட்டுப் பாதுகாப்புப் பராமரிப்புச் சட்டம்' (MISA - Maintenance of Internal Security Act), 1975 ஜூன் 25-ல் அறிவிக்கப்பட்ட எமர்ஜென்சி காலத்தில் எதிர்க்கட்சிகளை ஒடுக்கப் பயன்படுத்தப்பட்டது.

மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்படும் ஒருவருக்கு எந்த உரிமையும் கிடையாது.

ஏன் கைது செய்யப்படுகிறார் என்கிற காரணத்தை அரசு சொல்ல வேண்டியதில்லை.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவோ, வழக்கறிஞரை வைத்து வாதாடவோ அனுமதி இல்லை.
ஜாமீன் கிடையாது; எத்தனை மாதங்கள் வேண்டுமானாலும் சிறையிலேயே அடைத்து வைக்க முடியும்.

ஜனநாயகத்தைக் காப்பதாகக் கூறி இந்த எமர்ஜென்சியை அப்போதைய தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான திமுக அரசு கடுமையாக எதிர்த்தது. இதன் விளைவாக, 1976 ஜனவரி 31 அன்று கருணாநிதியின் ஆட்சி அதிரடியாகக் கலைக்கப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு முழுவதும் திமுக தலைவர்களைக் குறிவைத்து நள்ளிரவு வேட்டை தொடங்கியது.

கோபாலபுரத்தில் நுழைந்த போலீஸும் சரணடைந்த ஸ்டாலினும்

ஆட்சி கலைக்கப்பட்ட அன்றைய தினமே சென்னை கோபாலபுரத்தில் இருந்த கருணாநிதியின் இல்லத்துக்குள் போலீஸ் அதிகாரிகள் நுழைந்தனர். அவர்களின் நோக்கம் கருணாநிதியை விடவும், அப்போது வெறும் 23 வயதே நிரம்பிய அவரது மகன் மு.க. ஸ்டாலினைக் கைது செய்வதுதான்.

ஆனால் அப்போது ஸ்டாலின் மதுராந்தகத்தில் இளைஞரணி நாடகம் ஒன்றில் நடிப்பதற்காகச் சென்றிருந்தார். "என் மகன் வந்தவுடன் நானே தகவல் தருகிறேன்; அவனே சரணடைவான்" என்று அமைதியாகச் சொன்னார் கருணாநிதி. அடுத்த நாள் பிப்ரவரி 1-ம் தேதி வீடு திரும்பிய ஸ்டாலினிடம், "காவல் துறை உன்னைத் தேடுகிறது, பொதுவாழ்க்கையில் தியாகங்களுக்குத் தயாராக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தினார். தாயார் தயாளு அம்மாளும், மனைவி துர்காவும் கண்ணீர் வடிக்க, குளித்து உடை மாற்றித் தயாரான இளைஞர் ஸ்டாலின், காவல் ஆணையர் அலுவலகம் வழியாகச் சென்னை மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறைக்குள் அரங்கேறிய 'வெல்கம் ரிசப்ஷன்' வன்முறை

அரசியல் கைதிகளுக்கான எந்த அடிப்படை வசதிகளும் மிசாவில் கைதானவர்களுக்குத் தரப்படவில்லை. அவர்களை மனதளவிலும் உடலளவிலும் சிதைக்க வேண்டும் என்ற உத்தரவுடன் சிறை நிர்வாகம் இயங்கியது. வழக்கமாகத் தொழுநோயாளிகள் அடைக்கப்படும் சுகாதாரமற்ற, ரத்தக்கறை படிந்த ஒன்பதாவது பிளாக்கில் திமுக தலைவர்கள் அடைக்கப்பட்டனர். இரண்டு பேர் மட்டுமே தங்கக்கூடிய சிறிய அறையில் ஒன்பது பேர் அடைக்கப்பட்டனர். படுக்கையோ, காற்றோட்டமோ, முறையான கழிப்பறை வசதியோ இல்லாமல் அவர்கள் தவித்தனர்.

அதைவிடக் கொடுமை, புதிய கைதிகள் சிறைக்குள் நுழையும்போது வார்டர்களும் ரவுடிகளும் சேர்ந்து நடத்தும் 'ரிசப்ஷன்' என்கிற தாக்குதல். லத்திகளாலும் பூட்ஸ் கால்களாலும் சரமாரியாக அடித்து உதைப்பார்கள்.

ஸ்டாலின் சிறைக்குள் கொண்டுவரப்பட்டபோது, அந்தத் தாக்குதல் வெறித்தனமாகத் தொடங்கியது. தங்களை விட்டு விலகிச் செல்லுமாறு திமுக தலைவர்களை மிரட்டிய சிறை அதிகாரிகள், இளம் வயது ஸ்டாலின் மீது குறிவைத்துத் தாக்கத் தொடங்கினர். நிலைகுலைந்து தரையில் விழுந்த ஸ்டாலின் மீது பூட்ஸ் கால்கள் பாய்ந்தன.

அவன் கலைஞர் பிள்ளை... அடிக்காதீர்கள்! - குறுக்கே பாய்ந்த மேயர் சிட்டிபாபு

அதே சிறை வளாகத்தில் அடைக்கப்பட்டிருந்தவர் சி. சிட்டிபாபு. 1965-ல் சென்னை மாநகராட்சியின் 29-வது மேயராகப் பணியாற்றி மக்களிடம் நற்பெயர் பெற்றவர்.. அப்போது செங்கல்பட்டு நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினராக இருந்தவர்.

சிறைக் காவலர்கள் இளைஞர் ஸ்டாலினைச் சுற்றி வளைத்துத் தாக்குவதைப் பார்த்த சிட்டிபாபுவால் சும்மா இருக்க முடியவில்லை. தன் உயிரைப் பற்றியோ, தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பற்றியோ அவர் சிந்திக்கவே இல்லை.

"அவன் சின்னப் பையன்... கலைஞர் ஆசையாய் வளர்த்த பிள்ளை... அவனை ஒன்றும் செய்யாதீர்கள்!" என்று அலறியபடி ஓடிவந்து, தரையில் விழுந்து கிடந்த ஸ்டாலின் மீது தன் உடலை முழுமையாகப் படரவிட்டு ஒரு மனிதக் கேடயமாகப் படுத்துக்கொண்டார்.

வெறிபிடித்த வார்டர்கள் அடிப்பதை நிறுத்தவில்லை. ஸ்டாலினை நோக்கி வீசப்பட்ட ஒவ்வொரு முரட்டு லத்தி அடியும், இரும்பு முனைகள் கொண்ட பூட்ஸ் கால்களின் உதைகளும் சிட்டிபாபுவின் முதுகு, தலை, நெஞ்சு மற்றும் விலா எலும்புகளில் ஆழமாக இறங்கின. ரத்தம் வழிய வழிய, எலும்புகள் நொறுங்கும் சத்தம் கேட்டபோதும் சிட்டிபாபு தன் பிடியை விடவில்லை; ஸ்டாலினைக் காப்பாற்றுவதிலேயே உறுதியாக இருந்தார்.

அந்தத் தாக்குதலில் ஸ்டாலினுக்கு வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டுத் தழும்பு உருவானது. ஆனால் சிட்டிபாபு தனது உடம்பையே கொடுத்ததன் காரணமாகவே ஸ்டாலின் உயிர்பிழைத்தார்.

டைரிக் குறிப்புகளும்... சிட்டிபாபுவின் இறுதி மூச்சும்

சிறையில் தொடர்ந்து நடத்தப்பட்ட தாக்குதல்களால் சிட்டிபாபுவின் நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலின் உட்புற உறுப்புகள் மிக மோசமாகச் சேதமடைந்தன. கடுமையான நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், தொடர் இருமலால் அவர் துடித்தார். ஆனாலும், சிறை நிர்வாகம் அவருக்குத் தகுந்த மருத்துவ வசதியைத் தராமல் காலந்தாழ்த்தியது.

அந்த நரக வேதனையிலும், தனக்குக் கிடைத்த காகிதங்களில் சிறைக் கொடுமைகளையும், ஸ்டாலின் தாக்கப்பட்ட விதத்தையும் சிட்டிபாபு ரகசியமாக டைரியில் எழுதி வைத்தார். பிற்காலத்தில் அது சிட்டிபாபுவின் சிறைக் குறிப்புகள் என்ற வரலாற்றுப் புத்தகமாக வெளியாகி, அவசரநிலைக் காலத்தின் அத்துமீறல்களை உலகிற்கு அம்பலப்படுத்தியது.

மாதங்கள் நகர நகர சிட்டிபாபுவின் உடல்நிலை கைமீறிப் போனது. அவர் உயிர் பிழைக்க மாட்டார் என்ற நிலை வந்தபோதுதான், அவரைச் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி, 1977 ஜனவரி முதல் வாரத்தில் சிட்டிபாபு தன் 41-வது வயதில் சிறைத் தியாகியாகவே உயிர்நீத்தார்.

ஸ்டாலினின் பொதுவாழ்க்கையை மாற்றிய திருப்புமுனை

சென்னை மத்திய சிறையில் கழித்த அந்த ஓர் ஆண்டு காலம் மு.க. ஸ்டாலினின் ஒட்டுமொத்த அரசியல் பயணத்தையும் மாற்றியமைத்தது. "சிறைச்சாலை எனக்குப் பயத்தைத் தரவில்லை; எதையும் தாங்கும் மன உறுதியைத்தான் தந்தது" என்று தனது 'உங்களில் ஒருவன்' சுயசரிதையில் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சக தோழன் தன் உயிரைக் கொடுத்துத் தன்னைக் காப்பாற்றிய அந்த நன்றியுணர்வு, ஸ்டாலினுக்குத் தீவிர மக்கள் பணிக்கான உத்வேகத்தைக் கொடுத்தது. "என் கையில் இருக்கும் இந்த மிசா தழும்பு சாதாரண அடையாளமல்ல; சிட்டிபாபுவின் தியாகத்தை எனக்கு தினமும் நினைவூட்டும் அடையாளம்" எனப் பிற்காலத்தில் ஸ்டாலின் உருக்கமாகக் குறிப்பிட்டார்.

அரசியல் மேடைகளில் மிசா குறித்த விவாதங்கள் எழும்போதெல்லாம், ஒரு இளைஞனைக் காக்கத் தன் உடலையே கேடயமாக்கி உயிர்விட்ட மேயர் சிட்டிபாபுவின் தியாகம் தமிழக அரசியல் வரலாற்றில் காலத்தால் அழியாத பக்கமாக நிலைத்து நிற்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+