தியேட்டர்கள் திறந்தும் உரிமையாளர்கள் கவலை தீரவில்லை.. ஆர்வம் காட்டாத ரசிகர்கள்...பயமா? பழைய படமா?
சென்னை: தமிழகத்தில் நான்கு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் திரையரங்குகள் செயல்பட தொடங்கியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். புதுப்படங்கள் ரிலீஸாகததால் ரசிகர்களின் வருகை குறைவாக இருந்ததாக தியேட்டர் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.
கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மூடப்பட்டிருந்தன. படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தன. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகளுக்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது. திரையரங்குகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் திரையரங்க உரிமையாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.
ஓடிடியில் படங்கள் வெளியீடு: திரைப்பட தொழிலை நம்பியிருந்த ஏராளமான ஊழியர்களும் பாதிக்கப்பட்டனர். சினிமா ரசிகர்களும் மிகவும் மன உளைச்சலில் இருந்தனர்.
சூர்யா, ஆர்யா, விஜய் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களின் திரைப்படங்கள் ஓடிடி என்ற இணையதளத்தில் வெளியாகின. ஆனால், தியேட்டர்களுக்கு சென்று படம் பார்ப்பது போல் இல்லாத காரணத்தால் நல்ல படங்கள் வெளிவந்ததும் பொதுமக்களிடையே வரவேற்பை பெறவில்லை.

தியேட்டர்கள் திறப்பு: இந்நிலையில், தமிழக அரசின் சீரிய நடவடிக்கையால் தமிழகத்தில் தற்போது கொரோனா பரவல் குறைந்து வருகிறது. இதையடுத்து, படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று முதல் திரையரங்கங்கள் திறக்கப்பட்டுள்ளன.
ஊழியர்களுக்கு தடுப்பூசி கட்டாயம்: தியேட்டர் ஊழியர்கள் அனைவரும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டிருக்க வேண்டும் என்பது உட்பட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும், 50 சதவீத பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பார்வையாளர்கள் வரவில்லை: ஆனால், நான்கு மாதங்களுக்கு பின்னர் தியேட்டர்கள் திறக்கப்பட்டாலும் எதிர்பார்த்த அளவுக்கு யாரும் படம் பார்க்க வரவில்லை. அனைத்து திரையரங்கங்களிலும் பழைய படங்களே திரையிடப்பட்டுள்ளதால், மக்கள் அதிகம் தியேட்டர்களுக்கு வரவில்லை. பல திரையரங்குகளில பகல்காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
புதுப்படங்கள் திரையிடவில்லை : சென்னை மாநகரின் புறநகர் பகுதிகளில் உள்ள புகழ்பெற்ற தியேட்டர்களில் புதிய படங்கள் எதுவும் திரையிடப்படவில்லை. அங்கும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளனர். இருந்தாலும், வரும் நாட்களில் இந்த நிலைமை சீரடையும் என திரையரங்க உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications