10 மணி நேரமாக நீடித்த சோதனை.. சென்னையில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, அலுவலகத்திற்கு போலீசார் சீல்
சென்னை: சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் இன்று காலை முதல் தேனி போலீசார் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் அவரது வீடு மற்றும் அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்தனர்.
யூடியூப் சேனல்களில் தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை கடுமையாக விமர்சனம் செய்து வந்தவர் சவுக்கு சங்கர். இவர் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பெண் காவலர்கள் குறித்து கூறிய தகவல் சர்ச்சையானது. பெண் காவலர்கள் பற்றி அவதூறு பரப்பும் வகையில் அவரது கருத்து இருந்ததாக எதிர்ப்பு கிளம்பியது.

இது தொடர்பான புகாரில் கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த 4ம் தேதி தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
மேலும் தேனி தனியார் விடுதியில் தங்கியிருந்த சவுக்கு சங்கரை கைது செய்தபோது போலீசார் அவரது காரில் சோதனையிட்டனர்.
அப்போது காரில் 400 கிராம் கஞ்சா சிக்கியது. கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல் சவுக்கு சங்கரின் டிரைவர் மற்றும் உதவியாளர் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களும் கைது செய்யப்பட்டனர்.
அதன்பிறகு சவுக்கு சங்கர் மீது தொடர்ந்து பல்வேறு புகார்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது. பெண் பத்திரிக்கையாளரை அவதூறாக பேசியதாகவும், பெண் போலீசாரை இழிவாக பேசியதாகவும் சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசில் அளிக்கப்பட்ட 2 புகாரின் பேரில் யூடியூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க வேண்டும் எனக்கோரி அவரை கோவை சிறையில் இருந்து அழைத்து வந்த போலீசார் நேற்று இரவு 7 மணிக்கு எழும்பூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். சவுக்கு சங்கர் மீதான புகாரை பரிசீலித்த நீதிபதி, இரு வழக்குகளில் அவரை நீதிமன்ற காவலில் அடைக்க போதுமான காரணங்கள் இல்லை எனக்கூறி போலீசாரின் கோரிக்கையை ஏற்க மறுத்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது, 'இனிமேல் யூ டியூப்பில் தவறான தகவல்களை வெளியிட மாட்டேன்' என சவுக்கு சங்கர் உத்தரவாதம் அளித்தார். இதற்கிடையே, வெள்ளிக்கிழமை காலையில் சென்னை மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தில் தேனி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
சவுக்கு சங்கர் மீது தேனி பழனிசெட்டிப்பட்டி போலீசார் கஞ்சா வழக்குப்பதிவு செய்துள்ள நிலையில் இந்த சோதனை என்பது மேற்கொள்ளளப்பட்டது. 10 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடைபெற்றது. இந்த சோதனையின் போது கஞ்சா சிகரெட்டுகள், லேப்டாப், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்து கொண்டு சென்றனர்.
இதையடுத்து, மதுரவாயலில் உள்ள சவுக்கு சங்கர் வீடு, தி.நகரில் உள்ள அவரது அலுவலகத்தையும் பூட்டி போலீசார் சீல் வைத்தனர். இதற்கிடையே, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பான வழக்கில் சவுக்கு சங்கருக்கு 24 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்ற முதன்மை நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications